Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரீபியன் மண்ணில் முத்திரை பதிக்குமா கோலி படை?!


கிரிக்கெட் உலகில் அத்தனை பந்துவீச்சாளர்களுக்கும்  சிம்ம சொப்பனமாய் விளங்கி வரும் விராட் கோலிக்கு வந்துவிட்டது பெரிய‌ சவால். இலங்கையையும் தென்னாப்பிரிக்காவையும் அடித்து துவைத்த இந்திய டெஸ்ட் அணிக்கு, முதல் முறையாக ஆசிய கண்டத்துக்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடர். 'தன்னை ஒரு வெற்றிகரமான கேப்டனாக நிலை நிறுத்துவாரா கோலி'  என்ற கேள்வியை வெகுவாகத் தூண்டியுள்ளது  வெஸ்ட் இண்டீஸ் தொடர். மேலும் பயிற்சியாளராக ஜாம்பவான் கும்ப்ளேவிற்கும் முதல் தொடர் என்பதால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொடங்குகிற‌து கரீபியன் தொடர்.

“உள்ளூரில் புலி…வெளியூரில் எலி” – இந்திய அணிக்காக சமீப காலங்களில் கொடுக்கப்பட்ட நிரந்தர வாக்கியம் இதுதான்.  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் பேரடி வாங்கியது துவங்கி  தோனியின் ராஜினாமா வரை இந்திய டெஸ்ட் அணிக்கு போதா காலமாகவே இருந்தது. ஆனால் கோலியை கேப்டனாக்கியது, இந்திய அணிக்கு புத்துயிர் பாய்ச்சியதுபோல் இருந்தது. இலங்கையையும், தென்னாப்பிரிக்காவையும்  பந்தாடிய அணிக்கு,  உண்மையிலேயே மிகப்பெரிய சவால்தான் இது. தனது கேப்டன்ஷிப்பை நிரூபிப்பதையும் தாண்டி, வெளிநாட்டில் இந்தியா கண்ட தோல்விகளுக்கெல்லாம் நிகராக தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கோலி.
  

 

எதிர்த்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி,  பெரிய அளவிற்கு பலம் வாய்ந்த அணியாக இல்லாவிட்டாலும், விளையாடும் ஒவ்வொரு பிட்சுகளும் இந்திய அணிக்கு சவாலாக மாறியுள்ளன‌. 'சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில்தான் இந்திய அணியின் பாட்சா பலிக்கும்' எனும் கூற்றை உடைத்தெறிய வேண்டும். பொதுவாகவே வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் மற்ற வெளிநாட்டு பிட்சுகளை விடவுமே சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஸ்லோ-பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று கூடுதல் கவனத்துடன் ஆட வேண்டும். அதேபோல் இந்திய பந்துவீச்சாளர்களும் ஆடுகளத்தின் தன்மை உணர்ந்து பந்துவீச வேண்டும். 'சுழற்பந்து வீச்சாளர்கள் இத்தொடரில் மிகப்பெரிய பங்காற்றுவார்கள்' என்று தோனி கூறியிருப்பது, முற்றிலும் உண்மை. அஷ்வின்தான் கோலியின் மிகப்பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார். 5 பவுலர் உத்தியை பயன்படுத்தப் போவதாக கோலி கூறியிருக்கிறார். எனவே இந்த ஆடுகளங்களில், பந்தை ஸ்விங் செய்யும் புவனேஷ்குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

கோலியின் முழுக் கவனமும் பவுலிங் காம்பினேஷனில்தான் உள்ளது. பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறிவரும் கிரிக்கெட்டில், பந்துவீச்சுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் கோலி. “ஏழு பேட்ஸ்மேன்களை வைத்து 700 ரன்கள் எடுத்தாலும் அதனால் பயனில்லை. எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். இந்த அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட வேண்டும். நான் எப்போதும் 5 பவுலர்களோடு விளையாடுவதையே விரும்புகிறேன்” என்பதுதான் கோலி ஃபார்முலா. ஒரு பயிற்சியாளராக கும்ப்ளேவின் அறிமுக தொடரில்,  பவுலிங்கில் அடுத்த கட்டத்தைத் தொட இந்திய அணி முயற்சிக்கும். ரவி சாஸ்திரி தலைமையில், அட்டாக்கிங் கிரிக்கெட்டை வெளிப்படுத்திய நம் இளம் படையின் ஸ்டைல், கும்ப்ளேவின் கீழ் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்த வரையில், டேரன் பிராவோ மற்றும் சாமுவேல்ஸ் ஆகியோரையே பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. பவுலிங்கில் ஹோல்டரும் தேவேந்திர பிஷூவும் அணிக்கு சற்று அனுபவத்தைக் கூட்டுகிறார்கள். இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்த வரையில், ஃபார்மில் இருக்கும் ராகுலை விட தவானிற்கே முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரோஹித் மற்றும் புஜாராவுக்கும் இடையேயும் ஒரு போட்டி நிலவுகிறது. ஆனால் அணியின் இரு முக்கியத் தூண்கள் கோலியும் ரஹானேவும்தான். “வெஸ்ட் இண்டீஸ் மண்ணில்தான் எனது டெஸ்ட் பயணம் தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தெந்த ஏரியாக்களில் முன்னேற்றம் காண வேண்டும், என்பதை இங்குதான் நான் அறிந்து கொண்டேன்” என்று கூறிய கோலி, இந்திய அணியை எந்தெந்த துறைகளில் எப்படி முன்னேற்ற வேண்டும், என்று இத்தொடரில் கண்டறிந்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கும்ப்ளேவும் தனது முதல் தொடருக்கு முன்பாக பயிற்சிகளின்போது வீரர்களை செம வேலை வாங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக விளங்கிய கும்ப்ளேவுக்கு, கரீபிய மண்ணில் விளையாடிய அனுபவம் நிறையவே இருப்பதால், டீம் இந்தியாவிற்கு அது மேலும் பலம் சேர்க்கும். இதே மண்ணில்தான் கும்ப்ளே தாடை எலும்பு முறிந்து, கட்டுடன் வந்து லாரா விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்தத் தொடரைப் பொறுத்தவரை,  கோலி மற்றும் கும்ப்ளேவின் தலைமைக்கான சோதனை என்பதையும் தாண்டி,  அன்னிய மண்ணிலும் அமர்க்களப்படுத்தும் அணியாக இந்தியாவை உலகுக்கு பறைசாற்ற இதுவே சிறந்த வாய்ப்பு. இத்தொடரை வென்றால் டெஸ்ட் ரேங்கிங்கிலும் முதலிடம் பிடிக்கலாம்.

இப்போது வெஸ்ட் இண்டீஸில்  இந்திய அணியின் மைண்ட் வாய்ஸ்,  " வந்துட்டாங்கனு சொல்லு…தாதாவோட கேப்டன்ஷிப் ல ஃபாரீன் டூர்ல எப்படி கலக்குனாங்களோ... அப்படியே வந்திருக்காங்கனு சொல்லு..! "- கமான் இந்தியா 

- மு.பிரதீப் கிருஷ்ணா

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close