Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோவில் இங்கிலாந்தின் பல்லை பிடுங்கிய 'பார்ட் டைம் ' பல் டாக்டர்!

லகக் கோப்பையாக இருந்தாலும் சரி யூரோவாக இருந்தாலும் சரி கோப்பை எங்களுக்குதான் என்று புறப்பட்டு போவது இங்கிலாந்து அணியின் வழக்கம். இங்கிலாந்து அணி புறப்பட்டதும் கூடவே முரட்டு ரசிகர்களும் கூட்டம் கூட்டமாய் அந்த நாட்டுக்கு போய் இறங்கி விடுவார்கள். இங்கிலாந்துக்கான போட்டிகள் எந்த நகரில் நடக்கிறதோ அங்கே போய் முகாமிட்டுக் கொள்வார்கள். அதோடு நிற்க மாட்டார்கள்... போட்டியை பார்க்கிறார்களோ இல்லையோ எதிரணி ரசிகர்களை வம்புக்கு இழுப்பதுதான் அவர்களது இங்கிலந்து அணி ரசிகர்களின் முதல் வேலையாக இருக்கும். பிரான்சில் இந்த முறையும் ரஷ்ய ரசிகர்களிடம் சண்டைக்கு போய் செமத்தையாக வாங்கிக் கட்டினார்கள்.

கால்பந்தை பொறுத்த வரை இங்கிலாந்து அணியை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு ஒப்பிடலாம். எப்போ எப்படி யார்கிட்டனு வரைமுறை இல்லாம தோற்பதில் இங்கிலாந்துக்கு நிகர் இங்கிலாந்துதான். பின்னர் தாய்நாட்டுக்கு போய் ஒரு மாத காலம் தலைமறைவாகி விடுவார்கள். வெளியே தலைகாட்டினால் அழுகிய தக்காளி, முட்டை வந்து விழும்.

இந்த யூரோவிலும் நாக்அவுட் சுற்றில் கத்துக்குட்டியான ஐஸ்லாந்து அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்துள்ளது. உண்மையில் இங்கிலாந்து அணிக்குஎன்ன குறைச்சல் ? ஏன் இப்படி தோற்கிறார்கள் ? என்ற கேள்விதான் எழுகிறது. ரூனி தலைமையில் ஜேமி வார்டி, டேனியல் ஸ்டர்ரிஜ், கேரி காகில், கிறிஸ் ஸ்மால்லிங், ஜேம்ஸ் மில்னர், ரஹீம் ஸ்டெர்லிங், ஜேக் வில்ஷயர், ஜோர்டான் ஹேண்டர்சன், மார்கஸ் ரஷ்ஃபோர்டு என பிரீமியர் லீக்கில் அசத்தும் அத்தனை இளம் வீரர்களும் கொட்டி கிடக்கின்றனர். அப்படியும் தோல்விதான் மிஞ்சுகிறது ஏன்? என்பது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்களுக்கே இன்னும் வரை புரியாத புதிர்தான்.

ஆனால் இப்படியெல்லாம் அடி வாங்குவது இங்கிலாந்து அணிக்கு வழக்கமான ஒன்றுதான். கடந்த 1950ம் ஆண்டு பிரேசில் உலகக் கோப்பைத் தொடரிலேயே இங்கிலாந்து அணி கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் செமத்தையாக அடி வாங்கியுள்ளது. அப்போதுதான் அமெரிக்க அணி கால்பந்து விளையாட்டை எப்படி விளையாட வேண்டுமென்று கற்றுக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி உலகக் கோப்பைக்கும் வந்திருந்தது. பெரும்பாலான அமெரிக்க வீரர்கள் பார்ட் டைம் பிளேயர்கள்தான். இங்கிலாந்தை போல தொழில்முறை ஆட்டம் அமெரிக்கவில் அப்போதெல்லாம் கிடையாது. இங்கிலாந்து அணிக்கும் அதுதான் முதல் உலகக் கோப்பைத் தொடர். அதற்கு முன் நடந்த 3 உலகக் கோப்பை போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஃபிஃபாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பங்கேற்கவில்லை.

இந்த மோதலில் அனுபவமில்லாத அமெரிக்க அணிக்கு இங்கிலாந்து அணி லாடம் கட்டி விடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த மோதலை பொறுத்த வரை இங்கிலாந்து பவர்ஃபுல், அமெரிக்கா 'அன்டர்டாக் 'அந்த அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதானல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. போட்டித் தொடங்கியது, 25வது நிமிடத்தில் அமெரிக்க அணி முதல் கோல் அடிக்க, ரேடியோக்களில் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருந்த 10 ஆயிரம் பிரேசிலியர்கள் டிக்கெட் எடுத்து கொண்டு போட்டியை பார்க்க மைதானத்துக்கு வந்து விட்டனர். அமெரிக்க அணிக்கு ஆதரவாக அவர்கள் கூச்சலிட, கடைசி வரை இங்கிலாந்து அணியை பதில் கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தை ஆடி அமெரிக்க அணி வெற்றி பெற்று விட்டது. கால்பந்து அரங்கில் இங்கிலாந்தின் இந்த தோல்வி இப்பவும் பேசப்படும் ஒரு விஷயம். அதே பாரம்பரியம்தான் தற்போது ஐஸ்லாந்துக்கு அணிக்கு எதிராக தொடர்ந்துள்ள.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ராய் ஹாட்சனுக்கு ஆண்டுக்கு 3.5 மில்லியன் பவுண்டு சம்பளம் . இங்கிலாந்தை வீழ்த்திய ஐஸ்லாந்து அணியின் பயிற்சியாளர் ஹெல்மிர் ஹெல்குர்சன் ஒரு' பார்ட் டைம் 'டென்டிஸ்ட் .

எடிட்டர் சாய்ஸ்

MUST READ