Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைக்கேல் பெல்ப்ஸ்... ஒவ்வொரு தழும்பும் ஒரு தங்கம்!

ரி​யோ ஒலிம்பிக்​கில்​ ஒரு விஷயம் அனைவ​ர​து கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏராளமான  ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின்  உடலில் சிவப்பு நிறத்தில் பெரிய பெரிய  தழும்புகளைக்​ காண முடிகிறது. அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் உடலிலும், இந்த வட்டத் தழும்புகள் உள்ளன.

இந்தத் தழும்புகள் டாட்டூவாலோ  அல்லது காயம் காரணமாகவோ ஏற்பட்டதில்லை. அதிகளவில் உடற் பயிற்சியில் ஈடுபடுவதால், அதனால் ஏற்படும் உடல் வலியை குறைப்பததற்காக அளிக்கப்படும் "கப்பிங்" (cupping) எனும் பழங்கால  சிகிச்சை முறையால்தான், பெல்ப்ஸ போன்ற வீரர்களின் உடலில் இது போன்ற வட்ட வட்டத் தழும்புகள் இருக்கின்றன என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.

கப்பிங் என்றால் என்ன?

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் 'அக்குபஞ்சர் ' போன்றதொரு சிகிச்சைமுறைதான் இந்த கப்பிங். அங்கிருந்து ஐரோப்பா, வளைகுடா நாடுக​ளிள் பரவி  பிரபலம் அடைந்தது.  கண்ணாடி குவளையில் எரியக்கூடிய திரவத்தை (flammable liquid) ஊற்றி எரிய விட்டு அதை உடம்பில் வைத்து விடுவார்கள். அந்த நெருப்பு அணைந்ததும், ஒருவித​ உறிஞ்சும் தன்மை​ ​(​suction​)​ ஏற்படும்.அதனால் அந்தப் பகுதியிலுள்ள தோல் பிய்ந்து விடும். இந்த சிகிச்சை முறையால், உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கண்ணாடி குவளைகளுக்கு முன்பாக, மூங்கில்கள் உபயோகப்படுத்தப்பட்டன. சீனாவிலும் வேறு சில நாடுகளிலும், "ஹிஜாமா" அல்லது​ வெட் கப்பிங்​ ​(​wet cupping​)​ என்ற முறையும் பின்பற்றப்படுகிறது. அதன்படி, கண்ணாடி குவளைகள் வைக்கப்படுவதற்கு முன்னால், அந்த இடத்தில் சிறிய, 'கீறல்' ஒன்று ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். இந்த  கப்பிங்கின் சிகிச்சையின் போது சிறிதளவு ரத்தம் கசியும்.

உடல் வலியைக் குறைத்து வலிமையை அதிகரிப்பதாக விளையாட்டு வீரர்கள் நம்புகின்றனர்.. இதனால்தான் ரியோ ஒலிம்பிக்கில் ஏராளமான கப்பிங் அடையாள வீரர்களைக் காண முடிகிறது. பல்வேறு விதமான மசாஜ்களும், சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டாலும், கப்பிங் போல சிறந்த சிகிச்சை வேறு ஏதுமில்லை என்று அமெரிக்க வீரர் அலெக்ஸ் நடொர் கூறியிருக்கிறார்.

ஆண்களுக்கான 4x100மீ ஃப்ரீ ஸ்டைல் தொடர்நீச்சலில்,  மைக்கேல் பெல்ப்ஸ் நீந்திக்  கொண்டிருக்கையில், அவரது உடலில் தென்பட்ட தழும்புகள், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தின.பின்னர் அது கப்பிங் முறையினால் ஏற்பட்ட தழும்பு என பெல்ப்ஸ் விளக்கியபிறகே அனைவருக்கும் உண்மை விளங்கியது.

கப்பிங் சிறந்த வலி நிவாரணி மட்டுமல்லாமல் குழந்தையின்மை பிரச்னைகளைக் கூட தீர்ப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால்,  கப்பிங்  உறுதியான ஒரு சிகிச்சை முறை கிடையாது, என்ற சர்ச்சையும் இருக்கிறது.  யுனிவர்சிட்டி ஆஃப் எக்செடர்-ஐ சார்ந்த பேராசிரியர் எட்சார்ட் எர்ன்ஸ்ட் கூறுகையில், " ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளாக கப்பிங் சிகிச்சை முறை பயன்பாட்டில்  இருந்தாலும்,  இதனால் ஆபத்தில்லை என்றோ, சிறந்த வலி நிவாரணி எனவோ  கூறமுடியாது '' என்கிறார்.

கடந்த 2004ம் ஆண்டில் பிரபல அமெரிக்க நடிகை, வைநெத் பால்ட்ரோ ர் கப்பிங் செய்த தழும்போடு ஒரு விழாவிற்கு வந்திருந்தார். இவரைத் தவிர 'ஸ்பைஸ் கேர்ள்ஸ்' குழுவைச் சேர்ந்த விக்டோரியா பெக்காம் மற்றும் ஜெனிபர் அனிஸ்டன் போன்ற பிரபலங்களும் கப்பிங் சிகிச்சைமுறையை மேற்கொண்டுள்ளனர்.

கப்பிங் செய்யும் போது  வலி அவ்வளவாக இருக்காது என சொல்லப்படுகிறது . சிகிச்சையின் போது கொஞ்சம் ரத்தம் உ​றிஞ்சப்படுவதால் தழும்புகள் ஏற்படுகின்றன. நாளடைவில் இந்தத் தழும்புகள் தானாகவே மறைந்து விடவும் வாய்ப்புள்ளது. உண்மையில் கப்பிங் பயன் தருகிறதா... கப்பிங் சிகிச்சையின் போது வலிக்குமா... என்பது குறித்து ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு கருத்து இருக்கிறது.

ஆனால்.. ஒலிம்பிக் பதக்கத்துக்காக ஒவ்வொரு வீரரும் எத்தனை வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்ற வலிதான்   நமக்கு ஏற்படுகிறது.

 - ந.ஆசிபா பாத்திமா பாவா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ