Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேற்று தெருவோரத்தில்...நாளை ஸ்பெயின் விளையாட்டரங்கில்!...ஏழை சிறுவர்கள் எட்டிய சாதனை!!

கிரிக்கெட், டென்னிஸ், செஸ் போன்று இந்திய வீரர்கள் பதக்கங்கள் குவித்து, தரவரிசைகளில் முன்னிலை வகிக்காத விளையாட்டுகளுள் ஒன்று கால்பந்து விளையாட்டு. அதிக உபகரணங்கள் இன்றி, ஒரு பந்தை மட்டுமே வைத்து, மைதானங்கள், கடற்கரைகள், தெருமுனைகள் என சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் விளையாடும் விளையாட்டாக, கால்பந்து உள்ளது. ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த விளையாட்டு, வீட்டின் அருகில் இருக்கும் சின்ன மைதானத்துடனேயே முடிந்துவிடுகிறது.
 

இந்த நிலைமையை மாற்ற, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு கால்பந்து விளையாட்டை அறிமுகப்படுத்தி, பயிற்றுவித்து, போட்டிகளும் நடத்துகிறது "ஸ்லம் சாக்கர்" என்கிற தன்னார்வ அமைப்பு.

இந்த அமைப்புடன், எரிசக்தி நிறுவனமான கமீஸா இணைந்து கமீஸா சாக்கர் லீக் என்ற போட்டியை நடத்தி, அதில் சிறப்பாக செயல்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை தேர்ந்தெடுக்கிறது. இவர்களில் திறமையான சிறுவர்களை ஸ்பெயின் நாட்டில் உள்ள சான் செபாஸ்டியன் என்கிற இடத்தில் நடக்கும் டோனோஸ்டி கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள அனுப்பிவைக்கிறது 'ஸ்லம் சாக்கர்'.

சென்னை, கொல்கத்தா, நாக்பூர், தூத்துக்குடி, நீலகிரி அருகில் உள்ள கூடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 சிறுவர்கள்  இந்த ஆண்டு ஸ்பெயினில் நடக்கவுள்ள இந்த டோனோஸ்டி கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. 500 க்கும் மேற்பட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக இந்த 15 சிறுவர்கள் பங்குகொள்கின்றனர். நீலகிரி அருகே ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஆஷ்ரித் அய்யப்பன் என்ற சிறுவன் இந்த அணிக்கு கேப்டனாக இருப்பார்.     
 

ஸ்பெயின் செல்லும் சிறுவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில் சிறுவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். சென்னையில், நொச்சிக்குப்பம் போன்ற பகுதிகளில் இருந்தும் சில சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தார், கால்பந்து, எங்கள் மகன்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி நெகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வில், கமீஸா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ரமேஷ் கைமல், சிறுவர்களுக்கு பயிற்சி அளித்த ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டெபான் எர்மக்கோவ் ஆகியோர் பங்குகொண்டனர்.
 
இந்தியாவின் புகழை ஸ்பெயினில் நிலைநாட்டப் போகும் நம்மூர் சிறுவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களைச் சொல்லிவைப்போம்!
 

- ஜெ. விக்னேஷ்
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close