Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது தான் இந்த ஐபிஎல்லில் பெஸ்ட் லெவன்!

சுமார் இரண்டு மாத காலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் திருவிழா முடிவுக்கு வந்துவிட்டது. பெங்களூர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஐ.பி.எல் சீசனில் சிறப்பாக விளையாடிவர்களை கொண்டு உருவாக்கிய  ஐபிஎல் 2016 கனவு அணி இங்கே! 

டேவிட் வார்னர் (கேப்டன்)


இந்தத் தொடரின் ஒரே  அயல்நாட்டு  கேப்டனாக இருந்தாலும் தனி ஒருவனாக  நின்று பெரும்பாலான போட்டிகளில்  ஹைதரபாத் அணியை வெற்றிபெற வைத்தார் வார்னர். பந்துவீச்சு மிகவும் பலமாக இருந்தாலும், பேட்டிங்கில் இவருக்கு யாரும் பெரிய அளவில் ஒத்துழைப்புத் தரவில்லை. ஆனால் வார்னர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் 17 போட்டிகளில் 9 அரைசதங்களுடன் 843 ரன்கள் குவித்து, ஒரு சீசனில் 800 ரன்னைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் . குறிப்பாக குவாலிஃபயரில் குஜராத் அணிக்கு எதிராக, தனியொருவனாகப் போராடி 93 ரன்கள் எடுத்த வார்னரின் அந்த இன்னிங்ஸ் டி20 வரலாற்றின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் வார்னர்  சிறப்பாக செயல்பட்டார். பவுலர்களை பயன்படுத்துவதில் இவர் பயன்படுத்திய  ட்ரிக்ஸ் வாவ் ரகம்.

குவின்டன் டிகாக்:-

இந்தத் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவிண்டன் டி காக் தான். 23 வயதுதான் என்றாலும் இவரது ஆட்டத்தில் அவ்வளவு முதிர்ச்சி. அதுவும் குறிப்பாக இவரது கட் ஷாட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. டெல்லி அணி சேஸ் செய்த பல போட்டிகளில் அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் டிகாக். ஆர்.சி.பி- க்கு எதிராக இவர் அடித்த சதம், வோர்ல்டு கிளாஸ்! டி காக்குக்கு இந்த ஐ.பி.எல்லில் மூன்று முறை தவறாக அவுட் கொடுக்கப்பட்ட நிலையிலும் மூன்று அரை சதம், ஒரு சதம் உட்பட 445 ரன்கள் குவித்திருக்கிறார் டி-காக்.

விராட்  கோஹ்லி

கிரிக்கெட் விளையாடுவது போலவா கோஹ்லி இந்த சீசனில் விளையாடினார்?  'பேட்மேன்' எதிரிகளைப் பந்தாடுவது போல், சர்வதேச பவுலர்கள்  பலரையும்  உரித்துத்தள்ளினார் கோஹ்லி. ஒரே சீசனில் 973 ரன்கள், 4 சதங்கள், ஏழு அரைசதங்கள்,  38 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடினார் வி.கே.! ' அரையிறுதிக்குத் தகுதி பெறுமா' என்று பலரும் இவரது அணி குறித்து நினைத்துக்கொண்டிருக்க, தானே முன்னின்று  அணியை இறுதிப் போட்டி வரையிலும் அழைத்துச் சென்றார். ஒரு கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார் கோலி. 20 ஓவர் போட்டியில் சதமடித்தால் சரி, 15 ஓவர் போட்டியில் கூட சதமடித்து பிரமிக்க வைத்த கோஹ்லியின் பேட்டிங் மாஸ்டர்கிளாசை வர்ணிக்க புதுப்புது வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் வர்ணனையாளர்கள் .

ஏ.பி.டிவில்லியர்ஸ்:-,..

கோலி பேட்மேன் என்றால்,  டிவில்லியர்ஸ் சூப்பர்மேன் . குவாலிஃபயரில் குஜராத் அணியின் ,வெற்றியை அவர்களிடமிருந்து வம்படியாய் பறித்த  அந்த   இன்னிங்க்ஸ், ஏ.பி.டியின் மிகச்சிறந்த டி-20 இன்னிங்க்சில் ஒன்று.  வெறும் அதிரடி மட்டுமென்று இல்லாமல், அணியின் நிலை உணர்ந்து ஒவ்வொரு கியராக மாற்றி வேறொரு ஏ.பி.டியை இம்முறை நமக்குக் காட்டினார். 6 அரைசதங்கள் 1 சதம் என 687 ரன்கள் குவித்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ். ஸ்ட்ரைக் ரேட் - 168,  கோஹ்லியுடன் இவர் அமைத்த கூட்டணி  எதிரணி பவுலர்களுக்கு   வேற லெவல்  தலைவலியாக அமைந்தது .களத்தில் என்ன வேலை செய்தாலும் அங்கு ஏ.பி.டி மேஸ்ட்ரோதான்! ஆம் இந்தத் தொடரில் மொத்தம் 19 கேட்சுகள் பிடித்து அதிலும் முதலிடம் வகிக்கிறார்  இந்த  சூப்பர்மேன்.

டுவைன் ஸ்மித்,

சென்னை அணியில் இருந்த  ஃபார்மை அப்படியே குஜராத்த்துக்கு எடுத்து வந்தார் ஸ்மித். ஓப்பனிங்காக இருந்த போதிலும் சரி, மிடில் ஆர்டரில் இருந்த போதும் சரி, ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தில் எந்தக் குறையும் இல்லை. 3 முறை பவர்பிளேவில் லயன்ஸ் அணி 70 ரன்களைக் கடந்ததே, ஸ்மித்தின்  அசுர வேக அதிரடி ஆட்டத்துக்கு  உதாரணம்.  பேட்டிங்(324 ரன்) மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் (8 விக்கெட்) மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். ஓரிரு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய போதும், அணிக்குத் தேவையானபோது விக்கெட்டுகள் எடுக்க இவர் தவறவில்லை. கொல்கத்தாவுக்கு எதிராக
 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். ஐந்தாம் நிலையில் களமிறங்க தகுதியான சிறந்த ஆல்ரவுண்டர் இவர்.

யூசுப் பதான்

பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது  ஓரிரு போட்டிகளில் மாஸ் காட்டும் யூசுப், இம்முறை முழு பார்முக்கு வந்து முழு  தொடரிலும் தன் திறமையை நிரூபித்தார். இத்தொடரில் அவர் அடித்தது வெறும் 361 ரன்கள் . ஆனால், அவரது சராசரி 72.20. எதிரணி வீரர்களால் 5 முறை மட்டுமே இவரை ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. லீக் போட்டியொன்றில்  பெங்களூரு அணிக்கெதிராக கடைசி கட்டத்தில் சிக்சர் மழையாய்ப் பொழிந்து, தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை வெற்றி பெற வைத்தார். மழையால் பாதிக்கப்பட்ட புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் இடியாய் இடித்தார் யூசுப். இவரது ஆப் ஸ்பின்னும் அணிக்கு அவ்வப்போது உதவியது.சிக்கனமாக பந்து வீசினார். ஃபினிஷர் ரோலுக்கு பக்கா ஃபிட் யூசுப் பதான்.

ஆந்த்ரே ரசல்

கடந்த சீசனின் தொடர் நாயகன், இம்முறையும் சூப்பர் நாயகன்தான். இவரால்  நட்சத்திர பந்துவீச்சாளர் மோர்னே மோர்கெலின் தேவை கொல்கத்தாவுக்கு குறைந்தது.  பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அமர்க்களப்படுத்திய ரசல், காயத்தால் அவதிப்பட்டது, நைட் ரைடர்சுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ரஸ்ஸல் காயத்துக்குப் பிறகு கொல்கத்தா சரியான வேகப்பந்து ஆல்ரவுண்டர்  இல்லாமல் திணறி தோல்விகளை தழுவியது.  15 விக்கெட்டுகளும், 8 இன்னிங்ஸ்களில் 188 ரன்களும் குவித்து இத்தொடரின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார். இவரது இடத்தை எந்தவொரு வீரராலும் நிச்சயம் நிரப்ப முடியாது என்பதே உண்மை. 

கிறிஸ் மோரிஸ்

இந்த சீசனின் ஏலத்தில் 7 கோடிக்கு மோரிஸ் வாங்கப்பட்ட போது எத்தனையோ கேள்விகள் எழுந்தன. அதெற்கெல்லாம் தனது திறமையால்  பதில் சொல்லிவிட்டார் மோரிஸ். 150 கி.மீ பந்து வீசி அசத்தியதுடன், அசால்டாக சிக்சர்களைப் பறக்கவிட்டும் அமர்க்களப்படுத்தினார்.  தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்டம் கண்ட டெல்லி அணிக்கு,  தற்போது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறார் மோரிஸ். 13 விக்கெட்டுகள் அள்ளிய மோரிஸ் 7 இன்னிங்ஸ்களில் 195 ரன் எடுத்தார். வெறும் 17 பந்துகளில் அரைசதம் அடித்து, இத்தொடரின் அதிவேக 50-ஐ பதிவு செய்தார். குறிப்பிட்ட அந்த போட்டியில் குஜராத் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்து கடைசிப் பந்துவரை இவர் ஆடிய ஆட்டம் மிரட்டலின் உச்சம்,

புவனேஷ்வர் குமார்

ஸ்விங்காலும், யார்க்கர்களாலும் எதிரணியை மிரட்டிய புவனேஷ்தான் இந்த ஆண்டின் பர்ப்பிள் கேப் வின்னர். முதல் போட்டியில் பெங்களூருவின்  சர்ஃபராசால் சூறையாடப்பட்ட பிறகு, தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தார் புவி. கடைசி தருணங்களில் ஏற்பட்ட இக்கட்டான சூழல்களிலும் முதிர்ச்சியோடு பந்து வீசிய புவனேஷ், நிச்சயம் பர்ப்பிள் கேப் வெல்லத் தகுதியானவர்தான். பவர் பிளேயில் மெயிடென்கள், டெத்தில் யார்க்கர்கள் என 23 விக்கெட்டுகள் அள்ளிய புவி, இந்திய அணியில் தான் இழந்த ஸ்டார்டிங் பெர்த்தை நிச்சயம் கைப்பற்றி விடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

யுஸ்வேந்திர சஹால்.

ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு அணியின் டாப் பவுலராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் சஹால். திடீரென்று வேகம் காட்டுவது, கூக்ளி, ஐந்தாவது ஸ்டம்ப் லென்தில் வீசுவது போன்றவை  இவரது மிகப்பெரிய பலங்கள். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர்  (21 விக்கெட்டுகள்) இவர்தான்.பேட்டிங்குக்குச் சாதகமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கூட விக்கெட் வேட்டை நடத்தும் சஹால், ஜிம்பாப்வே தொடருக்குத் தேர்வானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பெங்களூரு அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரே  சஹால்தான். டி-20  பார்மேட்டுக்கு ஏற்ற ஸ்பின் பவுலர் என்பதால், சிறந்த லெவனில் கண்டிப்பாக இவருக்கு இடம் உண்டு.

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் :-

இந்திய அணியை வங்கதேச மண்ணில் துவைத்தெடுத்த  இந்த இளம் புயலிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி மிகச்சிறப்பாக செயல்பட்டார்  முஸ்தாபிசுர். மொத்தமாக 17 விக்கெட்டுகள்  அள்ளினார் . ரஹ்மானின் வேரியேஷன்கள் அனைத்து  பேட்ஸ்மேன்களையும் திணறடித்தது. குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர்  ரஸ்ஸல்லை தனது யார்க்கரால் இவர்  நிலைகுலைய வைத்தது, இந்த ஐ.பி.எல் லின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. கடைசி கட்ட  ஓவர்களில் மிகச்சிக்கனமாகப் பந்துவீசி  இத்தொடரில் சன்ரைசர்சின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார் முஸ்தாஃபிசுர். சராசரியாக ஒரு ஓவருக்கு 6.90 ரன்கள் மட்டுமே கொடுத்த ரஹ்மான் இத்தொடரின் சிறந்த இளம் வீரர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத்  தவிர ஆடம் சம்பா, நெஹ்ரா, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் சிறப்பாகவே விளையாடினர். எனினும் குறைந்த போட்டிகளில் மட்டுமே இவர்கள் விளையாடியதால்  லெவனில் சேர்ப்பது சரியாக இருக்காது. இவ்வணியில் 4 இந்தியர்கள் மட்டுமே இடம் பிடித்திருப்பது  மிகவும் கவலைக்கு உரிய விஷயம். இன்னும் ஐ.பி.எல் அணிகள் வெளிநாட்டு வீரர்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது. இந்நிலை மாறி இந்திய வீரர்கள் ஜொலித்தால்தான் உலக அரங்கிலும் இந்தியா ஜொலிக்க முடியும். அதற்குத்தானே ஐ.பி.எல் நடத்துறோம் யுவர் ஆனர்?!
 
மு.பிரதீப் கிருஷ்ணா (மாணவப் பத்திரிக்கையாளர்)


இவங்கதான் இந்த ஐபிஎல்லில் மோசமான 11 ஃப்ளாப் பாய்ஸ்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close