Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கியில் கடன் வாங்கிய கணபதி ஒலிம்பிக்கில் மெடல் வாங்குவாரா!

கிரிக்கெட் வீரர்கள் தங்கத் தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில்தான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல, தமிழகத் தடகள வீரர் ஒருவர் வங்கியில் கடன் வாங்கிய அவலமும் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டனூரைச் சேர்ந்தவர் கணபதி.  நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள  மெட்ராஸ் ரெஜிமென்டில் ஹவில்தார் பணி செய்து வருகிறார். அதிவேக நடை மனிதர். சும்மா நடந்தாலே அதிரும். அத்தனை வேகமாக நடப்பார். தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் கலந்து கொள்ள, தகுதி பெற்ற 6 வீரர்களின் இவரும் ஒருவர்.

இந்திய ராணுவத்தில் இவருக்கு மாதச் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய். அதில்தான் குடும்பச் செலவையும் கவனிக்க வேண்டும்.  பயிற்சிக்குத் தேவையான பிற விஷயங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தவிதப் பின்புலமும் ஸ்பான்சர்களும் இல்லாமல் கணபதி தடுமாறினார். இதற்கிடையே ஜெய்ப்பூரில் நடந்த தேசிய  தடகளப் போட்டியில் நடை பந்தயத்தில் கணபதி 20 கிலோ மீட்டர் தொலைவை ஒரு மணி நேரம் 21 நிமிடம் 51 விநாடிகளில் கடந்தார். இந்திய அளவில் இதுதான் இரண்டாவது பெஸ்ட் டைமிங். ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றார்.

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றால் மட்டும் போதுமா. முறையான பயிற்சிக்கு எந்த வசதியும் இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய விவசாயக் குடும்பம். ஆனால் கணபதியின் தந்தைக்கு, மகனின் திறமை மீது நம்பிக்கை இருந்தது. நெருக்கடியான பொருளாதார நிலையிலும் மகனின் ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். வங்கி ஒன்றை அணுகி நிலையை எடுத்துக் கூறி  3 லட்ச ரூபாய் லோனுக்கு ஏற்பாடு செய்தார். வழக்கமாக லோன் கேட்டால் அலைக்கழிக்கும் வங்கி, கணபதிக்கு உடனடியாக லோன் வழங்கி  விட்டது மட்டும் சின்ன ஒரு சந்தோஷம். இப்போது கணபதி நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை. அந்த 3 லட்சத்தில் தேவையான அனைத்து விஷயங்களை பெற்று விட முடியாது என்றாலும் சமாளிக்கிறார் கணபதி.

தற்போது இலக்கை 1.20 நிமிடங்களில் இலக்கை கடக்க  திட்டமிட்டிருக்கிறார். ஒலிம்பிக்கில் தகுதி பெற்றிருப்பது கணபதியின் வேகத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. தீவிர பயிற்சியும் முயற்சியுமாக கணபதி இருக்கிறார்.

இதற்கிடையே இந்திய தடகள சம்மேளனம் 'டார்கெட் ஒலிம்பிக் போடியம் ' என்ற திட்டத்தில் கணபதியையும் சேர்த்தது. இதனால் தனது அனைத்துத் தேவைகளையும் இந்திய ஒலிம்பிக் சங்கமே பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இந்த விஷயத்தில் கணபதி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம்.  வீரர்களை ஏமாற்றும் பெயரளவுக்கான திட்டம் அது.  ஏற்கெனவே சாதித்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு கவனம் காட்டப்பட்டது.  இது தெரிய வந்தததும் நொந்து போனார் கணபதி.

"எனது சம்பளம் வெறும் 20 ஆயிரம் ரூபாய். பயிற்சிக்கு தேவையான ஷூ வாங்கவே 12 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். அப்படி வாங்கினாலும் 2 மாதம்தான் வரும். பழுதடைந்த ஷூவை  பயன்படுத்தினால் அது காயத்திற்குதான் வழிவகுக்கும். என்னைப் போன்ற  சூழலில் இருந்து இந்தளவுக்கு வந்ததே பெரிய விஷயம். நான் பட்ட கஷ்டம் அந்த கடவுளுக்குத்தான் தெரியும். லோன் வாங்கிய பிறகு மாதா மாதம் எனது சம்பளத்தில் இருந்துரூ. 5 ஆயிரம் பிடித்தம் போய் விடுகிறது.' டார்கெட் ஒலிம்பிக் போடியம் ' திட்டத்தில் சேர்க்கப்பட்டால், நல்ல சத்தான உணவு, வெளிநாட்டில் பயிற்சி, அலவென்ஸ், தேவையான கிட் அனைத்தும் கிடைக்கும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. நான் தனி ஆளாக போராடிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் வேதனையுடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close