Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊழல், பாலியல் புகார்... விளையாட்டு வீரர்களை வெறுப்பேற்றும் விளையாட்டு ஆணையம்!

 

 

ந்திய விளையாட்டு உலகத்தின் இதயம் 'சாய்'. SPORTS AUTHORITY OF INDIA என்பதின் சுருக்கமே 'சாய்'.  'சாய்'தான் இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களையும், விளையாட்டு வீரர்கள் களையும் உருவாக்கி வரும் ஒரு அமைப்பு.  

இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு, அரசின் சார்பில் பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டது போல விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 1961-ல் உருவான தேசிய விளையாட்டு நிறுவனம், பின்னாளில் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மையமாக மாறியது. அதன் பிறகு 1984-ல் இந்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் கீழ் இணைந்து, இந்திய விளையாட்டு ஆணையமாக உருப்பெற்றது.

'சாய்' அமைப்பை கட்டுப்படுத்துவது யார்... யார்?

இந்த ஆணையம் முழுக்க முழுக்க, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் தலைவராக விளையாட்டுத் துறை அமைச்சரும், துணைத் தலைவராக துணை அமைச்சர் அந்தஸ்தில் ஒருவரும், உறுப்பினர்களாக ஏழு பேர் பஞ்சாப், தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு அடுத்து லோக்சபா எம்.பி இருவரும், ராஜ்ய சபா எம்.பி ஒருவருமாக மூவர் இருப்பார்கள். இவர்களுக்கும் அடுத்தபடியாக ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் செகரட்டரி, இயக்குநர் பதவிகளில் இருப்பார்கள்.

மேலும் ரயில்வே, ஒலிம்பிக் சங்கம், இந்திய கலாசார சங்கம், இந்திய பல்கலைக்கழகங்களின் தலைவர், சி.ஐ.ஐ தலைவர், எஃ.ஐ.சி.சி.ஐ என மொத்தம் 22 அமைப்புகளை சேர்ந்தவர்கள் 'சாயில் இடம்பெற்று உள்ளனர். இவற்றில் ஆதிக்கம் செலுத்துவது பெரும்பாலும் பெறு நிறுவன அதிபர்களே! இப்படியான  ஆணையம்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

இதுவரை என்ன சாதித்து இருக்கிறது சாய்?

11 இடங்களில் விளையாட்டு சம்பந்தமான படிப்புகள் என்று ஆரம்பித்து பெங்களூரு, காந்திநகர், சண்டிகர்,கொல்கத்தா, இம்பால், கவுகாத்தி, போபால், லக்னோ, சோனா பேட் என்று  இந்தியா முழுவதும் ஒன்பது ரீஜனல் சென்டர்களை வைத்துக்கொண்டு, 130 கோடி இந்திய மக்களின் விளையாட்டுகளை தீர்மானித்து வருகிறது.

இவ்வளவு பெரிய மக்கள் தொகைக் கொண்ட இந்திய நாடு, ஏன் இன்னமும் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை என்பதற்கான பதில் இதற்குள்ளேயே அடங்கி இருக்கிறது.

“கடந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் 1643 கோடி ரூபாயை விளையாட்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கினார்கள். இந்த ஆண்டு 1,592 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த பணத்தை வைத்துக்கொண்டு விளையாட்டு மேம்பாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது" என்கிறார்கள் விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும் 

உலக ஒலிம்பிக் போட்டியும், இந்தியாவின் பதக்கப் பட்டியல்களும்

1900-ம் ஆண்டு உலக ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வாங்கிய இந்தியா , அதன் பிறகு பதக்கம் வென்றது 1952-ல்தான். மல்யுத்தத்தில் பதக்கம் கிடைத்தது. அதன் பிறகு  1996-ல்தான் லியாண்டர் பயஸ் வெண்கலம் வாங்கினார். அதனைத் தொடர்ந்து ஒற்றை எண்ணிக்கையிலேயே பதக்கம் வென்று வருகிறோம்.

குழு விளையாட்டுகளை எடுத்துக்கொண்டால், 1928 ம் ஆண்டு ஹாக்கியில்  தங்கம் வென்றோம். தொடர்ந்து 1932, 36, 48, 52, 56, 64 மற்றும் 1980 என்று எட்டு தங்கப்பதக்கங்கள் பெற்றோம். இதுதவிர, வெள்ளிப் பதக்கம் ஒன்றும், வெண்கலப் பதக்கம் ஒன்று கிடைத்தன. இதுதவிர காமன்வெல்த் போட்டிகள், ஆசியன் கேம்ஸ் என்று பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளிலும் நமது பங்களிப்பு குறிப்பிடும்படியாக இல்லை என்பதுதான் உண்மை.

இப்பொழுது என்ன நடக்கிறது சாயில்?

ஒலிம்பிக்கிலும், சர்வதேச விளையாட்டுகளிலும் நம்மால் சோபிக்க முடியாமல்போக என்ன காரணம், சாய் என்னதான் செய்துகொண்டிருக்கிறது? இதுபற்றி சாய் சென்டர்களில் பயிற்சி எடுத்து வரும் மாணவர்களிடம் கேட்டோம்.

தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினார்கள் அவர்கள்.

 ''சாயில் அட்மிசன் வாங்குவது முதல் உள்ளே வருவது வரை எல்லா விஷயத்திலும்,  இங்கு பவர்புல்லாக கோலோச்சும் ஆசாமிகளை பல்வேறு வழிகளிலும் திருப்திப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். விளையாட்டு வீரர்களுக்கு உணவு, உடை, விளையாட்டுச் சாதனங்கள் வாங்குவது என்று அன்னைத்திலும் ஊழல்தான். எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இதுபற்றியெல்லாம் பேசாமல் இருந்து வருகிறோம். இதைவிட பெரியக் கொடுமை விளையாட்டுத் துறையிலும் புகுந்துவிட்ட அரசியல். அரசியல்வாதிகளின் உறவினர்களின் தலையீடு, தொழிலதிபர்களின் சிபாரிசு போன்ற விஷயங்களும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் திறமையான விளையாட்டு வீரர்கள் முன்னுக்கு வரமுடியாத நிலைமை.

அதேபோல், ஒரு விளையாட்டு மாணவனை அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை என்றால், அவனின் எதிர்காலம் அவ்வளவுதான். அந்த மாணவன் எவ்வளவு திறமையான ஆளாக இருந்தாலும் அவனை போட்டிகளில் பங்கெடுக்க விடாமல் விலக்கி வைத்து விடுவார்கள் .ஒரு வருடத்திற்குள் அந்த மாணவன் சாய் சென்டரை விட்டு அவனாகவே வெளியேறும்படி செய்துவிடுவார்கள். அப்படி மன ரீதியாக வெறுத்து ஒதுங்கியவர்களின் பட்டியல் பெரிது.'' என்கிறார்கள் வேதனையுடன்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா சாயில்?

இந்த ஆணையத்தில் பெண் விளையாட்டு வீர்ர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தோம். அதுகுறித்து கிடைத்த தகவல்களும் அதிர்ச்சிகரமானவை. 

" பெண் கோச்சுகளுக்குப்பதிலாக பெரும்பாலும் ஆண் கோச்சுகளே வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர் நல்லவர்களாக இருந்தாலும் பெரும்பாலானோர், குறுநில மன்னர்களாகவே நடந்துகொள்வார்கள். அவர்களின் சில விஷயங்களுக்கு வீராங்கனைகள் உடன்பட்டால் மட்டுமே அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்; இல்லையெனில் புறக்கணிக்கப்படுவார்கள். பல்வேறு ஏழ்மையான பெண்கள், நடுத்தர வர்க்க பெண்கள்தான் இவர்களின் டார்க்கெட். அவர்களின் அத்துமீறல் குறித்து தெரிவிக்கப்பட்ட புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. சாயின் தலைமை இடமான டெல்லிக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் எழுத்துப் பூர்வமாக சென்றிருக்கின்றன.

சமீபத்திய உதாரணம், தமிழ்நாட்டில் மாயவரத்தில் உள்ள சாய் சென்டரில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சில கோச்சுகள், அங்குள்ள  16 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்களுக்கு பல்வேறு வகையிலும் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவர்களின் பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்கள் சாய்சென்டரை முற்றுகையிட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பெண்கள் விளையாட்டுத் துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.'' என்று புலம்புகிறார்கள்.

பாலியல் தொல்லையால் பலியான கேரள வீராங்கனை... மூடி மறைக்கிறதா சாய் ?

சமீபத்தில் கேரள மாநிலம் அலப்பியில் உள்ள சாய் சென்டரில், நான்கு பெண் விளையாட்டு வீரர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்கள். அதில் அபர்ணா என்கிற பெண்  பரிதாபமாக இறந்தார். தெரஷா ஜேக்கப், சபிதா சந்தோஷ் , ஷில்பா ஆகிய மூன்று பெண்களும் ஆபத்தான நிலையில் இருந்து காப்பற்றப்பட்டார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. பதறிப்போன விளையாட்டுத்துறை அமைச்சரும் சாய் நிர்வாகிகளும், கேரளாவுக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநில அரசின் தலையீடு இல்லாதவாறு விசாரணைகளை செய்து வந்தனர்.

சம்பந்தப்பட்ட பெண்கள் நால்வரும், தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வாங்கியவர்கள். அவர்களின் எதிர்காலம் பெரிய அளவில் இருக்கும் என்று கேரள மாநிலமே நம்பியது. ஆனால், தற்கொலைக்கு துணியும் அளவுக்கு அவர்களை ஆளாக்கிய சூழல் என்ன என்பது புரியாத புதிர்தான்.

" நால்வரும் மது அருந்தினார்கள். சீனியர் தட்டிக்கேட்டதால் விசாரணைக்குப் பயந்து நால்வரும் இப்படியொரு  முடிவை எடுத்துள்ளனர்'' என்று அங்கு பணி புரியும் கோச் ராகிணி மீடியாக்களிடம் சொன்னார். ஆனால் இந்தக் குற்றசாட்டை மறுக்கிறார்கள், அங்கிருக்கும் சில வீரர்கள்.

" தற்கொலை செய்து கொண்ட அபர்ணாவும், தற்கொலை செய்ய முயன்ற மற்ற மூன்று பெண்களும் இளம் வயது வீரர்கள். இளமை துடிப்புடன் இருப்பார்கள். சமீபத்தில் கேரளாவில் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடந்தபோது, 'சாயை' சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் அபர்ணாவை தனியாகச் சந்தித்து, சர்வதேச விளையாட்டுக்கு அழைத்துச் செல்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அபர்ணாவும் அதை நம்பியுள்ளார். அதையடுத்து விடுமுறை நாள் ஒன்றில், கேரளாவில் உள்ள கெஸ்ட் ஹவுசுக்கு தனியாக அழைத்திருக்கிறார் முக்கியப் புள்ளி. ஆனால், அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட அபர்ணா அதைத் தவிர்த்துவிட்டார். அதனால் அபர்ணாவை டார்க்கெட் செய்து, தொடர்ந்து பல்வேறு வகையில் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். அதனால் மனமுடைந்து இருந்தார் அபர்ணா. எனினும் வெளியில் எவரிடமும் இதைப்பற்றி அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.

இதுபோலதான் மற்ற மூன்று பெண்களுக்கும் வேறு வேறு நபர்களால் தொந்தரவுகள் தொடர்ந்தன. நால்வரும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தற்கொலை நாடகம் நடத்த முடிவெடுத்தார்கள். இதன் மூலம் பிரச்னையை வெளிஉலகத்துக்கு கொண்டுசெல்லலாம் என்பது அவர்கள் திட்டம். ஆனால் அது விபரீதத்தில் முடிந்துவிட்டது. ஒருவர் நிஜமாகவே பலியாகிவிட்டார். பிரச்னையும் வேறு திசைநோக்கிச் சென்றுவிட்டது'' என்று வேதனையுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள்.

இதுபோலதான் இந்தியா முழுவதும் சாய் சென்டர்களின் நிலைமை. பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள் மிக மிகக் குறைவு. தவிர பல்வேறு பயிற்சியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படுவதால், அவர்கள் பல்வேறு ஊழல் முறைகேடுகள், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள்.  வெளியே பிரச்னை தெரிந்தால், அப்படியே கமுக்கமாக வேலையை விட்டு வெளியே போய் விடுகின்றனர். அதன் பிறகு புகார் கூறிய மாணவர்கள் கட்டம் கட்டப்பட்டு அவர்களின் நிலைமை வேறு மாதிரி ஆகிறது. இதுதான் இன்றைய சாயின் நிலை.

'இந்த நிலையில் எப்படி இந்தியா சர்வதேச அளவில் பதக்கங்கள் வாங்க முடியும்... ஒலிம்பிக் போக முடியும்? 'என்றார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலையெழுத்தை மாற்றுவது யார்?

-சண்.சரவணக்குமார் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ