Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக் : மாலக்பூரின் 'சோட்டா பீம்' சந்தீப் தோமர்!

த்தரபிரதேசத்தில் மாலக்பூர் என்ற கிராமம் இருக்கிறது. இந்தியாவின் மற்ற கிராமங்களில் இருந்து மாலக்பூர் சற்று வித்தியாசமானது. 'கிரிக்கெட் என்றால் என்ன?' எனக் கேட்கும் கிராமம் இது. சுமார் 7 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய ஊர்.

நாட்டுக்கு ரெஸ்லிங் வீரர்களை  உருவாக்கி தருவதுதான் இந்த கிராமத்தின் வேலை. சுபாஷ் பயில்வான் என்ற முன்னாள் ஆசிய சாம்பியன் உள்பட 3 ஒலிம்பியன்களை உருவாக்கிய ஊர். இந்தக் கிராமத்தில்தான் அந்த சிறுவனும் பிறந்தான். அவன் பெயர் சந்தீப் தோமர். இளவயது முதலே, உருண்டு திரண்ட தினவெடுத்த தோள்களுடன் இருந்த சந்தீப்புக்கும் ஒலிம்பிக்தான் பெருங்கனவு.

இப்போது சந்தீப்பும் வளர்ந்து பெரியவனாகி ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்று விட்டார். இந்தக் கிராமத்தில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 4வது வீரர் சந்தீப். இந்தியாவில் வேறு எந்தக் கிராமத்தில் இருந்தும், எந்த ஒரு விளையாட்டிலும் இத்தனை வீரர்கள் பங்கேற்றதில்லை. மெஸ்சியின் அர்ஜென்டினா அணி,  கோப்பையை வெல்ல முடியாமல் தவித்தது போலவே, இந்த ஊருக்கும் ஒரு தவிப்பு இருக்கிறது. 'இத்தனை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றாலும், ஒரு முறை கூட பதக்கம் கிடைக்கவில்லை' என்ற வருத்தம் அது. அதனால் சந்தீப் தோமரை உறுதியான ஒலிம்பிக் கனவோடு வளர்த்த அந்த கிராமம்,  சந்தீப் வெறுங்கையோடு வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது.

சந்தீப் தோமரின் குடும்பமே ரெஸ்லிங் குடும்பம்தான். சந்தீப்பின் தாத்தா 'சூப்பர் ஹெவி வெயிட் சாம்பியன்'. தந்தை ஹர்பால் கபடி வீரர். ரெஸ்லிங்கும் விளையாடுவார்.  மாலக்பூர் கிராமத்தில் 3 மண்தரை ரெஸ்லிங் மேடை உண்டு. எந்த நேரமும் இந்த 3 மேடைகளும் பிசியாகத்தான் இருக்கும். பக்கத்துக் கிராமங்களில் இருந்தும் பயிற்சிக்காக இங்கு இளைஞர்கள் வருவார்கள்.  ரெஸ்லிங் மேடைக்குள் சந்தீப் நுழையும்போது வயது பன்னிரென்டு. அங்கிருந்த சிறுவர்களுடன் மோதி ஜெயித்தார். பரிசாக 14 ரூபாய் கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களில் சந்தீப்  பாப்புலராக, ஊர் மக்களுக்கு ஒலிம்பிக் கனவு தொற்றிக் கொண்டது.

கடந்த 2008 ம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டிக்கு சந்தீப் தோமர் தகுதிப் பெற்றார். பொதுவாக தேசிய அளவிலான போட்டிகள் 'மேட்'- களில் நடப்பது வழக்கம். அதுவரை மண்தரையில் பயிற்சி பெற்று வந்த தோமருக்கு,  'மேட்' என்றதும் சற்று அதிர்ச்சி. விஷயத்தைக் கேள்விப்பட்ட கிராமத்தினர்,  உடனடியாக எங்கிருந்தோ  'மேட்' ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்து விட்டனர். சில நாட்கள் அதில் பயிற்சி பெற்ற தோமர், தேசிய போட்டியில் சாம்பியனாக, அவரது முதல் வெற்றியை மாலக்பூரே கொண்டாடி மகிழ்ந்தது.

மாலக்பூர் இளைஞர்கள் ரெஸ்லிங் அல்லது கபடியில் வல்லவர்கள். இதனால் ராணுவத்தில் எளிதாக வேலை கிடைத்துவிடும். சந்தீப் தோமரும் கடற்படையில் சேர்ந்தார். கடற்படை பயிற்சியாளர் குல்தீப் சிங், தோமாரை பட்டைத்  தீட்டினார். 50 கிலோ எடை பிரிவில் இருந்து, 55 கிலோ எடை பிரிவுக்கு அவரை மாற்றினார். அதற்குப் பிறகு சந்தீப் சந்தித்த ஒவ்வொன்றும் வெற்றிதான். இந்த ஒலிம்பிக்கில்  57 கிலோ எடை பிரிவில் சந்தீப் போட்டியிடுகிறார்.

சந்தீப்பின் தந்தை ஹர்பால், ''சந்தீப்புக்கு நேவியில் வேலை கிடைத்ததால், எனது சிரமம் கொஞ்சம் குறைந்தது. எங்கள் வீட்டில் ஒரு குறையும் இல்லை. இருந்தாலும் நல்ல ரெஸ்லருக்கு  சத்து மிகுந்த உணவுகளும் பயிற்சி முறையும் அவசியம். இப்போது கடற்படையே அவனை பார்த்துக் கொள்வதால் எனக்கு அந்தக் கஷ்டம் இல்லை ''என்கிறார்.

இந்த முறை ஒலிம்பிக் பயிற்சிக்காக சந்தீப் தோமர் கிளம்பிய போது, அவரது சகோதரி,  ''எனக்கு வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்தாய். இந்த முறை பதக்கத்தை மட்டும் வாங்கிக்கொடுத்து விடு'' என சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.

இது சந்தீப்பின் சகோதரியின் கனவு மட்டுமல்ல அந்த கிராமத்தின் நம்பிக்கையும்  கூட!





 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ