Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொஞ்சம் கிரிக்கெட்.... நிறைய அரசியல்... ரியல் ஆட்ட நாயகன் அனுராக் தாகூர்!

து நவம்பர் 23, 2000- ம் ஆண்டு. எலும்பை சில்லிட வைக்கும் கடுங்குளிர் காலம், அதுவும் பனி மலை சூழ்ந்த ஜம்முவில். தவி நதி அருகில் இருக்கும் மவுலானா ஆசாத் நினைவு விளையாட்டுத் திடலில், ஹிமாச்சல் அணி, ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தது.

ஏற்கெனவே, அந்தத் தொடரில் இரண்டு ஆட்டங்களில் தோல்வியையும், இரண்டு ஆட்டங்களில் ட்ராவையும் சந்தித்திருந்து. கெளரவமான தோல்விக்கு, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய சூழல் ஹிமாச்சல் அணிக்கு.

ரஞ்சி ஆட்டத்துக்கு முதன் முதலில் அந்த தொடரில் அறிமுகமான ஒரு வீரர், அப்போது  ஜம்மு வீரர்களின் பந்துகளை எதிர் கொண்டு களத்தில் நிற்கிறார். அவர் களத்துக்கு வந்த  ஏழு நிமிடங்களில், ஏழு பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன்னும் எடுக்காமல், டக் அவுட் ஆகிறார். அந்த மேட்சில் மட்டுமல்ல, அந்த தொடர் முழுவதும் அவர் சிறப்பாக ஆடி இருக்கவில்லை. அவர்தான் இப்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் அனுராக் தாகூர்!

அரசியல் - கிரிக்கெட் - அரசியல்:


அவர் சிறப்பாக ஆடாததோ அல்லது டக் ஆவுட் ஆனதோ உண்மையில் செய்தி இல்லை. ஒரு வீரர் அனைத்து மேட்சுகளிலும் நூறு ரன் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அப்போது அனைத்து ஊடகங்களும் அனுராக் தாகூர் குறித்து விமர்சித்தன. ஆனால், அந்த விமர்சனங்கள் அவர் ரஞ்சியில் விளையாடிய விளையாட்டு குறித்தல்ல; அவர் எப்படி ரஞ்சி ஆட்டத்துக்கு வந்தார் என்பது குறித்து. ஆம், உண்மையில் அவரது வருகை, அவர் விளையாட்டுபோல மொன்னையானதல்ல; மிகவும் சுவாரஸ்யமானது!

ஆம்!  இந்திய கிரிக்கெட், அரசியலுடன் பின்னிப் பிணைந்து இருப்பது எப்படி என்பதை விளக்க, பக்கம் பக்கமாக எழுதத் தேவையில்லை. ரஞ்சிக் கோப்பைக்கு எப்படி அனுராக் வந்தார் என்பதை சொன்னாலே போதும்.

அனுராக் தாகூரின் தந்தை பிரேம் குமார் துமல், அப்போது ஹிமாச்சல் பிரதேசத்தின் முதல்வராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் ஹிமாச்சல் மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், ரஞ்சி தேர்வுக் குழுவின் தலைவராகவும் அனுராக் நியமிக்கப்படுகிறார். நியமிக்கப்பட்டதிலேயே அரசியல் இருந்தாலும், அதற்கு பின் அனுராக் செய்த விஷயம்தான் ‘பிளாக் காமெடி’. ஆம், தேர்வுக் குழு தலைவரான அவர், தன்னைத் தானே ரஞ்சி அணிக்கு தேர்வு செய்து கொள்கிறார். அணியின் கேப்டனாகவும் தன்னை தானே நியமித்துக் கொள்கிறார். அதுதான் அவர் விளையாடிய முதல் மற்றும் இறுதி கிரிக்கெட் தொடர். அதன் பிறகு, அவர் விளையாடியதெல்லாம் களத்திற்கு வெளியேதான்.

அப்போது ஹிமாச்சல் கிரிக்கெட் வாரியத்தில் இருந்த முன்னாள் அதிகாரிகள் இவ்வாறாக சொன்னார்கள், “ரஞ்சியில் விளையாட அனுராக்கிற்கு இருந்த இரண்டே தகுதி, அவர் 25 வயதை கடந்தவர் என்பது, அவர் இம்மாநில முதல்வரின் மகன் என்பதும் மட்டும்தான்” என்று. ஆம், அதுதான் உண்மையும் கூட.

அவர் ஹிமாச்சல் மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றவுடனேயே, வாரியத்தில் ஒரு வியக்கத்தகு திருத்தத்தை கொண்டுவந்தார். அதுவரை ஹிமாச்சலில் இருந்த 12 மாவட்ட கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்களும், செயலாளர்களும் வாக்களித்துதான் மாநில வாரியத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற விதியில் திருத்தத்தைக் கொண்டு வந்தார். 25 நபர்கள் கொண்ட நிர்வாக குழுவை அமைத்தார். இவர்களும் மாநிலத்தின் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கலாம் என சட்டத்தை மாற்றினார். இந்த 25 பேரும் மாநில வாரியத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள். இவர்கள் இயல்பாக தங்களை நியமித்த மாநில வாரியத் தலைவருக்குதானே வாக்களிப்பார்கள். இது மூலமாக ஹிமாச்சல் மாநில கிரிக்கெட் வாரியத்தின் சர்வ அதிகாரங்களும் படைத்தவர் ஆனார் அனுராக்.

பின்னர் அரசு, கிரிக்கெட் வாரியத்திற்கு ஒதுக்கிய நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு கைமாற்றி சர்ச்சையில் சிக்கினார். அது மட்டுமல்லாமல் பிசிசிஐ-லிருந்து ஸ்ரீனிவாசனை ஓரங்கட்டி, பிசிசிஐ-யும் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றினார் அனுராக்.

ஹிமாச்சல் கிரிக்கெட் வாரியத்திலிருந்து பிசிசிஐக்கு, டால்மியாவின் நட்பால் நுழைந்தார். 2004 பிசிசிஐ தேர்தலின்போது, டால்மியாவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகச் செயல்பட்டார். ஐபிஎல் சர்ச்சைகளைப் பயன்படுத்தி ஸ்ரீனிவாசனை வீழ்த்தினார். 25 வயதில் ஹிமாச்சல் மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், சரியான காய் நகர்த்தல்கள் மூலம், இதோ தமது
41 வயதில் பிசிசிஐ முழுவதையும், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.

அவர் தன் வளர்ச்சிக்காக, மனிதர்கள், வாய்ப்புகள் என அனைத்தையும் மிகச் சரியாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பது கிரிக்கெட் வாரிய அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும். அதனால், கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தின்போது, வெகு நேரம் ஜக்கி வாசுதேவுடன் பேசிக் கொண்டிருந்ததை அனுராக்கை நன்கு அறிந்தவர்கள் யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.

கிரிக்கெட் வாரியத்தில் அனுராக்கின் வளர்ச்சி, அவர் அரசியல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது. தொடர்ந்து மூன்று முறை, பா.ஜ.க சார்பாக போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், பாஜக வின் இளைஞர் அணிக்கும் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கணக்கு சரியாக அமைந்தால், ஹிமாச்சல் பிரதேசத்தின் அடுத்த பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் அவர்தான்.

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close