Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 ஜாம்பாவான்கள்... அசாத்திய திறமைகள்!

நாக் அவுட் நாயகன் முகமது அலி, கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேன், பீலே, தியான்சந்த் இவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள். விளையாட்டுத் துறையில் இவர்கள் நுழைந்தது குறித்தும், சாதித்தது குறித்தும் சில நினைவலைகள் இங்கே....

மேஜிக்மேன் தியான்சந்த்

இந்திய ஹாக்கியில் எத்தனையோபேர் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவுக்கு வரலாம். சிலர் காலப் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தியான் சந்த் பெயர் மட்டும் இன்றளவும் மறக்கப்படாமல் உள்ளது. அவரது பெயரில் இன்றளவும் பல விருதுகள் வழங்கபடுகின்றன.


உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில்,  1905 ஆகஸ்ட் 29-ம் தேதி, ராணுவக் குடும்பத்தில் பிறந்தார் தியான் சந்த்.  ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும், இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல். 1922 முதல் 1926 வரையிலான காலகட்டம் இவரது வாழ்க்கையில் திருப்புமுனையான காலம். ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தியான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட தொடர். அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, 15 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்தப் போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில், லான்ஸ்நாயக்காக பதவி உயர்வு பெற்றார் தியான் சந்த்.

'ஹாக்கி என்றால் தியான் சந்த், தியான் சந்த் என்றால் ஹாக்கி' என அவர் விளையாடியக் காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு 'மேஜிக் ஷோ' போன்றுதான் இருக்கும். அதன் காரணமாக பின்னாளில் 'மேஜிக் மேன்' என்றே அழைக்கப்பட்டார்.

டிசம்பர் 03, 1979-ல் மறைந்தார் தியான்சந்த். இன்றைக்கும் ஹாக்கி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது தியான்சந்த் எனும்போது, நிச்சயம் அவர் மேஜிக்மேன்தானே...?!

முகமது அலியின் முதல் பன்ச்

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள்... அதுதான் முகமது அலி. குத்துச்சண்டை உலகின் பிதாமகன்.

1942, ஜனவரி 17-ம் தேதி அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தவர். காசியஸ் மார்செலஸ் கிளே. இதுதான் முகமது அலியின் இயற்பெயர். முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்தத்திலேயே ஊறியிருந்தது. அலியின் 12 வது வயதில், அவரது சைக்கிளை ஒருவன் திருட முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்துகள் விட்டாராம். அவரது குத்துச்சண்டை வாழ்க்கை அப்போதே தொடங்கிவிட்டது.


ஒருமுறை, நடப்பு சாம்பியன் சோனி லிஸ்டனுடன் போட்டியிட்டார் அலி. போட்டிக்கு முன்பாக, “லிஸ்டன் ஒரு கரடி. அவரை வென்ற பிறகு ஒரு மிருக காட்சி சாலையை அவருக்குப் பரிசளிப்பேன்’’ என்று கூறினார் அலி. சொன்னதைப் போலவே லிஸ்டனை பொளந்து கட்டினார் அலி. லிஸ்டனுக்கு மருத்துவ உதவி செய்த அவரது மருத்துவர்கள், எவருக்கும் தெரியாமல் லிஸ்டனின் கிளவுசில் ஏதோ மருந்தை தடவிவிட, சண்டையின்போது அந்த மருந்தின் விளைவால் அலியின் பார்வை மங்கியது.

லிஸ்டன் இதற்கு முன்பும் பலமுறை இப்படி பல வீரர்களை சூட்சுமமாக வீழ்த்தியுள்ளார். கண்ணெரிச்சலோடும், பொங்கிவழியும்  நீரோடும் விளையாடிய அலி, தனது கோபத்தை பன்ச்களில் காட்டினார். லிஸ்டனை நிலைகுலைத்து நாக்-அவுட் முறையில் வென்றார். தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே நாக்-அவுட் முறையில் முகமது அலி  தோற்றுள்ளார் .

பிளாக் பியர்ல் பீலே

பீலே என்றழைக்கப்படும் எடிசன் அரன்டெஸ் டொ நாசிமென்டோ,  பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர். கால்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர். உலக அமைதிக்கான பரிசு பெற்றவர் பெலே. 22 ஆண்டு கால கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1,282 கோல்களையும் 92 முறை ஹாட்ரிக் கோல்களையும் அடித்தவர்  பீலே. மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுகொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். கால்பந்தாட்ட வீரர்கள் இவரை 'கருப்பு முத்து' என்று இன்றளவும் அழைக்கிறார்களாம்.


எங்கே வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை அவர் ஏற்றுக்கொண்டு விடுவாரோ என்று அஞ்சிய பிரேசில் அரசு, பீலேவை தேசியப் புதையலாக அறிவித்தது. 1970- ல் பீலேவின் ஆட்டத்தை காண்பதற்காக, நைஜீரியாவில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்கள், 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்து மேட்சை கண்டு களித்துள்ளனர். 1978-ம் ஆண்டு அவருக்கு அனைத்துலக அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. அனைத்துலக ஒலிம்பிக் குழு, இருபதாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அறிவித்தது

பிதாமகன் பிராட்மேன்

கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேன். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 99.94 என்பது சாதாராணமான விஷயம் அல்ல. அதனாலேயே 'கிரிக்கெட் உலகத்தின் கடவுள்' என்று வர்ணிக்கப்பட்டவர் இந்த பிராட்மேன். ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த பிராட்மேன்,  ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன். மொத்தமே 52 டெஸ்ட் போட்டிகளிலும், 234 முதல் தரப்போட்டிகளிலும் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் 6, 996. முதல் தரப் போட்டிகளில் 28,067 ரன்களை எடுத்துள்ளார்.


சதங்களின் நாயகன். அதேபோல விளையாடும் ஸ்டைலால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் பிராட் மேன். டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களையும், முதல் தரப் போட்டிகளில் 117 சதங்களையும் அடித்துள்ளார். அதேபோல் டெஸ்ட்டில் 13 அரை சதங்களும், முதல்தரப் போட்டிகளில் 69 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

அந்த காலகட்டத்தில், பந்துவீச்சாளர்கள் இவருக்கு பந்து வீசவே பயப்படுவதாக வெளிப்படையாக பேசினார்கள். அதிகபட்ச ஸ்கோரிலும் இவர்தான் டாப்...! டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது அதிகபட்ச ஸ்கோர் 334. முதல்தரப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 452 ரன்களை விளாசியுள்ளார்.

பேட்பாய் மெக்கென்ரோ

ஜான் மெக்கென்ரோ, 'டென்னிஸ் விளையாட்டில் பேட்பாய்' என்று பேசப்பட்டவர். தான் சம்பாதித்த பாதி பணத்தை அபராதமாக கட்டியவர் இந்த மெக்கென்ரோ.1980 களில் இவரது நிறை குறைகளைப் பற்றி பேசதவர்கள் யாருமே இருக்க முடியாது.

1959 பிப்ரவரி மாதம் 16ம் தேதி பிறந்தவர். அமெரிக்க டென்னிஸ் வீரர். இடது கை ஆட்டக்காரரான இவர், 1980 களில் உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரராக திகழ்ந்தார். இவர் 1981, 83, 84ம் ஆண்டுகளில் விம்பிள்டன் பட்டங்களை வென்றார். பிரெஞ்ச் ஓப்பன் பட்டத்தை 1984 ம் ஆண்டிம், அமெரிக்க ஓப்பனை 1979, 80, 81, மற்றும் 1984 ம் ஆண்டுகளிலும் வென்றார். விம்பிள்டன் போட்டியில் தொடர்ந்து 4 முறை பட்டம் வென்ற பியார்ன் போர்க், 5 வது முறை பட்டம் வெல்ல ஜான் மெக்கென்ரோவிடம் மோதினார்.


இது ஜான் மெக்கென்ரோவின் முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டி. இந்த ஆட்டத்தின் 4வது சுற்றில்  பியார்ன் போர்க், மெக்கென்ரோவிடம் 20 நிமிடங்களுக்கு மேலாகப் போராடி வென்றார். 'அடுத்த ஆண்டு நான் போர்க்கை வெல்லுவேன்' என்று சொல்லி அதேபோல் அவரை வென்றார் மெக்கென்ரோ. அந்த ஆட்டம்தான் விம்பிள்டன் ஆட்டங்களிலேயே தலைச்சிறந்த ஆட்டம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த ஆண்டு மெக்கென்ரோ 10 ஒற்றையர் ஆட்டத்திலும், 17 இரட்டையர் ஆட்டத்திலும் பட்டம் வென்றார். இந்த ஒரே வருடத்தில் 27 பட்டங்கள் இன்றளவும் உலக சாதனையாக கருதப்படுகிறது. இவர் போட்டிகளில் விளையாடும் பொழுது பல முறை நடுவர்களை திட்டி அபராதம் கட்டியிருக்கிறார். உலகின் தலைச்சிறந்த டென்னிஸ் வீரராக 1999ல் பட்டியலில் இடம் பெற்றார்.

இவர் தற்பொழுது டென்னிஸ் ஆட்டத்தின் வர்ணனையாளராகத் திகழ்கிறார்.

எம்.திலீபன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close