Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகம் உனதாய் வரைவாய் மனிதி... வெளியே வா! #மனிதிவெளியேவா #ManithiVeliyeVaa

‘எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு வராது’ என்றே என் நண்பர்களிடம் கூறி வந்து இருக்கிறேன். ஆனால், இப்போதுதான் தெரிகிறது, நான் அதற்கான உடல் உழைப்பினை பார்த்து பயந்தே, விளையாட்டில் இருந்து ஒதுங்கினேன் என. அதனால் விளையாட்டுத்துறையில் இருக்கும் பெண்களின் மீதான மதிப்பு தற்போது இன்னும் அதிகரித்திருக்கிறது. விளையாட்டுத் துறையில் பெண்களின் உழைப்பு என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதுவும் நமது நாட்டில் , நமது மாநிலத்தில்  விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையை யோசிக்கும்போது, அவர்களது சாதனைகள் போற்றுதலுக்கு உரியவை.

ஆனால், உண்மையில் பெண்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் விளையாட்டுத்துறையில் வழங்கப்படுவதில்லை. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நாம் அப்படித்தான் பழகி இருக்கிறோம். நாம் என்றுமே 'ஆண்கள் கிரிக்கெட் அணி' என்று கூறியது கிடையாது. ஆனால், 'பெண்கள் கிரிக்கெட் அணி' என்று குறிப்பிடுவோம். 'கிரிக்கெட் அணி' என்று கூறினாலே ஆண்கள் அணிதான் என்று நமக்குப் புரிந்துவிடும். எப்படி மனிதன் என்ற சொல் ஆணையும், அனைத்து மனித சமூகத்தையும் குறிக்கும் பொதுச் சொல் ஆனதோ, எப்படி அதில் ‘மனிதி’ புதைந்துக் கிடக்கிறாளோ, அதேபோலத்தான் விளையாட்டுத்துறையில் புதைந்து கிடக்கும் ‘மனிதிகள்’ ஏராளம். விளையாட்டுத்துறைக்குள் ஒரு பெண்ணாக நிற்பது என்பது மிகப்பெரிய சவால்.

முதலில் விளையாட்டுத்துறைக்குள் நுழைவதே சவால். விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள். புத்தக வாசனையை அதிக அளவிலான பெண்கள் சுவாசிப்பதே சில காலமாகத்தான். அவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அனுப்புவதே பெற்றோர்களுக்கு மிகப்பெரிய விஷயம். பெண் குழந்தைகளை பெற்று எடுப்பவர்கள், படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பதையே அவர்களின் லட்சியமாக கொண்டுள்ளனர். அதையும் தாண்டி விளையாட்டு என்று போக ஆசைப்பட்டால்? அவர்களுடைய முதல் தடைக்கல்லே பயிற்சிக்கென மைதானம் இல்லாமல் இருப்பதுதான். பல பள்ளிகளில், பல நகரங்களில், பல வீடுகளில் கழிவறையே இல்லாத மோசமான சூழ்நிலையில்  மைதானத்திற்கு எங்கே போவது?

சென்னை போன்ற பெரு நகரத்தில் என்னுடைய தோழி ஒருத்தி, பயிற்சி எடுக்க மைதானத்தில் அனுமதி பெறுவதற்கு மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டாள்.  நம்மூரில் ஒரு பெண், 'விளையாட வருகிறேன்' என்றாலே,  'யார்றா அது...?' என ஒரு நொடி புருவத்தை உயர்த்திப் பார்ப்பவர்கள்தான் அதிகம். அந்த பெண்ணின் பொருளாதார பின்புலத்தை ஆராய்ந்த பிறகுதான், மைதானம் பற்றிய பேச்சுக்கு வருவார்கள். கிராமத்துப் பெண்களின் நிலை இன்னும் மோசம். இவர்கள் தங்கள் பயிற்சியை கண்மாய், ஆறுகள் போன்ற இடங்களில் வைத்தே வளர்த்துக்கொள்கின்றனர்.

இதையும் தாண்டித்தான் பெண்கள் போட்டிகளிலேயே பங்கேற்க முடிகிறது. அதன் பின் அந்த பெண் போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவளது முதல் பிரச்னையே வெளியூருக்கு செல்வதுதான். மாவட்ட அளவிலானப் போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள், தென் இந்திய அளவிலான போட்டிகள், இந்திய அளவிலான போட்டிகள் என்று போட்டிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. ‘விளையாட்டு எல்லாம்  பொம்பள புள்ளைக்கு அவசியமா’ என்பதுதான் முதல் கேள்வி. அடுத்து மொத்த குடும்பமும், சில நேரங்களில் யார்யாரோ உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுவார்கள். பெண்களின் மனதை மாற்ற முயற்சிப்பார்கள். அந்த பெண்ணுக்கு அவர்களது பெற்றோர்கள் ஆதரவு தந்தாலும் கூட, அதை கெடுக்க  என்னென்ன சூத்திரங்கள் இருக்கிறதோ அத்தனையும் கையாளுவார்கள்.



கடைசியில் வெளியூருக்கு  போவதென்று முடிவெடுத்தால், வெளியூருக்கு செல்வதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று கலாச்சார சிக்கல். தமிழகத்தின் கடைகோடியில் இருந்து, மும்பை நகருக்கு செல்லும் ஒரு பெண்ணையும் அந்த பெண்ணின் பெற்றோரையும் நினைத்துப் பார்த்தால் அது புரிந்து விடும். அடுத்த சிக்கல் பொருளாதாரம் சார்ந்தது. வெளியூருக்குச் செல்வதென்றால் அதற்கு ஆகும் செலவே தனி. அதுமட்டுமல்லாமல், போட்டியில் முன்னேற முன்னேற  தனிப் பயிற்சியாளர் வைத்துக் கொள்வது தொடங்கி உண்ணும் உணவு வரை எக்கச்சக்க செலவுகள் உள்ளன.

இதையும் தாண்டி மாதவிடாய் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு என்று எக்கச்சக்கமான சிக்கல்கள் உள்ளன. பெண்களின் எல்லாக் காலங்களும், எல்லா நாட்களும் ஒரு குறிப்பிட்ட  விஷயத்தை சுற்றிதான் நடக்கும். அதுதான் திருமணம். முடி வெட்டுவது மற்றும் நகை வாங்குவதில் தொடங்கி ஒரு பெண் குழந்தை, பிறந்ததில் இருந்தே அவளது வாழ்க்கை திருமணத்தை சுற்றித்தான் நடக்கும். அப்படிப்பட்ட சமுதாயத்தில், 'விளையாட்டில் இருக்கும் பெண்களுக்கு திருமணம் நடக்காது' என்ற பயம் பரவலாக இருக்கிறது. அடுத்ததாக, ‘மிகவும் போற்றுதலுக்குரிய’ கன்னித்திரை கிழிந்துவிடுமோ என்ற பயமும் பெற்றோர்களுக்கு தொற்றிக் கொள்கிறது.

விளையாட்டு என்பது சற்றுக் கடினமான  ஒரு துறை. அதில் ஒரு பெண் ஈடுபட்டு பயிற்சி செய்யும் போது அவளுடைய தோல், எலும்புகள் உறுதி அடைந்து, மிருதுத்தன்மையை இழக்க வாய்ப்பு உள்ளது என்பது மட்டும்தான் உண்மை. மற்றபடி அனைத்து பிரச்னைகளும் இயல்பான ஒன்று என்பதை  புரிந்து கொள்வது அவசியம்.  அதிகப்படியான பயிற்சிகள் எலும்பு தேய்மானத்தை நிச்சயம் ஏற்படுத்தும். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதலில் இருக்கும் பெண்களுக்கு, திருமணத்திற்கு முன்பே கன்னித்திரை பாதிப்புகள் ஏற்படலாம். அது பயப்படக்கூடிய பிரச்னை இல்லை. இன்று பெரிய அளவில் விபத்துக்களை சந்திக்கும் பெண்களுக்கு கூட கன்னித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை ஒரு பிரச்னையாக கருதி, நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விளையாட  அனுமதிப்பது இல்லை. மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்னைகள் ஏற்படும் என்பதுபோன்ற தவறான வதந்திகளும் உள்ளன. இவையெல்லாம் உடைத்து எறியக்கூடிய பிரச்னைகளே. எனினும் விளையாட்டில் இருக்கும் பெண்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

மேலும் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. அது போன்று எனர்ஜிக்காக  மாத்திரைகள் பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பயிற்சிகளை ஒரே நாளில் செய்வதையும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அது உடலில் இருக்கும் ஆற்றலைக் குறைக்க வாய்ப்பு உண்டு. எனவே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தால் அதற்கு உடல் பழக்கப்பட்டுவிடும்; பாதிப்புகளும் இருக்காது. மற்றபடி, 'மற்ற துறைகள் போன்று விளையாட்டும் ஒரு துறையே' என்பதை மனதில் கொண்டு,  தடைகளை ஆற்றலுடன் தாண்டிச் செல்லலாம். 

உலகம் உனதாய் வரைவாய் மனிதி! வெளியே வா...!

- ரமணி (மாணவப் பத்திரிகையாளர் )


எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ