Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது குவைத்!- ஆனால்...

லிம்பிக் போட்டியில் குவைத்தை சேர்ந்த, ஃபெகாய் அல் திஹானி  தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் குவைத் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. ஆனால் பதக்கம் அதற்கு சொந்தமில்லை.

ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்க குவைத் நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் அரசின் தலையீடு இருந்த காரணத்தினால் குவைத் ஒலிம்பிக் சங்கத்துக்கு  கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஓ.சி தடை விதித்தது. தடையை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் உள்ள, சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் குவைத் முறையிட்டது. ஆனால் தடையை நீக்க சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.  அதே வேளையில், ஒலிம்பிக் கொடியின் கீழ்  குவைத்தை சேர்ந்த வீரர்கள் 'இன்டிபெண்டன்டாக' பங்கேற்க தடையில்லை என அறிவித்தது.

அந்த வகையில், குவைத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஃபெகாய் அல் திஹானி துப்பாக்கி சுடும் போட்டியில் டபுள் ட்ராப் பிரிவில் பங்கேற்றார். இந்த பிரிவில், இத்தாலி வீரர் மார்கோ இன்சென்ட்னியை 26-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி ஃபெஹாய் அல் திஹானி தங்கம் வென்றார். இதற்கு முன், சிட்னி மற்றும் லண்டன்  ஒலிம்பிக்கில் இதே பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார் திஹானி. தற்போது  தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். திஹானி போடியம் ஏறும்போது , குவைத் தேசிய கீதத்துக்கு பதிலாக ஒலிம்பிக் கீதமே இசைக்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியின்போது, ஒலிம்பிக் கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் பங்கேற்க ஐ.ஓ.சி திஹானியை நிர்பந்தித்தது. ஆனால் அவரோ,'' தாய்நாட்டுத் தேசியக் கொடியைத் தவிர வேறு எந்த கொடியையும் கையில் ஏந்தும் எண்ணம் எனக்கில்லை ''என மறுத்துவிட்டார். பின்னர், ஒரு பேட்டியில், ''நான் ஒரு ராணுவ வீரன். எனது கையில், தாய்நாட்டு தேசியக் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியையும் ஏந்த  முடியாது'' என கூறியிருந்தார் திஹானி.

ஒலிம்பிக் போட்டியில் குவைத்த தங்கம் வென்றிருந்தாலும், பதக்கப் பட்டியலில் குவைத்தின் பெயர் இடம் பெறாது. அதற்கு பதிலாக, 'இன்டிபெண்டன்ட் அத்லெட் ' என்ற பெயரே இடம் பெறும். ஒலிம்பிக் வரலாற்றில் இதற்கு முன் குவைத் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அந்த இரு பதக்கங்களையும் திஹானிதான் வென்று கொடுத்தார். தற்போது தங்கப் பதக்கமும் வென்று காட்டிவிட்டார். ஆனாலும் தாய் நாட்டுப் பெயர் பதக்கப்பட்டியலில் இடம் பெற முடியாமல் போனதுதான் மகிழ்ச்சியிலும்  சோகத்தைக் கலந்துள்ளது. 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ