Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியக் கொடி ஏந்துகிறார் தங்கமகன் பிந்த்ரா!

 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிராகரித்த வாய்ப்பு இப்போது தேடி வந்துள்ளது - ஒலிம்பிக்கில் இந்தியக் கொடி ஏந்துகிறார்  தங்கமகன் பிந்த்ரா. வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள ரியோ ஒலிம்பிக் தொடரில், இந்திய அணியின் தேசியக் கொடியை ஏந்தும் சிறப்பு, துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு, பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 

விளையாட்டு உலகின் மிகப்பெரிய தொடரான ஒலிம்பிக் போட்டி, வரும் ஆகஸ்டு 5ம் தேதி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் தொடங்குகிறது. 28 விளையாட்டுகளில் நடக்கவுள்ள 306 வகையான போட்டிகளில், மொத்தம் 207 நாடுகளைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதுவரை சுமார் 8225 பேர், ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 96 பேர் அதில் உள்ளடக்கம்.
 

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதென்பதே ஒரு விளையாட்டு வீரருக்கு மிகப்பெரிய கவுரவம். அதுவும் குறிப்பாக தொடக்க விழாவில், தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் சிறப்பு அனைவருக்கும் கிடைத்திடாது. அது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்குச் சமமானது. அப்படிப்பட்ட சிறப்பை துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிந்த்ரா வென்றுள்ளார். 2008 ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார் அபினவ். ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கம் அதுதான். அதன் காரணமாக லண்டன் ஒலிம்பிக்கில், இந்திய அணியின் தேசியக் கொடியை ஏந்தும் வாய்ப்பை அவருக்கு அளித்தது இந்திய ஒலிம்பிக் கமிட்டி. ஆனால் தொடக்க விழாவிற்கான அடுத்த 3 நாட்களில் அவருக்கான போட்டி நடைபெற இருந்ததால், போட்டிக்குத் தயாராக வேண்டுமென்று கூறி பிந்த்ரா அவ்வாய்ப்பை மறுத்துவிட்டார். அதனால் அப்போது சுஷில் குமார் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
 

கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களான மல்யுத்த வீரர் சுஷில் குமார், துப்பாக்கிச் சுடுதல் வீரர் விஜய் குமார் ஆகிய இருவரும் இதுவரை இந்த ஒலிம்பிற்குத் தகுதி பெறவில்லை. ஆதலால் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற ஒரே வீரரான பிந்த்ராவை இந்திய ஒலிம்பிக் சங்கம் தேர்வு செய்துள்ளது. இம்முறை இந்த கவுரவத்தை பிந்த்ரா முழுமனதோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

33 வயதான பிந்த்ரா 2014ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள பிந்த்ரா, தொடக்க விழாவில் மட்டுமின்றி, தனது போட்டியின் போதும் நம் தேசியக் கொடியை உயரப் பறக்கவிடுவார் என்று நம்புவோம்!

- மு.பிரதீப் கிருஷ்ணா

( மாணவப்பத்திரிகையாளர்)
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ