Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெஸ்சியை வீழ்த்திய மரடோனா!

ர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன்  மெஸ்சி மிகச்சிறந்த முன்கள ஆட்டக்காரர். ரைட் விங்கராக பயிற்சியாளர்களின் துருப்புச் சீட்டு.  நான்கு தடுப்பாட்ட வீரர்கள் சுற்றினாலும் மந்திர கால்கள் தந்திரமாக சுழழும். டிரிபிளிங் திறமையிலும் மெஸ்சியை மிஞ்ச முடியாது. எத்தகைய நெருக்கடியிலும் பந்தை எதிரணியின் கோல் கம்பத்தை நோக்கி மின்னல் வேகத்தில் கடத்துவார். கவுன்ட்டர் அட்டாக்கில் மெஸ்சியை பிடிப்பது இன்னும் கஷ்டம்.

அதுவும் பார்சிலோனா அணிக்காக ஆடும் போது மெஸ்சிக்கு இரட்டை பலம் . அந்த அணியில்  ஜோவி, இனியஸ்டா, ஜோர்டி ஆல்பா. செர்ஜியோ பஸ்கியூட், ரக்டிக் என அட்டகாசமான மத்திய கள ஆட்டக்காரர்கள் இருந்தனர்... இப்பவும் இருக்கின்றனர். முன்களத்தில் உருகுவேயின் சுவாரசும் பிரேசிலின்   நெய்மரும் மெஸ்சியின் கூட்டாளிகள். கூட்டணி பலம் மெஸ்சிக்கு யானை பலமாக இருந்தது.

ஆனால் சர்வதேச ஆட்டம் என்று வரும் போது பார்சிலோனாவின் பலத்துடன் ஒப்பிட முடியாத அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி கடுமையாக களத்தில் போராட வேண்டியது இருக்கிறது. கடந்த 1986ம் ஆண்டு உலகக் கோப்பையை மரடோனா தலைமையில் அர்ஜென்டினா வென்ற பிறகு , உலகின் பாதி கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா சப்போர்ட்டர்களாக  மாறி விட்டார்கள். 

மரடோனாவின் 'ஹேண்ட் ஆப் காட்' கோலும் இங்கிலாந்து வீரர்கள் 8 பேரை இழுத்து அடித்த  கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோலும் அவர்களை   அர்ஜென்டினா அணியின் பரமவிசிறிகளாக்கி விட்டது..மரடோனா அணியில் இடம் பெற்ற அத்தனை பேர்களுமே ஜாம்பவான்கள். 1978ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் டேனியல் பசரல்லாவும் 1986ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அர்ஜென்டினா அணியில் இருந்தார்.
 

அந்த ஜாம்பவானிடம் எதிர்பார்த்த அதே திறமையை மெஸ்சியிடமும் கால்பந்து ரசிகர்கள் எதிபார்த்ததுதான் தவறாக முடிந்து விட்டது. முக்கியமான சர்வதேச போட்டிகளில் மெஸ்சிக்கு இது கடும் நெருக்கடியை அளித்து விட்டது.  கோல் அடிப்பது மட்டுமல்ல அதற்கான வாய்ப்புகளை மெஸ்சி  திறம்படவே ஏற்படுத்திக் கொடுக்கிறார்.   சக வீரர்கள் ஏரியாவுக்குள் பந்து கிடைத்தால் அதனை கோலாக மாற்றுவதில் வல்லவர்களாக இருக்க வேண்டுமல்லவா? கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்  ஜெர்மனிக்கு எதிராக அற்புதமான இரு கோல் வாய்ப்புகளை மெஸ்சி உருவாக்கிக் கொடுக்க அதனை ஹீகுவான் வீணடித்தார்.இது ஒரு சேம்பிளுக்குதான்.

கடந்த சில ஆண்டு காலமாகவே அர்ஜென்டினா தேசிய அணி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. 1993ம் ஆண்டுக்கு பிறகு கோபா அமெரிக்காவில் கூட அர்ஜென்டினா கோப்பையை வென்றதில்லை.   தற்போதையை அணியில் மெஸ்சியை தவிர முன்களத்தில் குறிப்பிடத்தக்க யாரையும் கூற முடியது.  சிலிக்கு எதிரான கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்தில் கூட ஹீகுவான் தனக்கு கிடைத்த  அற்புதமான ஓபன் நெட் வாய்ப்பை  வீணடித்தார். ஆனால் இவர்களை கட்டிக் கொண்டுதான் முன்களத்தில் மெஸ்சி அழ வேண்டியது இருக்கிறது. 

குழு விளையாட்டான கால்பந்தில் 11 பேரும் ஒரே  மாதிரி  திறமையாளர்களாக இருந்து விடுவார்கள் என்று கூறி விட முடியாது. தற்போதைய அர்ஜென்டினா அணியுடன் ஒப்பிட்டால், அதனைவிட பார்சிலோனா அணி பல மடங்கு பலம் வாய்ந்ததாக இருக்கும். பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது மிரள வைக்கும் மெஸ்சி,அதனை விட பலம் குன்றிய அணியுடம் இணையும் போது சோர்வடைவது இயல்புதானே.

கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடிய சிலி  அணியையும்  சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  விடால்,அலெக்சிஸ் சான்ஞஸ், எடுவாரா, கிளாடியோ பிரேவோ என தலைசிறந்த ஆட்டக்காரர்களை கொண்ட அணியும் கூட ,தனிநபரை சாராமல் குழுவாக விளையாடி  சிலி வெற்றி பெற்று விட்டது.

ஆனால் அர்ஜென்டினாவோ பல ஆண்டு காலமாகவே  மெஸ்சி என்ற ஒரு வீரரை நம்பியே களம் இறங்குகிறது. இதுதான் மெஸ்சியின் தோல்விக்கும் முக்கிய காரணம். மெஸ்சியை போலவே ரொனால்டோவும் மிகச்சிறந்த வீரர்தான். ஆனால் அவர் சார்ந்த போர்ச்சுகல் அணி உலகக் கோப்பை அரையிறுதி வரை கூட முன்னேறியது இல்லை. ஐரோப்பிய கோப்பையில் கூட சாம்பியன் ஆனது இல்லை. அதனால் ரொனால்டோவுக்கு மெஸ்சிக்கு உள்ளது போல நெருக்கடி இல்லை. ரொனால்டோவும் தனி ஆளாக போர்ச்சுகல் அணியை பல நேரங்களில் வெற்றி பெற வைத்தாலும் அவரை யாரும் கண்டு கொள்வதில்லை.

அர்ஜென்டினா என்றதும் மெஸ்சி, மெஸ்சி என்கிறார்கள்.  டீகோ மரடோனா போல அர்ஜென்டினா அணிக்கு லயனல் மெஸ்சி கோப்பையை வாங்கித் தருவார் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு உலகக் கோப்பை, 3 கோபா அமெரிக்காத் தொடர் இறுதி ஆட்டத்துக்கு அர்ஜென்டினாவை கொண்டு சென்றது மெஸ்சிதான். அந்த நான்கிலுமே தோல்வி. மனசு எவ்வளவு வலிக்கும்?


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close