Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெஸ்ட் ஹாம் மகுடத்தின் வைரக்கல்லாக ஒளிரும் பயட்!


 

கால்பந்தின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்றான யூரோ கோப்பையின் முதல் போட்டி.  போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி, ரொமேனியாவுடன் 1-1 என்று சமநிலை வகிக்கிறது. கோப்பை வெல்லும் என்று கருதப்பட்ட சொந்த ஊர் அணி, முதல் போட்டியிலேயே திணறியதை அந்நாட்டு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 89 நிமிடங்கள் கடந்துவிட்டன. பிரான்ஸ் வீரர்கள் கோல் கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஒரு நிமிடமே மீதமிருக்க, ரசிகர்களெல்லாம் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். அப்போதுதான் காண்டே கொடுத்த பாசை, சுமார் 25 அடி தூரத்திலிருந்து கோல் நோக்கி உதைத்தார் பிரான்ஸ் வீரர் டிமிட்ரி பயட். மின்னலெனப் பாய்ந்த பந்து, கோல் வலையினுள் செல்ல, மொத்த மைதானமும் அலறியது.

கோல் அடித்த அடுத்த நொடி, மகிழ்ச்சியில் மைதானத்தைச் சுற்றி ஓடினார் பயட். அடிமனதில் கிளம்பிய சந்தோஷம் மற்ற வீரர்கள் போல் அவருக்கு சிரிப்பாய் வெளிவரவில்லை. கண்ணீராய் மைதானத்தில் கரைபுரண்டோடியது. அவரால் பேச முடியவில்லை. சிரிக்கக்கூட முடியவில்லை. அவரது அந்தக் கண்ணீர் இவ்வுலகத்திற்கு ஏதோ ஒன்றை நிரூபித்தது.
 

இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி நகர்வோம்…2014 ஃபிஃபா உலகக்கோப்பைக்கான பிரான்ஸ் அணியை அறிவிக்கிறார் பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ். நஸ்ரி, பயட் உள்ளிட்ட வீரர்கள் திடீரென அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்கள். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஓரளவு செயல்பட்டபோதும் பயட்டிற்கு உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பயட்டைப் பொருத்தவரையில், களத்தில் பம்பரமாகச் சுற்றுபவர். தான் கோல் அடிக்க வேண்டும் என்பதை விட, அணி வெல்ல வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் ஓங்கியிருக்கும். மற்ற வீரர்களுக்கு கோலடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் வல்லவர். ஃப்ரீ கிக் கில்லாடியும் கூட.
 

உலகக்கோப்பையில் விளையாடாத ஏமாற்றம் பயட்டை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாகப் போராடினார். வாய்ப்புகளுக்காக அவர் காத்திருக்கவில்லை. வாய்ப்புகளை உருவாக்கினார். ஒவ்வொரு மூளை முடுக்கிலும் பந்தை தன்வசப்படுத்தப் போராடினார். மார்சிலே அணிக்காக விளையாடிய அவர், 2014-15 சீசனில் மட்டும் 17 அசிஸ்டுகள் செய்து தனது அணி வீரர்கள் கோலடிக்க உதவினார். அதுமட்டுமல்லாது, மொத்த ஐரோப்பாவிலும் த்ரூ பால் கொடுத்ததில் மெஸ்ஸிக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்தார் பயட். அதன் விளைவாக 2015 ல்,  இங்கிலாந்தின் வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்காக ஒப்பந்தம் ஆனார் பயட். பல முன்னணி வீரர்கள் சொதப்பிய பிரீமியர் லீக் தொடரில், தனது முதல் சீசனிலேயே முத்திரை பதித்தார் அவர். இந்த சீசனின் சிறந்த பிரீமியர் லீக் அணியிலும் தேர்வு செய்யப்பட்டார் பயட்.
 

அதன் விளைவு, செல்சி உள்ளிட்ட முன்னணி அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றன. அதுமட்டுமல்லாது சொந்த மண்ணில் நடக்கும் யூரோ கோப்பைக்கான அணியில் இடமும் கிடைத்தது. ஆனால் ஆடும் லெவனில் பயட் இடம்பெறுவாரா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. காரணம், பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ். பயட் மீது அவருக்கு மிகப்பெரிய அபிப்பிராயம் இருந்தது இல்லை. அவருக்கு சரியான வாய்ப்புகளையும் அவர் கொடுத்ததில்லை. ஒருமுறை பயட்டே “அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில் தேசிய அணியில் தனது எதிர்காலத்தை நிலைநிறுத்திக்கொள்ள பயட்டிற்கு இது கடைசி வாய்ப்பாக அமைந்தது.
 

இறுதியாக டெஸ்கேம்ப்ஸ் அறிவித்த ரொமானியாவிற்கு எதிரான ஆடும் லெவனில், பயட்டின் பெயரும் இடம்பெற்றது. ஆட்டம் முழுதும் உழைத்துக்கொண்டே இருந்தார். பெனால்டி ஏரியாவில் பந்துகளை செலுத்துவது, சக வீரர்களுக்கு பாஸ் மழை பொழிவது என பயட்டின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. பிரான்ஸின் ஜிரௌட் அடித்த முதல் கோலிற்கான அசிஸ்ட் செய்ததும் பயட்தான். பெனால்டியின் வாயிலாக ரொமேனியா சமநிலை அடைய, வெற்றி எட்டாக்கனியாகிக் கொண்டிருந்தது. அப்போதுதான் பயட்டின் அந்த அற்புத கோல், வெற்றியை வசப்படுத்தியது. இறுதிக் கட்டத்தில் எவ்வித பிரஷரும் இன்றி லாவகமாக கோல் அடித்த பயட், தன்னை உலகக்கோப்பை அணியில் சேர்க்காததற்கு பெரும் பாடம் புகட்டினார். அவரால் பொங்கிய கண்ணீரை அடக்கவே முடியவில்லை. கூடுதல் நேரத்தில், சப்ஸ்டிட்யூட்டாக பயட் மாற்றப்பட்ட போது மொத்த அரங்கமும் ஸ்டேண்டிங் ஓவேஷன் கொடுத்தது. அப்போதும் ஆனந்தக் கண்ணீருடனேயே வெளியேறினார் பயட்.
 

மொத்த தேசமும் பயட்டின் பெயரை புகழ்ந்து கொண்டிருந்த நேரம், அல்பேனியா அணியுடனான இரண்டாவது போட்டியிலும் கடைசி கட்டத்தில் கோலடித்து, பிரான்ஸ் அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் பயட். பிரான்ஸ் ஜாம்பவான்கள் ஜிடேன், ஹென்றி ஆகியோருக்கு இணையாக இன்று பயட்டின் பெயரும் பிரான்ஸ் காற்றில் கலந்திருக்கிறது.

பயட் விளையாடிவரும் வெஸ்ட் ஹாம் அணியின் மேனேஜர் ஸ்டீவன் பிலிக்,  யூரோ கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, “நீ நிரூபிப்பதற்கு எதுவுமில்லை. நீ ஒரு சிறந்த வீரன்தான்” என்று பயட்டிற்கு மெசேஜ் செய்துள்ளார். அந்த மெசேஜ் இன்று உண்மையாகிவிட்டது. மொத்த உலகத்திற்கும் தனது கால்களாலும் கோல்களாலும் பதிலளித்துவிட்டார் டிமிட்ரி பயட். இனியும் அவர் நிரூபிப்பதற்கு எதுவுமில்லைதான். பல கோடிகள் சம்பளம் பெரும் கால்பந்து நட்சத்திரங்களில் பயட்டும் ஒரு நட்சத்திரம் தான். அதுவும், தன்னை சந்தேகிப்பவர்களைப் பொசுக்கும் அக்னி நட்சத்திரம். அக்கண்ணீர் உணர்த்துவது இதைத்தான்!
 

பயட் கண்ணீர் சிந்திய காட்சியின் வீடியோ இங்கே...- மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவப்பத்திரிகையாளர்)


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ