Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய பாக்சிங் குயின் மேரி கோமின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது!


   

கஸ்டு மாதம் பிரேசிலின் ரியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஏறக்குறைய தவறவிட்டுவிட்டார், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம். அஸ்தானாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் மேரியின் ஒலிம்பிக் கனவு ஆட்டம் கண்டது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கோம், ரியோவில் பங்கேற்க முடியாதது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
   

மேரி கோம் – ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் ஒரு ரோல் மாடலாகத் திகழ்ந்தவர். 3 குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் தனது பன்ச்களால் எதிராளியைத் திணறடித்தவர். வயதாகிக்கொண்டே போனதால் மேரியின் ஆட்டம் தடுமாறும் எனப் பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 51 கிலோ பிளைவெயிட் பிரிவில் தங்கம் வென்று தான் எப்போதுமே குயின் என்பதை நிரூபித்தார் மேரி. அதனால் ரியோவிலிருந்தும் மேரி பதக்கத்தோடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தோல்வியின் மூலம் மேரியின் ரியோ பயணமே தடைபட்டுப்போனது.
   

கஜகஸ்தானின் ஆஸ்தானா நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் குறைந்தபட்சம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றால் மட்டுமே ரியோ ஒலிம்பிற்குக்குத் தகுதிபெற முடியும், என்ற நிலையில் களமிறங்கினார் கோம். ஆனால் நேற்று நடந்த இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனியின் அசைஸ் நிமானியிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியுற்றார் மேரி கோம். இப்போட்டியில் மேரி நன்றாக விளையாடிய போதும் நடுவர்கள் மேரி தோல்வியுற்றதாக அறிவித்தனர். அம்முடிவானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. “ பல தியாகங்களுக்குப் பிறகு எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தேன். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி தான். அம்முடிவு என்னை மிகவும் பாதித்தது. ஆனாலும் என் கையில் எதுவும் இல்லையே. நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போடு இம்முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். கடவுள் எனக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன்” என்று வருத்தத்தோடு தெரிவித்தார் மேரி. மேரியின் ஒலிம்பிக் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோயிருந்தாலும், இன்னும் ஒரு சிறு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. சீனாவின் ரென் கன்கென் மற்றும் சீன தைபேவின் லின் யு டிங் ஆகியோர் இந்த உலக சாம்பியன் தொடரிலிருந்து ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றால், ஆசியா-ஒசானியா பிரிவு மூலம் மேரி கோம் ஒலிம்பிற்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2012 ஒலிம்பிக்கில் கூட மேரி நேரடியாகத் தகுதி பெறவில்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தன்னை வீழ்த்தியவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற, மேரிக்கு அடித்தது பம்பர் லாட்டரி. ஆனால் இம்முறை மேரி அப்படித் தகுதிபெற வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். லண்டன் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவரான மேரி கோம், அடுத்த ஒலிம்பிக்கில் இல்லை என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
   

2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லைஷ்ரம் சரிதா தேவியும் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து ஒலிம்பிக் வாய்ப்பைத் தவறவிட்டார். இந்தியாவின் இரு முன்னணி குத்துச்சண்டை வீராங்கனைகள் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியிருப்பது மிகவும் சோகமாகும்.
   

கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் வென்ற இந்தியாவால் இம்முறை அதைத்தாண்டி செயல்பட முடியுமா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் ரியோ ஒலிம்பிக்கிற்குத் தேர்வு செய்யப்படாத நிலையில் இப்போது மேரியும் வெளியேறியிருப்பது மேலும் இந்தியாவிற்குப் பின்னடைவு தான். ஆனாலும் கடந்த முறை பதக்கம் வெல்லத் தவறிய ஹீனா சிந்து, தீபிகா குமாரி போன்றோர் சிறப்பாக செயல்படும் நிலையில் மேரியின் இடத்தை நிரப்ப முடியும். ஒலிம்பிக்குத் தகுதி பெறாவிடில் என்ன மேரி எப்போதுமே சாம்பியன் தான். டோன்ட் வொரி மேரி உங்ககிட்ட குத்து வாங்க மக்களவையில ஒரு கூட்டமே காத்திருக்கு!
   

மு.பிரதீப் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close