Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சிக்க வைத்துவிட்டனர்!'- குமுறும் மல்யுத்த வீரர் நார்சிங்


"நான் ஒரு போதும் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதில்லை. எனக்கு எதிராகச்  சதி நடந்துள்ளது. என்னைச்  சிக்க வைத்துவிட்டனர்" என்று இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். இதனிடையே, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதாக மேலும் ஒரு மல்யுத்த வீரர் சந்தீப் துல்சி யாதவ் சிக்கியுள்ளார்.

இந்திய முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நார்சிங் யாதவ். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்  ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான நார்சிங் யாதவின் வாழ்க்கையில் நேற்று பெரும் புயல் தாக்கி விட்டது. வீரர், வீராங்கனைகளுக்கு சுழற்சி முறைப்படி ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 5ம் தேதி நார்சிங் யாதவிடம் இருந்து மாதிரிகள் (சிறுநீர் அல்லது ரத்தம்) சேகரிக்கப்பட்டு தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு அனுப்பப்பட்டது.

அதன் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. நார்சிங், ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக தனது ‘பி’ மாதிரி சோதனையும் நடத்தும்படி கோரினார். ‘பி’ மாதிரி என்பது அவரிடம் ஏற்கெனவே எடுக்கப்படும் மாதிரியின் ஒரு பகுதி தனியாக வைக்கப்படுவது ஆகும். சந்தேகம் ஏற்படும் போது இன்னொரு முறை சோதனை செய்வதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அவரின் முன்னிலையில் ‘பி’ மாதிரி திறக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதிலும் அவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது உறுதியானது. இந்தத் தகவலை தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழக இயக்குனர் ஜெனரல் நவின் அகர்வால் தெரிவித்தார். இதன் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி இந்த விவகாரத்தில் மேலும் சில தகவல்களைக் கேட்டுள்ளது. அதன் பிறகு உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நார்சிங் யாதவின் உடலில் ‘மெடாடைனோன்’ (Metadienone) என்ற ஊக்கமருந்தின் தாக்கம் இருந்துள்ளது. இது தசையை வலுப்படுத்தவும், திறனை மேம்படுத்தவும் உதவும் மருந்தாகும். கடந்த காலங்களில் சில இந்தியர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தி சிக்கி இருக்கிறார்கள். ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதன் மூலம் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இனி அவர், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது குதிரை கொம்பு தான். ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைப்படி எல்லா வகையான போட்டியில் பங்கேற்பதில் இருந்தும் அவர் உடனடியாக இடை நீக்கம் செய்யப்படுவார். 26 வயதான நார்சிங், பால் வியாபாரியின் மகன் ஆவார். காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவரான அவர், தனக்கு எதிராகச் சதிவலை அரங்கேற்றப்பட்டிருப்பதாகக் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

"நான் ஒரு போதும் ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதில்லை. எனக்கு எதிராகச் சதி நடந்துள்ளது. என்னைச்  சிக்க வைத்துவிட்டனர். உண்மை விரைவில் வெளிவரும். இந்திய ஒலிம்பிக் சங்கம் எனக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று நார்சிங் கூறினார்.

"இது முற்றிலும் சூழ்ச்சியே, அவர் மீது இது போன்று எந்தக் குற்றச்சாட்டுகளும் வந்ததில்லை" என்று இந்திய மல்யுத்த சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு மல்யுத்த வீரர் சிக்கினார்

இதனிடையே, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதாக மேலும் ஒரு மல்யுத்த வீரர் சந்தீப் துல்சி யாதவ் சிக்கியுள்ளார்.

கடந்த 2013ல் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேக்கோ - ரோமன் பிரிவில் 66 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சந்தீப் துல்சி யாதவ், செர்பியாவின் அலெக்சாண்டர் மேக்சிமோவை 4-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ