Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக சாதனை: பால் போக்பாவை ரூ.740 கோடிக்கு மான்செஸ்டர் வாங்கியது!

யுவான்டஸ் அணியின் மிட்பீல்டர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ரூ.740 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜோஸ் மோரின்ஹோ பொறுப்பேற்ற பின், ஸ்வீடன் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்லாட்டன் இப்ராஹிம்விச்சை ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வந்தது. தற்போது யுவான்டஸ் அணியுடன் பேரம் படிந்துள்ளது. அதன்படி, 89 மில்லியன் பவுண்டுக்கு  (இந்திய மதிப்பில்  ரூ.740 கோடி) பால் போக்பாவை,  மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம், உலகிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையை 23 வயது பால் போக்பா பெறுகிறார். கடந்த 2013 ம் ஆண்டு, டாட்டன்ஹாம் அணிக்காக விளையாடி வந்த காரத் பேலை, ரியல்மாட்ரிட் அணி  ரூ.700 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. கால்பந்து உலகில் அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமை  நேற்று வரை காரத் பேலுக்கு இருந்தது. தற்போது, அதனை பால்போக்பா முறியடித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு,  பால் போக்பா மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகத்தான் விளையாடி வந்தார். பின்னர் யுவான்டஸ் அணியில் இணைந்தார். பால்போக்பா யுவான்டஸ் அணிக்காக விளையாடிய 4 சீசன்களிலும் யுவான்டஸ், இத்தாலி சீரி 'ஏ' கோப்பையை தொடர்ந்து கைப்பற்றியது. கடந்த 2015 ம் ஆண்டு, சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்துக்கும் முன்னேறியது. யுவான்டஸ் அணிக்காக பால் போக்பா,  4  சீசன்களில் 178 ஆட்டங்களில் விளையாடி,  34 கோல்களை அடித்துள்ளார். பிரான்ஸ் அணிக்காக 38 போட்டிகளில் 6 கோல்களை அடித்துள்ளார்.

முந்தைய
சாதனை ஒப்பந்தம்

2013 -காரத் பேல்- 86 மில்லியன் பவுண்டு ( டாட்டன்ஹாம் டூ ரியல்மாட்ரிட்)

2009- ரொனால்டோ- 80 மில்லியன் பவுண்டு ( மான்செஸ்டர் யுனெட்ட டூ  ரியல்மாட்ரிட்)

2016 - ஹீகுவான்- 75.3 பவுண்டு   (நேபோலி டூ யுவான்டஸ் )

2014 -சவுரெஸ் - 75 மில்லியன் பவுண்டு (லிவர்பூல்  டூ பார்சிலோனா)

2013- நெய்மர் -71.5  மில்லியன் பவுண்டு சான்டோஸ் டூ பார்சிலோனா

2009- ககா- 56 மில்லியன் பவுண்டு (ஏ.சி.மிலன் டூ  ரியல்மாட்ரிட்)

2001- ஜினடேன் ஜிடேன்- 46 மில்லியன் பவுண்டு (யுவான்டஸ் டூ ரியல் மாட்ரிட் )

2000- லூயீஸ் பிகோ- 37 மில்லியன் பவுண்டு (பார்சிலோனா டூ ரியல்மாட்ரிட் )


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ