Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.பி.எல் 9 - கோலி, கம்பீர், ரெய்னா, வார்னர் கோப்பை யாருக்கு?


   

ஐ.பி.எல் தொடரின் ஒன்பதாவது சீசன் தற்போது லீக் சுற்றுகளைத் தாண்டி பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள எட்டு அணிகளில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த குஜராத், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடைசெய்யப்பட்டதால் குஜராத் லயன்ஸ், புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் என இரு புது அணிகள் களமிறங்கின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கேப்டன் கூல் தோனியின் புனே அணி ஏழாம் இடம் பெற்று வெளியேறியது. அதேபோல் நடப்பு சாம்பியன் மும்பையும் பஞ்சாப்பும் ஏற்கெனவே வெளியேறிவிட்டன. ரெய்னா வழிநடத்தும் குஜராத் அணி 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதுவரை நடந்துள்ள 9 சீசன்களிலும் இரண்டாம் சுற்றில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை ரெய்னா பெறுகிறார். யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. ஐ.பி.எல் 9வது சீஸனில் கலக்கிய பலர் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் சீட்டை ரிசர்வ் செய்துள்ளனர்.

இந்நிலையில் மற்ற இரண்டு அணிகளைத் தீர்மானிக்கும் இரண்டு போட்டிகள் நேற்று நடந்தன. சன்ரைசர்ஸை வென்றால் மட்டுமே அடுத்த சுற்று என்ற நிலையில் கொல்கத்தா அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மோதிய கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டது. முதலில் பேட் செய்த டெல்லி அணி பெங்களூரின் அபார பந்துவீச்சால் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை 6 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்து பெங்களூர் அணி ப்ளே ஆப்பிற்கு முன்னேறியது. நாளை நடக்கும் முதல் குவாலிஃபையர் போட்டியில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். அடுத்து நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் 4 அணிகளைப் பற்றி அலசுவோமா… 

குஜராத் லயன்ஸ்
   

ரெய்னா, பிராவோ, மெக்குல்லம், ஸ்மித், ஜடேஜா என சூப்பர் கிங்ஸின் வட இந்திய கிளையாக கூறப்பட்ட‌ குஜராத் அணி சென்னையைப் போலவே முதல் அணியாக பிளே ஆப்பிற்குள் நுழைந்தது. தொடக்கத்தில் சுமாராக விளையாடி வந்த கேப்டன் ரெய்னா, தனக்குக் குழந்தை பிறந்த பிறகு நடந்த இரண்டு போட்டிகளிலும் அரை சதமடித்து அசத்தியுள்ளார். டுவைன் ஸ்மித் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். குல்கர்னியும் பிரவீன் குமாரும் எதிரணியை நிலைகுலைய வைக்கின்றனர். விசித்திர ஸ்பின்னர் சிவில் கௌசிக்கும் அவ்வப்போது விக்கெட்டுகள் வீழ்த்தி வருகிறார். ஆனால் அவ்வணியின் மிகப்பெரிய பிரச்னை அவர்களின் மிடில் ஆர்டர் தான். தினேஷ் கார்த்திக், ஃபின்ச் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். ஜடேஜாவோ பேட்டிங்க் பவுலிங் இரண்டிலும் சொதப்புகிறார். பிராவோவும் பெரிய அளவில் சோபிக்கத் தவறுகிறார். அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் ரெய்னா ஏழாவது முறையாக ஐ.பி.எல் ஃபைனலில் விளையாடலாம். ரெய்னா மட்டும் தான் 9 சீஸனிலும் ப்ளே ஆஃப் சுற்றில் ஆடிய வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.
 
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
   

ஒருகட்டத்தில் கடைசி இடத்தைத் தவிர்க்கப் போராடிய அணி, தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. கோலி என்ற தனி ஒருவனின் தாண்டவத்தால் அமர்க்களப்படுத்தி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ். இதுவரை யாரும் நினைத்துப்பார்க்காத 900 ரன் மைல்கல்லை எட்டியுள்ளார் கோலி. 4 சதங்களும், 6 அரைசதங்களும் அடித்துள்ள விராட் 1000 ரன்களைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. டிவில்லியர்ஸ், ராகுல், வாட்சன் கோஹ்லிக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்க கெயிலும் கடைசி இரு போட்டிகளில் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். மிகப்பெரிய பிரச்னையாகக் கருதப்பட்ட அவ்வணியின் பவுலிங்கும் இப்போது மிரட்டலாக உள்ளது. ஜோர்டான், அரவிந்த், சஹால் என அனைவரும் ஃபார்மில் உள்ளனர். சரியான லைனில் பந்து வீசுகின்றனர். சஹால் 19 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். அவ்வணியின் ஒரேயொரு பிரச்சனை அவர்களது ஐந்தாவது பவுலர். ஹர்ஷல், ஆரோன், ரசூல், இக்பால் அப்துல்லா, ரிச்சர்ட்சன், சம்ஷி என பலர் பந்துவீசியும் ஒருவர் கூட ஆறுதல் தரவில்லை. அந்த ஐந்தாவது பவுலர் மட்டும் கிளிக் ஆகிவிட்டால் போதும் கோலியின் கையில் கோப்பை ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது. கோவக்காரரான கோலி அணி தான் இந்த வருடத்தின் சமத்து டீம் ''ஃபேர் ப்ளே'' அவார்டை வாங்கியுள்ளது.
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
   

வ்வணி இப்படி விளையாடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வார்னர், புவனேஷ், முஸ்தாஃபிசூர் என்ற மும்மூர்த்திகளின் செயல்பாடு அபாரம். இளம் பந்துவீச்சாளர் முஸ்தாஃபிசூரின் யார்க்கர்கள் ரசல் போன்ற உலகத்தர வீரர்களையே நிலைகுலைய வைத்தது. புவனேஷ் விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளார். மறுபுறம் வார்னர் தனி ஆளாக பெரிய ஸ்கோர்களை அடிக்க உதவுகின்றார். அவர்கள் தவிர்த்து ஸ்ரன், ஹென்ரிக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சிற்கு பலம் சேர்க்கின்றனர். யுவராஜ் இன்னும் முழு ஃபார்முக்குத் திரும்பவில்லை. நல்லதொரு ஸ்பின்னர் இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரிய பலவீனம். நெஹ்ரா தொடரிலிருந்து வெளியேறியதும் பின்னடைவு தான். ஆனால் அவர்களின் மிகப்பெரிய தலைவலி அவர்களது மிடில் ஆர்டர் தான். வார்னர் (658) மற்றும் தவான் (463) தவிர்த்து ஒருவர் கூட 150 ரன்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் கூட சொதப்புகிறார். மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கொல்கத்தாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியும்.
 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
   

மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்போடு களம் காண்கிறது கம்பீர் அண்ட் கோ. ஒற்றை ஆளை நம்பாது டீமாக ஜெயிப்பதுதான் என்றுமே கொல்கத்தாவின் அசுர பலம். ஒரு போட்டியில் கம்பீர் அடிப்பார். இன்னொரு போட்டியில் பதான் அடிப்பார். ஒரு போட்டியில் நரீனின் சுழலால் வெல்வார்கள், எல்லோரும் சொதப்பினால் ஷகிப் கை கொடுப்பார். யார் நன்றாக விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் ரஸ்ஸல் என்றொரு மனிதன் அடங்காத குதிரையாக அடித்து நொறுக்குவார். ஆனால் அவர் தற்போது காயத்தால் அவதிப்படுவது அவர்களுக்குப் பெரும் பின்னடைவு தான். கடந்த போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவும் அற்புதமாக பந்து வீசினார். ஹோல்டர், லின், முன்ரோ போன்ற வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படாதது சற்று பின்னடைவு. மேலும் உத்தப்பாவிடமும், மனீஷ் பாண்டேவிடமும் கன்சிஸ்டென்சி இல்லை. கடந்த சில போட்டிகளில் யூசுப் பதான் தனியாளாக போட்டிகளை வென்று தருகிறார். அவருக்கு மற்றவர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் மூன்றாவது கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெறலாம்.
   

கடந்த சீசன்களைப் போல இந்த சீசனில் போட்டிகள் அந்த அளவிற்குப் பரபரப்பாக இல்லை. அதுமட்டுமல்லாமல் காயங்கள், ஸ்டேடியம் மாற்றம் என எத்தனையோ பிரச்சனைகள் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளன. எஞ்சியுள்ள 4 போட்டிகளாவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்ப்போம். கம்பீர், கோலி, ரெய்னா மூன்று இந்திய கேப்டன்கள், வார்னர் மட்டும் தான் வெளிநாட்டு  கேப்டன். இவர்களில் யாருக்கு கோப்பை என்று பார்ப்போம்.

- மு.பிரதீப் கிருஷ்ணா
மாணவப் பத்திரிக்கையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close