Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான் வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - அஷ்வின் ராஜ்ஜியம்.

மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார், அஷ்வின். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் எடுத்த விஷ்வரூபம் மரண மாஸ் லெவல். சச்சின் டெண்டுல்கர், டிராவிட், லக்‌ஷ்மண், தோனி  போன்ற சீனியர் வீரர்களின் ஓய்வுக்கு பிறகு இளமைத்துடிப்புடன் ஃப்ரெஷ்ஷாக களமிறங்கி அசத்தி வருகிறது இந்திய அணி. விராட் கோலியின் வித்தியாச ஃபார்முலாவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.

இலங்கை அணியை அதன் மண்ணிலேயே தோற்கடித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் பல வருடங்களாக முன்னணியில் இருந்த தென்னாப்பிரிக்காவை, இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் சுருட்டி வீசியது. தற்போது மேற்கிந்திய தீவுகளில்  தடம் பதிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தபோது  பிட்ச் மந்தநிலையில் இருந்தது.  236  ரன்களுக்கு நான்கு  விக்கெட்டுகளை இழந்திருந்தபோது பேட்ஸ்மேன் வரிசையில் கோலி மட்டுமே களத்தில் இருந்தார். சஹா உட்பட அடுத்து வருபவர்கள் எல்லாமே சுமாராகவே விளையாடக்கூடியவர்கள் என்பதால், இந்தியா 350 ரன்களைத் தொட்டாலே அது நல்ல இன்னிங்ஸ் என கணித்திருந்தார்கள், கிரிக்கெட் நிபுணர்கள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஆறாவது நிலையில் சாஹாவுக்கு பதிலாக களமிறங்கியவர் ரவிச்சந்திரன் அஷ்வின். கோலி வெளுத்துக் கட்ட, அஷ்வின் தட்டிக் கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள், முதல் நாள் சோர்ந்து போனார்கள்.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் விராட் கோலி முதன் முறையாக இரட்டை சதம் அடித்தார். இந்திய அணியின் வரலாற்றிலேயே இந்திய அணிக்கு தலைமை தாங்கிய கேப்டன் ஒருவர் அந்நிய மண்ணில் இரட்டை சதம் அடிப்பது, இது தான் முதன்முறை என்பதால் வரலாற்றுச் சிறப்புக்கு சொந்தக்காரர் ஆனார். இதையடுத்து இந்திய அணி 404 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலி 200  ரன்களில் அவுட் ஆனார்.
 

அதன் பின்னர் அஷ்வின் ஆடிய ஆட்டம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது. மிக கவனமாக ஒவ்வொரு பந்துகளையும் தேர்ந்தெடுத்து விளையாடினார். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என எதுவும் அஷ்வின் முன் எடுபடவில்லை. சாஹா மற்றும் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டே ரன்களை சிறுகச் சிறுக சேர்த்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டே இருந்தார். இதற்கிடையில் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்ய அரங்கமே எழுந்து நின்று அஷ்வனுக்கு  கைதட்டியது. 253 பந்துகளை சந்தித்து 113 ரன்களை அஷ்வின் குவித்து அவுட் ஆனார். கிட்டத்தட்ட 42 ஓவர்கள் தனி ஒருவனாக நின்று சமாளித்திருக்கிறார் அஷ்வின்.

விராட் கோலி வெற்றியின் மீது அலாதி ஆர்வம் உள்ளவர். முடிந்தவரை வெற்றிக்காக போராட வேண்டும், வெற்றியே இலக்கு, டிரா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது அவரது வாதம். 'டெஸ்ட்டில் சாதனைகள் படைப்பது, 600 -700 ரன்களை எட்டுவது பெரிதல்ல, எதிரணியின் இருப்பது விக்கெட்டுகளை வீழ்த்துவது தான் முக்கியம். டெஸ்டில் எந்த அணி விரைவாக 20 விக்கெட்டுகளை வீழ்த்துகிறதோ அந்த அணி வெற்றி பெறும். அந்த வகையில் பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு சம பொறுப்பு இருக்கிறது' எனச் சொல்வார். ஐந்து பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர், ஐந்து பவுலர் என்ற விராட் கோலியின் பார்முலாவுக்கு அஷ்வின் மிகுந்த நம்பிக்கை அளித்திருக்கிறார்.
 

ஆறாவது, ஏழாவது நிலையில் இறங்கும் பவுலர் ஆல்ரவுண்டராக விளையாடினால் அது அணியின் சுமையைக் குறைக்கும் என்ற விராட்டின் கூற்றை ஏற்று,  இதோ நானிருக்கிறேன் என  தெம்பளித்திருக்கிறார் அஷ்வின்.  தான் இரட்டை சதமடித்ததை விடவும், அஷ்வினின் பெர்பார்மென்ஸ் குறித்து மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார் விராட். அஷ்வின் பேட்டிங்கோடு நின்றுவிடவில்லை, முதல் இன்னிங்ஸில்  விக்கெட்டையே இல்லை என்ற நிலையில் இருந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டைக் கைப்பற்றி 'நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப ஃபார்முக்கு வந்துட்டேன்னு சொல்லு' என தெறிக்கவிட்டிருக்கிறார்.

நான்காவது நாள் மைதானம் இன்னும் மந்தமாகிப்போக, சூழலுக்கு ஏற்ற பிட்சாக மாறிவிட அஷ்வினின் ஆஃப் ஸ்பின்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களால் பதில் சொல்ல முடியவில்லை. அஷ்வின் இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 17  முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியிருக்கிறார். மொத்தமாக 183 விக்கெட்டுகள். இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினால், கிளாரி கிம்மெட்டின்   உலக சாதனையை முறியடித்து, அதிவிரைவில்  டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் எனும் வரலாற்று சிறப்புக்கு சொந்தக்காரர் ஆவார் அஷ்வின்.

தமிழகம் மட்டுமின்றி, உலகமே கபாலி எதிர்பார்ப்பில் இருக்க, அஷ்வினுக்கும் கபாலி 'முதல் நாள் முதல் ஷோ' பார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ரஜினியின் அதி தீவிர ரசிகரான அஷ்வின் கிரிக்கெட் காரணமாக கபாலியைப் பார்க்க முடியாத வருத்தத்தை தன்னை வைத்து கலாய்த்த மீம்ஸை டிவிட்டரில் ஷேர் செய்து, சமாதானம் செய்து கொண்டார். ஆனால் அந்த கவலைகள் எல்லாம் தாண்டி அஷ்வினின் மாஸ் பெர்ஃபாமன்சில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி.

அஸ்வின் முதலிடம்

ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பந்தாடியது. இதே போல் மான்செஸ்டரில் நிறைவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

இவ்விரு டெஸ்டுகளில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர்களின் தர வரிசையில், அஷ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அயல்நாட்டின் ஆடுகளத்திற்கு அஷ்வின் தகுதி படைத்தவர் இல்லை என்ற என்ற விமர்சனங்களை கடக்க அஷ்வின் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அடுத்த மூன்று டெஸ்ட்களிலும் அஷ்வின் தொடர்ந்து அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.

- பு.விவேக் ஆனந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ