Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 வயதில் உலக இளம் செஸ் மாஸ்டர்... சென்னையில் இருந்து இன்னொரு விஸ்வநாதன் ஆனந்த்!

மூன்றாவது முறையாக, சர்வதேச செஸ் மாஸ்டருக்கான பட்டத்தை வென்றுள்ளார் பத்தே வயதான சென்னையைச் சார்ந்த பிரக்ஞானந்தா. ஒரு கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி இப்பட்டத்தைப் பெற்றுள்ளதுதான் இதில் சிறப்பான விஷயம். பிரக்ஞானந்தா ஏற்கெனவே, புவனேஷ்வரில் நடந்த KIIT International Festival of Chessல்  இரு பட்டங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, உலகின் இளைய சர்வதேச மாஸ்டராக (International Master-IM) இருந்தது, ஜூடிட் போல்கர்.  ஆனால், இவர் இதை 11+ வயதில்தான் பெற்றார். ஆனால் பிரக்ஞானந்தாவின் வயது, 10 வயது 9 மாதங்கள் மட்டுமே. 'உலகிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா என்பது உலக சாதனையாகும்.

"பிரக்ஞானந்தா தன்னுடைய முதல் IM பட்டத்தை பிரான்சில்  நடந்த கேன்ஸ் ஓபன்  போட்டியில் பெற்றார். இரண்டாவதை ரஷ்யாவில் நடந்த  ஏரோபிளாட் ஒபனில் பெற்றார். மூன்றாவதை தற்போது புவனேஷ்வரில் பெற்றுள்ளார்.  விளையாட்டு வீரர்களின் திறமையை மதிப்பிடும்  ELO  முறையில், 2400 புள்ளிகளைப் பெற்று சர்வதேச செஸ் மாஸ்டராக  மாறி இருக்கிறார் பிரக்ஞானந்தா .


 

பிரக்ஞானந்தாவிற்கு இரண்டு  வயது இருக்கும்போது, அவருடைய சகோதரி வைஷாலி செஸ்ஸில் பயிற்சி பெறுவதைப் பார்த்து, இவருக்கும் ஆர்வம் வந்தது என்கிறார் பிரக்ஞானந்தாவின் தாயார் நாகலட்சுமி. பிரக்ஞானந்தாவின் சகோதரி, 14 வயதுக்குக்குட்பட்டோர்  பெண்கள் பிரிவில் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

" நான் போலியோ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவனுடைய அம்மாதான் அவனுடன் அனைத்து இடத்திற்கும் செல்வாள். பிரக்ஞானந்தா அவனுடைய வாழ்விலுள்ள இரு பெண்களுக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளான்.!" என்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு.


பையனைப்பற்றி பெருமிதம் கொள்ளும் ரமேஷ் பாபுவின் மனதில், பொருளாதார ரீதியாக தன் மகனுக்கு ஈடுகொடுக்க முடியுமா என்ற சிறு கவலையும் உள்ளது.

"பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் ஆகக் கூடிய அளவு திறமை உள்ளவன். ஆனால், அதற்கு அவன் வெளிநாடுகளில் அதிகளவு விளையாட வேண்டியிருக்கும்.இருப்பினும் பிரக்ஞானந்தா ஜெயித்துக் காட்டுவன் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது " என மேலும் கூறுகிறார் ரமேஷ் பாபு.

திறமை, தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சாதனை படைப்பது நிச்சயம்!

-ந. ஆசிபா பாத்திமா பாவா (மாணவப் பத்திரிகையாளர்)


இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ