Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்: இந்தியா கடந்து வந்த பாதை...!

தோ களைகட்டிவிட்டது ஒலிம்பிக் போட்டி.... இந்த வருடம் இந்தியா பதக்கங்களை குவிக்க வேண்டும் என கனவு காணாத இந்தியனே இல்லை.

அதற்கு முன்பு இந்தியா ஒலிம்பிக்கில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கலாமா...?

1900

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான் இந்தியா முதன்முதலில் பங்கேற்றது.  மொத்தம் 24 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக்கில், நார்மன் பிரிச்சர்ட் என்ற ஆங்கிலோ-இந்தியன், இந்தியா சார்பாக பங்கேற்று 200மீ ஓட்டப்பந்தயம் மற்றும் 200மீ  தடை தாண்டுதல் ஆகிய பிரிவுகளில், வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியா 17 வது இடத்தைப் பிடித்தது.

1920

அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து,  1920ல் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான் இந்தியா பங்கேற்றது. இந்தியா சார்பாக மொத்தம் 5 வீரர்கள் கலந்து கொண்டனர். புர்மா பானர்ஜீ என்ற தடகள வீரர்,  இந்திய அணிக்கு தலைமை  ஏற்று,  கொடி ஏந்தி சென்றார். 3 தடகள வீரர்களும் 2 மல்யுத்த வீரர்களும் கலந்து கொண்டனர்.  இந்தியா, இதில் பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

1924

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக டென்னிஸில் கலந்து கொண்டது. போலே என்ற டென்னிஸ் வீராங்கனை, இந்திய அணியில் பங்குபெற்ற முதல் பெண் ஆவார். 13 வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

1928

இது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமா ஒலிம்பிக். இந்த ஒலிம்பிக்கிற்கு ஓராண்டுக்கு முன்னர்தான் டாடா குழும நிறுவனரான தோராப்ஜியின் பெரு முயற்சியில் இந்தியா ஒலிம்பிக் சங்கம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் இந்தியா அணி பங்கேற்றது. ஹாக்கியில் முதல் முறையாக பங்கேற்று தங்கம் வென்றது.

1932

இந்த முறை மீண்டும் ஹாக்கியில் இந்தியா தங்கம் வென்றது. நளின் மாலிக் என்ற நீச்சல் வீரர், இந்தியா சார்பாக முதன் முறையாக கலந்து கொண்டார்.

1936

இந்த முறை இந்திய அணிக்கு தலைமையேற்று கொடியேந்தி சென்றவர், ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த். இந்த முறை மீண்டும் தங்கம் வென்று ஹாக்கியில்  ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா. யூ சா விக் என்ற வீரர் பளுதூக்கும் போட்டியில் இந்திய சார்பாக முதல் முறையாக கலந்து கொண்டார்.

1948

இரண்டாம் உலகப்போரின் காரணமாக 12 வருட இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற ஒலிம்பிக்,  சுதந்திர இந்தியா பங்கேற்ற முதல் ஒலிம்பிக் ஆகும். நான்காவது முறையாக ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா.

1952

இந்தியா குடியாட்சி பெற்ற பிறகு பங்கேற்ற முதல் ஒலிம்பிக். ஐந்தாவது முறையாக ஹாக்கியில் தங்கம் வென்று வரலாறு படைத்தது. 28 ஆண்டு இடைவெளிக்கு பிறகு பெண்கள் மீண்டும் இடம் பெற்றிருந்தனர். முதல் முறையாக, மல்யுத்தத்தில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. அந்த வெற்றியின் சொந்தக்காரர் காஷாபா ஜாதவ்.

1956

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஹாக்கியில் இந்தியா தங்கம் வென்றது. பதக்கப்பட்டியலில் இந்தியா 24 வது  இடத்தை பெற்றது.

1960

ரோமில் நடந்த இந்த ஒலிம்பிக் இந்தியாவிற்கு மறக்க முடியாத இரண்டு தோல்விகளை தந்தது. ஒன்று பறக்கும் சீக்கியர் என்றழைக்கப்படும் மில்கா சிங்கின் தோல்வி. மற்றொன்று இந்திய ஹாக்கி அணியின் தங்க வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த தோல்வி. இந்தியா ஒரேயொரு வெள்ளிப் பதக்கத்தோடு 32 வது இடத்தைப் பெற்றது.

1964

இந்திய ஹாக்கி அணி மீண்டும் எழுச்சி பெற்று, 7 வது முறையாக தங்கம் வென்றது. இந்தியா பதக்கப்பட்டியலில் 24 வது இடத்தைப் பெற்றது.

1968

வெறும் 25 ஆண்கள் மட்டுமே இந்த ஒலிம்பிக்கில் இந்திய சார்பாக கலந்து கொண்டனர். இந்த ஒலிம்பிக் இந்தியாவிற்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. ஹாக்கியில் கூட வெண்கல பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. பதக்க பட்டியலில் 42 வது இடத்தையே பெற முடிந்தது.

1972

இந்த முறையும் ஏமாற்றமே.., ஹாக்கியிலும் வெண்கலப்பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. மூன்று மல்யுத்த வீரர்கள் நான்காவது இடத்தை பெற்றனர். இந்திய பட்டியலில் 43 வது இடத்தைப் பெற்றது.

1976

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மிக மோசமான ஒலிம்பிக் இதுதான். 1928-க்கு பிறகு ஒரு பதக்கம் கூட வெல்லாத முதல் ஒலிம்பிக் இதுதான். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரீராம் சிங் பெற்ற ஏழாம் இடமே இந்தியாவின் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

1980

மாஸ்கோவில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கை, அமெரிக்கா உள்ளிட்ட 65 நாடுகள் புறக்கணித்தன. அப்படி இருந்தும்  ஹாக்கியில் மட்டுமே இந்தியாவால் தங்கம் வெல்ல முடிந்தது. வேறு எதிலும் பதக்கங்கள் வெல்ல முடியவில்லை. பட்டியலில் கூட 21 வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

1984

1960ல் மில்கா சிங்கிற்கு நேர்ந்தது, இந்த முறை பி டி உஷாவிற்கு நேர்ந்தது. 400 மீட்டரில் நான்காவதாய் வந்து ஏமாற்றத்தையே தந்தார். ஹாக்கி அணி மிக மோசமான தோல்விகளைச் சந்தித்தது. பதக்கப்பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பை கூட நழுவவிட்டது.  

1988

எந்த வெற்றியையும் இந்தியா பெறவில்லை. இரண்டாவது முறையாக பதக்கம் ஏதும் இல்லாமல் வீரர்கள் தாய் நாடு திரும்பினர்.

1992

ஷைனி ஆபிரகாம் என்ற வீராங்கனை, இந்திய அணிக்கு தலைமையேற்று சென்றதே இந்த ஒலிம்பிக்கின் சாதனையாகும். இந்த வருடமும் வெறும் கையுடனேயே நாடு திரும்பினர்.

1996

இந்தியாவின் பதக்க தாகத்தை, லியாண்டர் பயஸ் வெண்கல பதக்கம் மூலம் தணித்தார். ஒரேயொரு பதக்கத்துடன் இந்தியா 71 வது இடத்தைப் பெற்றது.

2000

கர்ணம் மல்லேஸ்வரி பளுத்தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் புரிந்தார். பதக்கப்பட்டியலில், இந்தியா எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

2004

இந்தியா துப்பாக்கி சுடுதலில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஆண்கள் டபுள் ட்ராப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பட்டியலில் 65 வது இடத்தை பிடித்தது.

2008

இது இந்தியாவிற்கு சாதனைகள் நிறைந்த ஒலிம்பிக். மூன்று பதக்கங்கள் வென்றதும், தனி நபர் ஒருவர் தங்கப்பதக்கம் வென்றதும் இதுவே முதல் முறை. அபினவ் பிந்தரா 10மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கமும், வீஜேந்தர் சிங் குத்துச்சண்டையிலும், சுஷில் குமார் மல்யுத்தத்திலும் வெண்கல பதக்கமும் வென்றனர். பதக்கப்பட்டியலில் 50 வது இடத்தைப் பிடித்தது.

2012

இந்தியா அதிக பதக்கங்களை வென்ற ஒலிம்பிக். விஜய் குமார் துப்பாக்கி சுடுதலிலும், சுஷில் குமார் மல்யுத்தத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சாய்னா பேட்மிண்டனிலும், ககன் நரங்  துப்பாக்கி சுடுதலிலும், மேரி கோம் குத்துச்சண்டையிலும், யோகேஸ்வர் தத் மல்யுத்தத்திலும் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்தியா பதக்கப்பட்டியலில் 55 வது இடத்தைப் பெற்றது.

- செ.ஜெ.பச்சமுத்து

( மாணவ பத்திரிகையாளர் )

எடிட்டர் சாய்ஸ்

MUST READ