Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சின், தோனி, கோலியை தெரிந்த உங்களுக்கு இந்த ஐவரை பற்றி தெரியுமா...?

ரொனால்டோ அல்லது மெஸ்ஸியின் ரசிகர்களா நீங்கள்? இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் யூரோ கோப்பைக் கால்பந்தை நள்ளிரவு வரை விழித்திருந்து பார்க்கும் கால்பந்து வெறியர்களா நீங்கள்? இந்தியாவில் கால்பந்து எப்போது பிரபலமடையும் என்று காத்திருக்கிறீர்களா? ‘உலகத்தரம் வாய்ந்த ஒரு கால்பந்து வீரன் இந்தியாவில் உருவாக மாட்டானா ‘ என்ற ஏக்கம் உங்களுக்குள் இருக்கிறதா?

உங்களுக்காகத்தான் இக்கட்டுரை…

கவாஸ்கர், சச்சின், கோலி என்று கிரிக்கெட்டுக்கு மட்டும் நட்சத்திரங்களை அள்ளிக் கொடுத்த தேசம், பிற விளையாட்டுகளுக்கு ஜாம்பவான்களைக் கிள்ளியே கொடுத்தது. அதிலும் குறிப்பாக கால்பந்து… ஐ.எஸ்.எல் என்ற தொடர் தொடங்கும்வரை நம் நாட்டில் இத்தனை கால்பந்து வீரர்கள் இருக்கிறார்களா என்பது கூட நமக்குத் தெரியாது. ஆனால் நம் தேசத்திலும் உலகை ஆச்சர்யப்பட வைத்த கால்பந்து வீரர்கள் ஜனித்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு நட்சத்திரம் ஜொலித்திருக்கிறது. ஆனால் கிரிக்கெட் எனும் சூரியனின் வெளிச்சத்தால் அந்த நட்சத்திர வெளிச்சம் நம் கண்ணுக்குத் தென்படாமலேயே போய்விட்டது. அப்படி ஒவ்வொரு தருணத்திலும் கால்பந்தில் கலக்கிய இந்திய வீரர்கள் சிலரைப் பற்றிய பதிவுகள் இங்கே...


 

சைலேந்திர நாத் மன்னா

இந்தியாவின் தலைச்சிறந்த தடுப்பாட்டக்காரரான மன்னா, சுமார் 19 ஆண்டுகள் புகழ்பெற்ற மோகன் பாகன் கிளப் அணிக்காக விளையாடி சாதனை படைத்தவர். இந்திய கால்பந்து அணி ஒலிம்பிக் தொடர்களில் விளையாடியுள்ளது என்று சொன்னால் நம்ப முடியுமா உங்களால்? கோல் கம்பத்தின் முன்பு மிகப்பெரிய அரணாய் விளங்கிய இவர், 1948ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர். 1953 ம் ஆண்டு ஃபிஃபா அமைப்பு வெளியிட்ட உலகின் தலைச்சிறந்த 10 ஃபுட்பால் கேப்டன்களின் பட்டியலில் இடம்பிடித்து, உலகையே ஆச்சர்யப்பட வைத்தார் மன்னா. ஆம் யாரும் எதிர்பாராத இந்திய அணியை, 1951 ல் ஆசியக் கோப்பையை வெல்ல வைத்தவர் இந்த ஜாம்பவான். அதுமட்டுமல்ல 2000 ம் ஆண்டு ‘ஃபுட்பாலர் ஆஃப் தி மில்லெனியம்’ பட்டியலிலும் இடம்பிடித்து மாபெரும் சிறப்பைப் பெற்றார். “இந்திய கால்பந்து கூட்டமைப்பு, நல்ல பணபலத்தோடு இருந்திருந்தால் இன்னும் பல நல்ல கால்பந்து வீரர்களை உருவாக்கியிருக்கலாம்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் மன்னா.


பிரதீப் குமார் பேனர்ஜி

‘ஃபுட்பாலர் ஆஃப் தி மில்லெனியம்’ பட்டியலில் இடம்பெற்ற இரண்டாவது மற்றும் கடைசி இந்தியன் பி.கே.பேனர்ஜி. 1960 ல் பிரான்சிற்கு எதிரான ஒலிம்பிக் போட்டியில் கோலடித்து அசத்திய பேனர்ஜி , ஒரு அசத்தல் முன்கள வீரர். இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த இந்திய கால்பந்து வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேனர்ஜி, தனது வேகத்தால் எதிரணியை நிலைகுலைய வைப்பவர். இவர் பெற்ற ஒரு சில சிறப்புகள் எந்த வீரரும் பெறாதவை. அர்ஜுனா விருது பெற்ற முதல் கால்பந்து வீர இவர்தான். ஃபிஃபாவின் ‘ஃபேர் பிளே’ விருது பெற்ற முதல் ஆசியனும் இவர்தான். இவை அனைத்துக்கும் மேல் ஃபிஃபா வழங்கும் மிகவும் கவுரவமான விருதான ‘சென்டனியல் ஆஃப் மெரிட்’ விருதைப் பெற்றுள்ளார் பானர்ஜி.  கால்பந்திற்காக மிகச்சிறந்த பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும் அவ்விருதை அர்ஜென்டினா ஜாம்பவான் மரடோனா கூட வென்றதில்லை.

 


ஐ.எம்.விஜயன்

சர்வதேச கால்பந்தில் மூன்றாவது அதிவேக கோலடித்தவர் ஒரு இந்தியர் என்று சொன்னால் புல்லரிக்கிறதா?  அவர் திமிரு மற்றும் கொம்பன் படங்களில் வில்லனாக நடித்தவர் என்றால் அதை நம்ப முடிகிறதா? உண்மைதான். கேரளாவைச் சார்ந்த அதிரடி நாயகன் விஜயன்தான் அவர். 12 நொடிகளில் அவர் அடித்த கோல்தான் சர்வதேச அரங்கில் மூன்றாவது அதிவேக கோல். சிறு வயதில் சோடா பாட்டில் விற்றுக்கொண்டிருந்த விஜயனின் வாழ்க்கையில், 13 வயதில் கேரள போலீசில் சேர்ந்த பிறகுதான் வெளிச்சம் தோன்றியது. அதன்பின்னர் கால்பந்து அரங்கை பூட்டியாவுடன் இணைந்து கலக்கிய விஜயன் 3 முறை, ஆண்டிற்கான சிறந்த இந்திய கால்பந்து வீரர் விருதினை வென்றுள்ளார். 2003ல் அர்ஜுனா விருது பெற்ற விஜயன், சாந்தம் எனும் மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.


பைசூங் பூட்டியா

இந்திய கால்பந்தின் மிகப்பெரிய அடையாளம் இந்த சிக்கிம் சூறாவளி. இந்தியாவிற்காக 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பூட்டியா, 43 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். சிக்கிம் ஸ்னைபர் என்றழைக்கப்படும் பூட்டியா ஸ்டைல், வேகம், நேர்த்தி ஆகியவற்றை இந்திய காலபந்திற்குக் காட்டியவர். இங்கிலாந்தைச் சேர்ந்த கிளப் அணியான பர்ரி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஐரோப்பிய கால்பந்து கிளப்பிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்தியன் என்று பெருமையைப் பெற்றார். பல ஐரோப்பிய அணிகளும் பல முறை பூட்டியாவை ஒப்பந்தம் செய்ய முயன்றுள்ளன. திபெத் சுதந்திர இயக்கத்தை ஆதரித்து, ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் மிகவும் கவுரவமான வாய்ப்பை மறுத்தபோது, மனிதனாகவும் உயர்ந்து நின்றார் பூட்டியா. இவரோடு இணைந்து விளையாடிய முன்னாள் வீரர் விஜயன் பூட்டியாவை, “கடவுள் இந்தியக் கால்பந்திற்குக் கொடுத்த பரிசு” என்று புகழ்ந்துள்ளார். அது 100 சதவிகிதம் உணமைதான்.
 

சுனில் சேத்ரி

நம்மில் பலருக்கும் இந்தப் பெயர் பரிட்சயம்தான். இந்திய கால்பந்து அணியின் இப்போதைய கேப்டன் சேத்ரி, 50 சர்வதேச கோல்களை அடித்து கோல் எண்ணிக்கையில் மெஸ்ஸியுடன் சமநிலையில் உள்ளார். அட ஆமாங்க... 31 வயதான சேத்ரி, வெறும் 88 போட்டிகளிலேயே இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆரம்ப காலத்தில் விளையாடிய ஸ்போர்டிங் அணியின் இரண்டாம் அணிக்காக, சேத்ரி விளையாடியுள்ளார். 2009 ல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அணியான குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ், சேத்ரியை கிட்டத்தட்ட ஒப்பந்தம் செய்தேவிட்டது. ஆனால் சர்வதேச ரேங்கிங்கில் இந்தியா 70வது இடத்தில் இருந்ததால், வொர்க் பெர்மிட் கிடைக்கவில்லை. அப்படி மட்டும் அவர் ஒப்பந்தம் ஆகியிருந்தால் மிகப்பெரிய பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய இந்தியர் என்னும் அரும்பெரும் சாதனையைப் படைத்திருப்பார். ஐ.எஸ்.எல் தொடரில், மும்பை அணிக்காக ரூ. 1.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சேத்ரி,  4 முறை இந்தியாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். 2007, 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இந்தியா, நேரு கோப்பை வெல்வதற்கு மிகப்பெரிய காரணம் சேத்ரிதான்.

இவர்கள் மட்டுமல்ல, ரசிகர்களால் ‘ஸ்பைடர்மேன்' என்று அழைக்கப்படும் கோல்கீப்பர் சுப்ரதா பால், பீட்டர் தங்கராஜ், கிளைமேக்ஸ் லாரென்ஸ், கோஸ்வாமி போன்ற பல நட்சத்திரங்கள் இந்தியாவிற்காக ஜொலித்துள்ளனர். ஆனால் காலம் அவர்களை ரசிகனின் கண்களில் காட்டவில்லை. இதுபோல் எண்ணற்ற வீரர்கள் இப்போதும் உருவாகிக் கொண்டுள்ளனர். மன்னா கூறியது போல், பணம் இருந்தால் கண்டிப்பாக இந்திய கால்பந்து முன்னேற்றம் காணும். அதைவிட முக்கியமான தேவை, கால்பந்து வீரர்களுக்கு இருக்கிறது. கோலி, யுவராஜ் ஆகியோரைத் தாண்டி இந்திய ரசிகர்கள் நம் கால்பந்து வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். அதை விட வேறு என்ன தேவை அந்த கால்பந்து வீரர்களின் கால்களுக்கு?

-மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ