Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவங்கதான் இந்த ஐபிஎல்லில் மோசமான 11 ஃப்ளாப் பாய்ஸ்!

இந்த ஐ.பி.எல்லில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள், சொதப்பித் தள்ளி ரசிகர்களுக்கு பல்பு தந்தார்கள். ஸ்டெயின், இஷாந்த் முதல் ஏன், நம்ம தோனி வரை நிறைய ஃப்ளாப்புகள். அப்படி ஃப்ளாப் ஆனவர்களில் ஒரு 11 பேரை ஓர் அணியாக இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

இவர்கள் அரியர் வைப்பவர்கள் அல்ல, டிஸ்டிங்சன் வாங்குபவர்கள். ஆனால் சரியாக சோபிக்காமல் சொதப்பியவர்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை  பொய்யாக்கியவர்கள். அவர்கள் யார் யார் ? இதோ…

பிரெண்டன் மெக்குல்லம்

தனது கடைசி டெஸ்ட் போட்டியில், அதிவேக சதமடித்து ஓய்வு பெற்ற இந்த நியூசி. முன்னாள் கேப்டன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு. இருந்தது. இம்முறை 354 ரன்கள் எடுத்திருந்தாலும், ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார் BAZZ!  ஸ்மித்தோடு இணைந்து அதிரடியான துவக்கம் தந்தாலும், அதை பெரிய ஸ்கோராக இவரால் மாற்ற முடியவில்லை. குறிப்பாக ஸ்பின்னர்களிடம் ரொம்பவே திணறினார். மெக்குல்லத்தின் ஸ்டேண்டர்டுக்கு இந்த சீசன் ஒரு ஃபெயிலியர் சீசன்தான்.

ஷ்ரேயாஸ் ஐயர்

2015 சீசனில் 4 அரைசதம் உட்பட 439 ரன்கள் எடுத்த ஐயர், இம்முறை 6 போட்டிகளில் சேர்த்து அடித்தது வெறும் 30 ரன்களே! ரிசாப் பன்ட், கருண் நாயர்  போன்ற புதிதாக அணிக்குள் வந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டேர்டெவில்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இவரின் ஆட்டம் இம்முறை  படுசொதப்பல். உள்ளூர், வெளியூர் என எல்லாப் போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்களிடம் மிகவும் திணறினார். விளைவு, வெறும் 6 போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. ஷ்ரேயாஸ் ஐயரின் மோசமான ஃபார்ம் காரணமாக, டெல்லி அணிக்கு தொடக்க விக்கெட் ஒவ்வொரு முறையும் விரைவில் விழுந்துவிடுவதால், பவர் பிளேவில் அந்த அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை.

ஹர்டிக் பாண்டியா

 

இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக தோனி  தேடிக்கொண்டிருந்தது வேகப்பந்து வீசும் ஒரு ஆல்ரவுண்டரை. அவ்விடத்தை நிரப்ப சரியான ஆளாகத் தென்பட்டார் பாண்டியா. உலகக்கோப்பை டி20 யிலும் இடம்பெற்றார். அத்தொடரில் சொதப்பினாலும் ஐ.பி.எல் லில் கலக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்டார் பாண்டியா. பேட்டிங்கில் முன்னரே களமிறக்கப்பட்ட போதிலும், இவரால் கொஞ்சம் கூட சிறப்பாக செயல்பட முடியவில்லை. 11 போட்டிகளில், வெறும் 44 ரன்களும் 3 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்த இவரது இடத்தை,  அவரது அண்ணன் குரூனல் பாண்டியவே கைப்பற்றினார்.  இவர்  ஆடுகளத்தில் ஹீரோயிசம் காட்ட முயற்சிப்பதை தவிர்த்து, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஷேன் வாட்சன்

16 போட்டிகளில் வெறும் 179 ரன்கள் மட்டுமே எடுத்தார் இந்த 9 கோடி ஆல்ரவுண்டர். ஒரு பவுலராக வாட்சன் சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு ஆல்ரவுண்டராக வாட்சன் ஒரு மிகப்பெரிய ஃபெயிலியர். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மிக முக்கியமான குவாலிஃபயர் மற்றும் ஃபைனலில் பொறுப்பாக ஆட வேண்டிய தருணத்தில் படுமோசமாக விளையாடினார். நான்கு ஓவரில் 61 ரன்கள் விட்டுக்கொடுத்தார் . இதுவே பெங்களூரு அணி கோப்பையை நழுவ விட முக்கிய காரணம்.

மேக்ஸ்வெல்

பஞ்சாப் அணி பெரிதும் நம்பியிருந்தது மேக்ஸ்வெல்லைத்தான். ஆனால் மேக்ஸ்வெல், பஞ்சாப் ரசிகர்களுக்கு அல்வா தந்ததுதான் மிச்சம். மிடில் ஆர்டரில் களமிறங்கி வெளுத்துக் கட்டுவார் என எதிர்பார்த்தால், பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனார். பவுலிங்கிலும் சோபிக்கவில்லை. 11 போட்டிகளில் வெறும் 179 ரன்களை மட்டுமே எடுத்து  ஏமாற்றினார். சொதப்பல் மன்னன் மேக்ஸ்வெல்தான், சொதப்பல் டீமுக்கு பக்கா ஆல்ரவுண்டர்.

 டேவிட் மில்லர் (கேப்டன்)

கேப்டனாக தொடரைத் தொடங்கிய மில்லருக்கு, இது மறக்க வேண்டிய ஒரு தொடராக அமைந்துவிட்டது. 14 போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் அதிகபட்சம் வெறும் 31 தான். அசால்டாக பந்துவீச்சாளர்களைப் பந்தாடிய கில்லர் மில்லரா இது என பலருக்கும்  நினைக்கத் தோன்றியது. சுழற் பந்தை, பேட்டால் தொடவே மிகவும் சிரமப்பட்டார் மில்லர். டைமிங் மிஸ்ஸாகிக் கொண்டே இருந்தது . கேப்டன்சியும் மிக  மோசமாகவே இருந்தது. விளைவு கடைசி இடம் பிடித்து வெளியேறியது பஞ்சாப் அணி. டி20 உலகக்கோப்பையிலிருந்தே மில்லரின் ஃபார்ம் மங்க ஆரம்பித்துவிட்டது. ஐ.பி.எல்லில் மோசமாக செயல்பட்டதால் இப்போது தென்னாப்பிரிக்கா அணியிலும் மில்லருக்கு  இடம் இல்லை. இந்த மோசமான அணியில், மோசமான கேப்டன் பதவிக்கும் பொருத்தமானவர் இவர்தான்.

ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்சின் சூப்பர் ஆல்ரவுண்டர், தனது சொந்த ஊருக்காக விளையாடும்போது எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கும்?. ஆனால் குஜராத் அணியின் துணைக் கேப்டன் ஜடேஜாவின் ஆட்டம், மிகப்பெரிய ஏமாற்றமாய் அமைந்தது. 191 ரன்கள் மட்டுமே எடுத்த ஜடேஜா, 8 விக்கெட்டுகளை மட்டுமே இத்தொடரில் வீழ்த்தினார். அதுவும் அவருடைய பந்துவீச்சு சராசரி, 38 க்கும் மேல். ஒரு போட்டியில் கூட இவர் இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணின் மைந்தன் ஜடேஜாவிடம் எதிர்பார்த்த ராஜ்கோட் ரசிகர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

ஜேம்ஸ் ஃபால்க்னர்

 
சொதப்பல் பட்டியலில் இருக்கும் இன்னொரு  ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்கனர்.  டெத் பவுலிங், நல்ல ஆல்ரவுண்டர், அட்டகாச ஃபினிஷர் என பல காரணங்களை சொல்லி குஜராத் அணி, இவரை ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் வீரரான ஸ்டெயினுக்கு கூட வாய்ப்பு தராமல்,  அணி நிர்வாகம் தொடர்ந்து ஃபால்க்னருக்கு வாய்ப்பு தந்தது. ஆனால் இத்தொடரில் வெறும் இரண்டே இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி மோசமாக செயல்பட்டார் ஜேம்ஸ். பேட்டிங்கிலும் சொதப்பல், ஃபினிஷர் ரோலிலும் மோசம். மோசமாக விளையாடிவர்கள் பட்டியலில் இந்த மோசமான ஃபினிஷர் & ஆல்ரவுண்டருக்கு  இடம் கிடைத்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பவன் நெகி

டெல்லி அணி செலவு செய்த 8.5 கோடி ரூபாய், பத்துப் பைசாவிற்குக் கூட உபயோகமாகவில்லை. 84 ரன்களை விட்டுக்கொடுத்து, 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ஆல் ரவுண்டர் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு பேட்டிங்கிலும் அவர் சோபிக்கவில்லை. 6 இன்னிங்ஸ்களில் வெறும் 57 ரன்கள்தான் எடுத்தார். இளம் வீரர்களை நம்பியே களமிறங்கிய டெல்லி அணி, இவ்வளவு செலவு செய்த ஒரு வீரர் சரியாக செயல்படாததால் சோர்ந்து போனது. சென்னை அணிக்காக அவ்வப்போது அதிரடி காட்டிய நெகி, அடுத்த சீசனில்  முழு பலத்துடன் மீண்டு வந்து சிறப்பாக விளையாட வேண்டும்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

இப்படிப்பட்ட லிஸ்டில் அஷ்வினா? புனே அணிக்காக தன்னுடைய பழைய ஃபார்மைத் திரும்ப எடுத்து வர முடியாமல் தவித்தார் அஷ்வின். போன வருடத்தைப் போல இந்த வருடமும் 10 விக்கெட்டுகளைதான் வீழ்த்தினார். கடைசிப் போட்டி இல்லாமல் பார்த்தால் வெறும் 6 தான். அதிலும் அவரது  எகானமி  7.25 என்பது அஷ்வினின் திறனுக்கு மோசமான செயல்பாடுதான். டெஸ்ட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் மீண்டு வந்தால் மட்டுமே, புனே அணி அடுத்த சீசனில் எழுச்சி பெற முடியும். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில், பந்தை திருப்புவதற்கு பெரும் பாடுபடுகிறார் அஷ்வின். புனே அணி அஷ்வினை பெரிதும் நம்பியிருந்ததும் அந்த அணிக்கு ஒரு பின்னடைவாகப் போனது.

இம்ரான் தாஹிர்

உலகின் தலைச்சிறந்த ஸ்பின்னர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட தாஹிர், ரன்களை வழங்குவதில் வள்ளலாக இருந்தார். ஒரு ஓவருக்கு 8.62 என்ற விகிதத்தில் ரன்களை வாரி வழங்கிய இவர், 5 விக்கெட்டுகளை (4 போட்டிகள்) மட்டுமே வீழ்த்தினார். ஒருபுறம் ஜாகிரும் மிஷ்ராவும் ரன்களைக் கட்டுப்படுத்தினால், அதையெல்லாம் இவர்  தாரளமாக விட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் டெல்லி அணியிலிருந்து  கழட்டிவிடப்பட்டார். இக்கட்டான நேரத்தில் அசத்தலாக பந்து வீசி விக்கெட்டுகளை பறிப்பார் என பலரும் எதிர்பார்த்தால், கடைசியில் வாட்டர் பாயாக வெளியில் இருந்தார் தாஹிர்.

இவர்கள் மட்டுமல்ல பொல்லார்டு, குப்தில், வில்லியம்சன், மார்கன், ஹர்பஜன் என பல  வீரர்கள் அவர்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தத் தவறினர். நிஜத்தில் மேட்ச் வின்னர்களான அவர்கள், வெகுண்டெழ வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.

மு.பிரதீப் கிருஷ்ணா   (மாணவப் பத்திரிக்கையாளர்)

இது தான் இந்த ஐபிஎல்லில் பெஸ்ட் லெவன்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close