Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெஸ்ஸி VS ரொனால்டோ: முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்?

 


“இந்தப் பூமிப்பந்தில் பிறந்தவர்களில் 'பாலன் டி ஓர் விருது' வாங்கியவர்களில் கடைசி ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் பிரேசில் வீரர் ககா. கால்பந்தின் மிக உயரிய விருதினை கிறிஸ்டியானோ ரொனால்டோவோவும், மெஸ்ஸியும் மாறி மாறி 8 ஆண்டுகளாக வாங்கி வருவதை, ‘அவர்கள் பூமியில் பிறந்தவர்களே அல்ல’ என்று கூறி அவர் பாராட்டியிருந்தார். ஆம், கடந்த சில ஆண்டுகளாக கால்பந்தின் கலா ரசிகனை வியக்க வைத்து வரும் இவ்விரு மாயக்காரர்களைப் போல் இன்னொரு வீரர் இப்போது இல்லைதான். அவ்வளவு ஏன்,  பல தருணங்களில் பீலே, மாரடோனா போன்றோரையும் மறக்கடித்து விடுகின்றனர் இவ்விருவரும்.
   

இந்த இருவருக்குமான போட்டி கால்பந்து மைதானத்தில் தொடங்கி, சமூக வலைதளம் வாயிலாக பூமிப்பந்து முழுதும் பரவிக்கிடக்கிறது. ஆனால் அப்போட்டியின் உச்சகட்ட மோதல் அரங்கேறும் இடம் ஸ்பெயின். ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா எனும் இரு மாபெரும் அணிகளுக்காக விளையாடிவரும் இருவரும் ஒவ்வொரு ஆண்டும், கால்பந்தின் மிகப்பெரிய கோப்பைகளுக்காக வரிந்து கட்டிவருகின்றனர்.

பார்சிலோனாவின் மெஸ்ஸி லாலிகா தொடரையும், மாட்ரிட்டின் ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக்கையும் இவ்வருடம் வென்று அசத்தினர். வருடாவருடம் இந்தக் கோப்பைகளை இவர்கள் மாறி மாறி வென்றாலும், இவர்களால் தங்கள் தேசிய அணிக்காக ஒரு கோப்பையை வென்று தர முடியவில்லை. மெஸ்ஸி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தாலும் கோபா, உலகக்கோப்பை போன்ற தொடர்களை வெல்ல முடியவில்லை. 2014 உலகக்கோப்பை, 2015 கோபா என இரு தொடர்களிலும் அர்ஜென்டினா அணி இரண்டாம் இடமே பெற்றது. பல்வேறு சாதனைகள் படைத்த சச்சின் உலகக்கோப்பைக்காக நெடுங்காலம் காத்திருந்ததைப் போல், தங்கள் தேசிய அணிக்காக ஒரு கோப்பையை வென்று தர முடியாமல் தவிக்கின்றனர் இவ்விரு ஜாம்பவான்களும்.

எப்போதும் ஸ்பெயினில் ஒரே தொடரில் மல்லுக்கட்டிவரும் இவர்கள், இம்முறை இரு வேறு கண்டங்களில், இரு வேறு நாடுகளில், இருவேறு தொடர்களில் விளையாடி வருகிறார்கள். லிபர்டி கோபுரம் அமைந்துள்ள அமெரிக்காவில், கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸியும், அந்த லிபர்டி கோபுரத்தைப் பரிசளித்த பிரான்ஸ் மண்ணில், யூரோ கோப்பையில் ரொனால்டோவும் விளையாடி வருகின்றனர். அர்ஜென்டினா அணிக்கு மெஸ்ஸியும், போர்ச்சுக்கல் அணிக்கு ரொனால்டோவுமே கேப்டனாக இருப்பதால், அவர்கள் மேல் பிரஷர் கூடியுள்ளது.

ஒன் மேன் ஆர்மி ரொனால்டோ
   

போர்ச்சுக்கல் அணியைப் பொருத்தமட்டில் ரொனால்டோ என்னும் ஒற்றை ஏவுகணையை நம்பியே கோதாவில் இறங்கியுள்ளது. ஜோ மொடின்ஹோ, நானி போன்ற முன்னணி வீரர்களெல்லாம் தற்போது அவுட் ஆஃப் ஃபார்ம்தான். கடந்த முறை யூரோ தொடரில்,  அரையிறுதியில் ஸ்பெயினுக்கு எதிராக பெனால்டியில் வீழ்ந்து கோப்பை வாய்ப்பை தவறவிட்டது போர்ச்சுக்கல். முன்பைப் போல் அந்த அணியும் இப்போது முழு ஃபார்மோடு களமிறங்கவில்லை. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி, போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணிகளெல்லாம் திக்கித்திணறியே வெற்றியை ருசித்துள்ளன. அதனால் இம்முறை யார் வேண்டுமானலும் கோப்பையை வெல்லலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதை விட்டால், போர்ச்சுக்கல் அணிக்குக் கோப்பையை வென்று தர, ரொனால்டோவிற்குச் சிறந்த வாய்ப்பு அமைந்திடாது. ஐஸ்லாந்து அணிக்கெதிராக போர்ச்சுக்கல் அணி வீரர்களின் செயல்பாடு சுமாராகவே இருந்தது. ரொனால்டோ ஏதாவது மேஜிக் செய்தால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.

நட்சத்திரங்களுள் துருவ நட்சத்திரம் மெஸ்ஸி

ஆனால் அர்ஜென்டினா அணியின் நிலமையோ வேறு. மெஸ்ஸியோடு சேர்ந்து ஹிகுவெயின், அகுவேரோ, டி மரியா, லாவெஸ்ஸி, மாஷரானோ என உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. யூரோ கோப்பையைப் போல், கோபா அமெரிக்காவில் போட்டியும் பெரிதாக இருக்காது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபைனலில் தங்களைத் தோற்கடித்த சிலி அணி மட்டுமே, தற்போதைக்கு அர்ஜென்டினா கோப்பையை வெல்ல முட்டுக்கட்டை போடும். பிரேசில் மற்றும் உருகுவே அணிகள் இத்தொடரின் லீக் சுற்றோடு வெளியேறிவிட்டதால் அர்ஜென்டினா கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த போட்டியில் சப்ஸ்டிட்யூட்டாக களம் கண்ட மெஸ்ஸி ஹாட்-டிரிக் கோல் அடித்து வேறு அசத்தியுள்ளார். அனைத்து வீரர்களும் அவருக்குக் கைகொடுக்கும் பட்சத்தில், தனது அணிக்காக மெஸ்ஸி முதல் கோப்பையை வென்று தரலாம். அந்த நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.

பிரேசில் அவுட், பெல்ஜியம் ஷாக்

கோபா அமெரிக்கா தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளன. அமெரிக்கா, ஈகுவடார், அர்ஜென்டினா, வெனிசுலா, மெக்சிகோ, சிலி, பெரு, கொலம்பியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. முன்னாள் சாம்பியன்கள் பிரேசில் மற்றும் உருகுவே அணிகள் அதிர்ச்சிகரமாக வெளியேறியுள்ளன.

யூரோ கோப்பை தொடரில் லீக் தொடரின் முதல் சுற்றுகள் முடிவுக்கு வந்துள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், குரோஷியா உள்ளிட்ட முன்னணி அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெல்ஜியம் அணி, இத்தாலியிடம் 2-0 என்று பேரடி வாங்கியது. இங்கிலாந்து அணி கடைசி நிமிடங்களில் சொதப்பியதால் 1-1 என ரஷ்யாவோடு டிரா கண்டது. போர்ச்சுகல் அணியும் ஐஸ்லாந்தோடு 1-1 என டிரா கண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோவால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

ஆக மொத்தம் போர்ச்சுக்கலை விட கோப்பை வெல்லும் வாய்ப்பு மெஸ்ஸிக்கே அதிகம். கோப்பைகள் வேறாக இருந்தாலும் வெல்வதுதான் அவர்களுக்கும் அவர்கள் ரசிகர்களுக்கும் முக்கியம். இந்த ரேசில் ரொனால்டோவை விட மெஸ்ஸியே முந்தி நிற்கிறார். ரொனால்டோவும் ஏதாவது மேஜிக் செய்து சவால் விடுவாரா? பொருத்திருந்து பார்க்கலாம்!

- மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவப்பத்திரிகையாளர்)
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close