Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெஸ்ஸி எனும் ஃபுட்பால் ஏலியன்


 

“இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோ தான். ஏனெனில் மெஸ்ஸி வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று தான் மொத்த உலகமும் அந்த ஐந்தரை அடி கோல் மெஷினைப் போற்றி வந்தது. எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு 5 பாலன் டி ஓர் விருதுகள் வாங்கி கால்பந்து ஏணியின் உச்சானிக் கொம்பில் நிற்பவர் இந்த லயோனல் மெஸ்ஸி. இவரது நுணுக்கங்களும் ஸ்டைலும் வீடியோ கேமில் கூட நம்மால் செய்ய முடியாதவை. கால்பந்தின் ஹிஸ்டரி தெரியாத நம்ம ஊரு யூத்ஸ் கூட மெஸ்ஸியின் பெயர் போட்ட ஜெர்சியை போட்டுக் கொண்டு அளப்பறை செய்வார்கள். கால்பந்து வெறியர்களின் ஒரு தீராக்கனவு மெஸ்ஸியை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டுமென்பதாகத் தான் இருக்கும்.
 

ஆனால் மெஸ்ஸியின் சொந்த ஊரான அர்ஜென்டீனா மக்களுக்கோ வேறு கனவுகள். உலகையே லயிக்க வைக்கும் மெஸ்ஸி, பார்சிலோனா அணியை ஒவ்வொரு பதக்கத்தையும் பல முறை வெல்ல வைத்த அவர்கள் மெஸ்ஸி, அவர்களுக்காக, அவர்கள் தேசத்துக்காக ஒரேயொரு கோப்பையை வென்று தர வேண்டும் என்பது தான் அது. அந்தக் கனவு தான், மக்களின் அந்தத் தீராத ஆசை தான், தனது கால்பந்து வாழ்க்கையில் பல ஆண்டுகள் மீதமிருந்தும், உச்சகட்ட ஃபார்மிலிருந்த போதும் அந்த ஜாம்பவானை விடைபெற வைத்திருக்கிறது. 2007ல் தொடங்கியது அந்தக் கனவுக்கான வேள்வி. கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பிரேசிலிடம் தோல்வியுற்ற போது, ‘1993க்குப் பிறகு கோப்பை வாங்காத தங்கள் அணிக்கு என்றாவது ஒருநாள் இந்த இளம் புயல் கோப்பை வென்று தரும்’ என்றே நம்பினார்கள். ஆனால் அந்தக் கனவை 2014 உலகக்கோப்பை இறூதிப்போட்டியில், 2015 கோபா பைனலில், இறுதியாக நேற்று நடந்த கோபா நூற்றாண்டுக் கோப்பை பைனலிலும் நிறைவேற்ற முடியாத விரக்தியில் விடைபெற்றுள்ளார் மெஸ்ஸி.
 

உச்சகட்ட பிரஷர்
   

டீகோ மரடோனா என்னும் மகத்தான வீரனைக் கண்ட அர்ஜென்டினா மக்களுக்கு, அவரது வாரிசாய்க் கிடைத்தார் மெஸ்ஸி. 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போது, மெஸ்ஸியின் நிழலில் டீகோவைக் கண்டுவிட்டார்கள் போலும், “மெஸ்ஸி எங்களுக்கு உலகக்கோப்பையை வென்று தர வேண்டும்” என்று ஒவ்வொரு முறையும் முழங்கிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் உண்மையில் அர்ஜென்டினா மெஸ்ஸி என்ற தனிமனிதனைச் சுற்றியுள்ள அணி இல்லை எண்றே சொல்ல வேண்டும். காரணம், அவ்வணி வீரர்கள் அனைவருமே முன்னனி கிளப்புகளுக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர்கள். ஹிகுவெய்ன் சீரி அ தொடரில் இந்த சீசனில் மட்டும் 36 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அகுவேரோ மான்செஸ்டர் சிட்டி அணிக்காக வெறும் 30 போட்டிகளில் 24 கோல்கள் அடித்து அசத்தினார். டி மரியா பி.எஸ்.ஜி வீரர்களுக்கு 18 அசிஸ்டுகள் செய்து, லீக் 1 ல் புதிய சாதனை படைத்தார். இவர்கள் மட்டுமல்ல ஒடாமெண்டி, பேஸ்சோர், மாசரானோ, ரோஜோ என அனைவருமே ஃபார்மில் இருக்கும் வீரர்கள் தான். சொல்லப்போனால் தற்போதைய நிலமையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை விட வலுவான அணி அர்ஜென்டினா தான். ஆனாலும் ஏன் இந்த ஏமாற்றம்? பிரஷர் தான் இதற்கெல்லாம் முக்கியக் காரணம். நாளுக்கு நாள் எகிறும் பிரஷர் அர்ஜென்டினா அணியில் கெமிஸ்டிரி செட் ஆகவே விடவில்லை.
 

இத்தகைய நட்சத்திரம் பலர் இருந்தாலும், மெஸ்ஸி என்ற சூரியனைச் சுற்றியே அர்ஜென்டின கால்பந்து வலம் வந்தது. அது மெஸ்ஸியின் மீது அழுத்தம் தந்தது. பார்சிலோனாவிற்காக மெஸ்ஸி கலக்குகிறார் என்றால், அங்கு அவர் கேப்டன் இல்லை. ஆனால் தேசிய அணியின் கேப்டன் என்பதே அவர் மீதான பிரஷரை பல மடங்கு அதிகரித்து விடுகிறது.
 

 

அதுமட்டுமின்றி பார்சிலோனாவின் ஜாவி ஹெர்னான்டெஸ், இனியஸ்டா போன்ற வீரர்கள் இல்லாததும் அவருக்கு சற்று ஏமாற்றம் தான். “ஜாவி, இனியஸ்டா இல்லன்னா மெஸ்ஸி ஒண்ணும் இல்ல” என்று ரொனால்டோ வெறியர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், மெஸ்ஸியின் வெற்றியிலிருக்கும் அவர்களின் பங்கை ஒதுக்கிவிட முடியாது. சற்றும் சுயநலம் இல்லாமல், மெஸ்ஸி கோல் அடிக்க அசிஸ்டுகள் அடுக்கிய அவர்களைப் போல் அர்ஜென்டினா அணியில் குவாலிடியான மிட் பீல்டர்கள் இல்லை. அவர்களோடு ஒத்துப்போகக் கூடிய ஒரே வீரரான டி மரியாவும் காயத்தால் அவதிப்பட்டதால், இறுதிப் போட்டியில் மெஸ்ஸியால் சோபிக்க முடியவில்லை. என்னதான் மைதானம் முழுதும் ஓடியாடினாலும் கம்பெனி கொடுக்க ஒரு ஆள் வேண்டுமல்லவா?
 

ஹிகுவெய்ன், அகுவேரோ போன்றோர் அவுட் அண்ட் அவுட் ஸ்டிரைக்கர்கள் என்பதால், அவர்கள் மெஸ்ஸிக்கு அசிஸ்டுகள் செய்ய முற்படமாட்டார்கள். அதுமட்டுமின்றி பார்சிலோனாவின் ஃபார்மேஷனுக்கும், அர்ஜென்டினாவின் ஃபார்மேஷனுக்கும் ஒரு சிறு வேறுபாடு இருக்கிறது. இரு அணிகளும் 4-3-3 செட் அப்பில் தான் விளையாடுகிறார்கள். மெஸ்ஸி இயற்கையாகவே ஸ்டிரைக்கராக விளையாடுபவர். ஆனால் அவ்விரு அணிகளிலும் இருக்கும் இன்னொரு உலகத்தர ஸ்டிரைக்கரால் (சுவாரஸ் – பார்சிலோனா, ஹிகுவெய்ன்- அர்ஜென்டினா) மெஸ்ஸி ரைட் விங்கில் ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இங்கு தான் இரு அணிகளின் அணுகுமுறையும் மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பாதிக்கிறது. பார்சிலோனா பயிற்சியாளர் ஜோசே என்ரிக், மெஸ்ஸியை வலப்புறம் அமர்த்தினாலும், அவர் களம் முழுதும் இயங்கும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளார். அதற்கேற்றார்போல் சுவாரசும் அவுட் அண்ட் அவுட் ஸ்டிரைக்கராக இயங்காமல் ஒரு ‘ஃபால்ஸ் 9’ ஆக விளையாடி மெஸ்ஸிக்கு அற்புதமாக கம்பெனி கொடுக்கிறார். மெஸ்ஸி கோல்நோக்கிச் செல்லும் போது சுவாரஸ் மெஸ்ஸியின் பொசிஷனை கவர் செய்து விடுகிறார். இந்த அற்புத பார்ட்னர்ஷிப் தான் தேசிய அணியில் அவருக்குக் கிடைப்பதில்லை. அதற்காக ஹிகுவெய்னையும் குறை கூட முடியாது. அது அவரது ஸ்டைல்.
 

 

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர்களாக இருந்த மரடோனாவோ, ஜெரார்ட் மார்டினோவோ, அலெக்சாண்ட்ரோ சாபெல்லாவோ, மெஸ்ஸிக்கு அந்த சுதந்திரத்தை வழங்கியிருந்தால், பார்சிலோனா அணிக்காக விளையாடியதை விடவும் மெஸ்ஸி சிறப்பாக விளையாடியிருப்பார்.
 

இப்படியான டெக்னிக்கல் விஷயத்தைப் புரிந்துகொள்ளாத பலரும், “மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக மட்டும் தான் விளையாடுகிறார். தேசிய அணிக்காக அவர் விளையாட விரும்புவதில்லை” என்று வசை பாடத் தொடங்கிவிடுகின்றனர். இது இன்று நேற்று கூறப்படும் கருத்து அல்ல. 2010 உலகக்கோப்பையில் மரடோனா பயிற்சியாளராக இருந்த போதிலிருந்தே தொடங்கி விட்டது. அத்தொடரில் அர்ஜென்டினா  அணி காலிறுதியோடு வெளியேறிய, “மெஸ்ஸியால் மரடோனா ஆக முடியாது” என்று தூற்றத் தொடங்கிவிட்டனர். மெஸ்ஸிக்கு உலகளவில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு அவரை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலோனோர் மாட்ரிட் ரசிகர்கள். அவர்கள் அவரை வசைபாடுவதை அவர் ஒருநாளும் பெரிதாய் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் தனது சொந்த நாட்டு ரசிகர்களே அவரைத் தூற்றுவது தான் அவரால் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. அந்த விரக்தி தான் அவரை இவ்வளவு சீக்கிரத்தில் ஓய்வு முடிவை அறிவிக்க வைத்துள்ளது.
 

மைதானத்தில் கண்ணீரோடு வெளியேறிய மெஸ்ஸி கூறிய வார்த்தைகள் – “பல முறை அர்ஜென்டினா அணியோடு சாம்பியனாக முயன்றேன். ஆனால் முடியவில்லை. இப்போது எனது ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறேன். இது முடிந்தது. அவ்வளவு தான்” என்று கண்ணீரோடு விடைபெற்றார். அந்தக் கண்ணீர் அவரது தோல்வியை எடுத்துக் காட்டியிருக்கலாம், ஆனால் வரலாறு அவரை ஒரு வெற்றி நாயகனாகவே கொண்டாடும்! கால்பந்து அவரை ஒரு சாம்பியனாகவே பார்க்கும்!

- மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவப் பத்திரிக்கையாளர்)
   
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close