Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊக்க மருந்து பரிசோதனைக்கு வித்திட்ட மரணம்! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 10)

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8  9 


 

பிரான்சிஸ்கோ லஸாரோ - போர்ச்சுகலில் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில், கட்டுமானப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஓட்டப்பந்தயங்களில் ஆர்வம் உண்டு. போர்ச்சுகலில் தேசிய அளவில் நடந்த மாரத்தான் போட்டிகளில், சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஆகவே லஸாரோவை, 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸுக்கு போர்ச்சுகல் அனுப்பி வைத்தது.

மாரத்தானில் ஓடும் பிரான்சிஸ்கோ லஸாரோ

 அன்று ஜூலை 14. சூரியன் தகதகவெனப் பிரகாசித்தது. இந்த மாரத்தானில் மொத்தம் 68 வீரர்கள் கலந்து கொண்டனர். உத்வேகத்துடன் ஓட ஆரம்பித்த லஸாரோவை, போகப் போக களைப்பு ஆட்கொண்டது; இருந்தும் விடாமல் ஓடினார். 'மொத்தத் தொலைவையும் கடந்தே தீர வேண்டும்' என்ற வெறியுடன் முன்னேறினார். நாக்கு வறண்டது, தலை சுற்றியது, கண்கள் இருட்டின...சுருண்டு கீழே விழுந்தார். மீண்டும் எழவே இல்லை.

களைப்பால், சோர்வால், தாகத்தால், உடலின் நீர் வறட்சியால் லஸாரோ இறந்துபோனார் என்று முதலில் நம்பினார்கள். பிறகு அவரது உடலை ஆராய்ந்தபோதுதான் ஒரு விஷயம் தெரிய வந்தது. சூரிய வெப்பம் தன்னைத் தாக்கமால் இருப்பதற்காக லஸாரோ, உடலில் ஆங்காங்கே மெழுகைப் பூசியிருக்கிறார். அது உடலில் இயற்கையாக வியர்வை வெளியேறுவதைத் தடுத்திருக்கிறது. உடலில் வெப்பம் ஏறி, சுருண்டு விழுந்து இறந்து போயிருக்கிறார் 21 வயது லஸாரோ. ஒலிம்பிக் வரலாற்றில் நிகழ்ந்த முதல் மரணம் இதுவே.

1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில், ருமேனியாவைச் சேர்ந்த நிக்கோல், ஃபெதர்வெயிட் பிரிவில் கலந்துகொண்டார். எதிராக மோதியவர் எஸ்டோனியாவைச் சேர்ந்த எவால்ட். முதல் சுற்றிலேயே எவால்டின் ஆக்ரோஷத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நிக்கோல் சுருண்டார்.

செக்கோஸ்லோவாகியா ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள்

நான்காவது நாள் நிக்கோல் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் ரத்தத்தில் விஷம் கலந்திருந்ததாக செய்திகள் வெளியாயின. 'எவால்டின் தாக்குதலால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால்தான் நிக்கோல் மரணமடைந்தார்' என்றொரு கோணத்திலும் செய்திகள் வெளியாயின. நிக்கோல் எதனால் மரணமடைந்தார் என்பதில் தெளிவில்லை. ஆனால், ஒலிம்பிக்கின் வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் இது.

1948 ல்,  லண்டனில் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. செக்கோஸ்லோவாகியாவைச் சேர்ந்த வீராங்கனைகள், ஜிம்னாஸ்டிக்கில் கலக்கினார்கள். அந்த அணியில் 22 வயது எலிஸ்கா மிஸாகோவா என்ற இளம்பெண்ணும் இடம் பெற்றிருந்தார். துறுதுறுவென்ற வீராங்கனை. நிச்சயம் தங்கம் வாங்கிவிட்டுத்தான் தாயகம் திரும்ப வேண்டுமென்று அந்தப் பெண்கள் முனைப்புடன் பயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், லண்டனுக்கு வந்த நாளிலிருந்தே எலிஸ்காவுக்கு உடல்நிலை சரியில்லை. போட்டி நெருங்கியபோது எலிஸ்காவின் உடல்நிலை மோசமானது. அவளை அங்கே ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். மருத்துவர்கள் இளம்பிள்ளை வாதம் என்றார்கள். குணப்படுத்துவது கடினம் என்றும் கையை விரித்தார்கள்.

எலிஸ்கா மிஸாகோவா

 

ஆகஸ்ட் 14, சக ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் இறுதிச் சுற்றில், முனைப்புடன் தங்கத்தை நோக்கி  தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், மருத்துவமனையில் எலிஸ்காவின் உயிர் பிரிந்தது. சக வீராங்கனைகள், தங்கப் பதக்கத்தைக் கழுத்தில் ஏந்த, கண்ணீருடன் போடியத்தில் ஏறினர். அப்போது செக்கோஸ்லோவாகிய கொடியுடன் ஒரு கருப்பு ரிப்பனும் சேர்த்து ஏற்றப்பட்டது.

1908ல் எரிமலைச் சீற்றத்தால் பொசுங்கிப் போன ரோமின் ஒலிம்பிக்ஸ் கனவு, 1960ல் கைகூடியது. அங்கே ஒரு சைக்கிள் பந்தயத்தில் நடந்த சம்பவம், அதனால் எழுந்த சர்ச்சைகள், ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.

 

ஆகஸ்ட் 26 அன்று, 100 கிமீ சைக்கிள் பந்தயம் ஒன்று நடைபெற்றது. அணிக்கு 4 பேர். மொத்தம் 32 தேசங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. நட் ஜென்சன், வேகன், நீல்ஸ், ஜோர்கன் என்ற நான்கு வீரர்கள் அடங்கிய டென்மார்க் அணியும் அதில் ஒன்று. ரோமின் பசிபிக் கடற்கரைச் சாலையில் பந்தயம் ஆரம்பமானது. அன்றைக்கு வெயில் 40 டிகிரி செல்சியஸாகக் கொதித்தது.

பந்தயம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே சில வீரர்கள், உடலிலிருந்து அதிக நீர் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டனர். தண்ணீரைக் குடித்தும், மேலே ஊற்றிக் கொண்டும் சமாளித்தபடி சைக்கிளை மிதித்தனர். போட்டி ஆரம்பமாவதற்கு முன்பே டென்மார்க்கின் ஜென்சனுக்கு உடல் நிலை சரியில்லை. முதல் சுற்றை முடிக்கும்போதே, டென்மார்க் அணியின் இன்னொரு வீரரான ஜோர்கன் களைத்துப் போனார். போட்டியிலிருந்து விலகினார். போட்டி விதியின்படி, அணியில் மூன்று பேராவது மொத்தத் தொலைவையும் கடந்து முடிக்க வேண்டும். இல்லையேல், அணி தகுதி நீக்கம் செய்யப்படும்.

ஜென்சன் பல்லைக் கடித்தபடி சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார். விலகி விடலாம் என்று தோன்றியது. ‘எனக்கு மயக்கம் வருகிறது’ என்றார் ஜென்சன். சக வீரர்களான வேகனும் நீல்ஸும் கட்டாயப்படுத்தினர். அவரது முகத்தில் தண்ணீரைத் தெளித்தனர். தண்ணீர் குடிக்கச் செய்தனர்.

ஜென்சன் உடன் நீல்ஸ் மற்றும் வேகன்

அதற்குப் பிறகும் ஜென்சன் சைக்கிளை மிதிக்க இயலாமல் தடுமாறினார். வேகனும் நீல்ஸும் அவருக்கு இருபுறமும் சைக்கிளை மிதித்தபடி வந்தனர். ஜென்சனின் சட்டையைப் பின்புறமாகப் பிடித்து இழுத்தபடி முன்னேறினர். சிறிது தூரம் சென்றிருப்பார்கள். ஜென்சன் சைக்கிளை ஓட்டுவதுபோலத் தெரிந்தது. இருவரும் அவரை விட்டு சிறிது விலகிய சமயத்தில், நிலைகுலைந்த ஜென்சன் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அந்த வேகத்தில் நடைபாதையில் அவரது தலை மோதியது.

பதறிய நீல்ஸும் வேகனும் தங்கள் சைக்கிள்களை கீழே போட்டுவிட்டு, ஜென்சனை நோக்கி ஓடி வந்தனர். உதவி வாகனமும் உடனே அங்கே வந்தது. ஜென்சனைத் தூக்கி ஓர் ஓரமாகக் கிடத்தினர். முதலுதவிகள் செய்தனர். ஜென்சனின் மயக்கம் தெளியவில்லை. அருகிலிருந்த ராணுவ முகாமுக்கு ஜென்சனை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அன்று மதியம் வரை ஜென்சனுக்கு நினைவு திரும்பவில்லை. அவர் அன்றே இறந்தும் போனார்.

ஜென்சன் மரணம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தன. விசாரணைகள் நடந்தன. டென்மார்க் சைக்கிளிங் டீம் பயிற்சியாளராக இருந்த ஜோர்ஜென்ஸன், டென்மார்க் அரசு விசாரணை அதிகாரிகளிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்தார். ‘ஜென்சனுக்கும் இன்னொரு வீரருக்கும் போட்டிக்கு முன்பாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஊக்க மருந்து ஒன்றைக் கொடுத்தேன்.’ என தெரிவித்தார்.

மயங்கி விழுந்த ஜென்சன்

ஊக்க மருந்துதான் ஜென்சனின் மரணத்துக்குக் காரணம் என்று செய்திகள் அலறின. ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் ஊக்க மருந்துகளைக் கையாள்வதைக் கண்காணிக்க வேண்டும் என்று குரல்கள் எழும்பின. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இதற்காக மருத்துவ கமிட்டி ஒன்றை 1961ல் நிறுவியது. அதற்குப் பிறகே, ஒலிம்பிக்கில் வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துவதைத் தடுக்கும் விதத்தில் விதிகள் இறுக்கப்பட்டன. 1968ல் பிரான்ஸில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸில், வீரர்களுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தும் வழக்கம் ஆரம்பமானது.

ஆக ஜென்சனின் மரணமே, ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து பரிசோதனை கறாராக நடத்தப்படுவதற்கு வித்திட்டது. ஆனால், ஜென்சன் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. 1961ல், ஜென்சனின் பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்தினார்கள். ஜென்சன் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தபோது, அவரது தலை நடைபாதையில் மோதி, மண்டை ஓட்டில் கீறல் உண்டாகியிருக்கிறது. அதிக வெப்பத்தால் உண்டான பக்கவாதத்திலேயே ஜென்சன் இறந்து போயிருக்கிறார். அவரது உடலில் ஊக்க மருந்து பயன்படுத்தியற்கான மாதிரிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நிலைதடுமாறி மயங்கி விழுந்த ஜென்சன், ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டும், அங்கே அவரது உடலைக் குளிர்விக்க முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்தக் கூடாரமும் அதீத வெப்பத்தால் தகித்தது. எல்லாம் சேர்ந்தே ஜென்சனின் உயிரைப் பறித்து விட்டது என்பதே உண்மை.

இப்படி ஒலிம்பிக் போட்டிகளின் களத்தில், களத்துக்கு வெளியில் நிகழ்ந்த விபத்துகளில், பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்துகளில் என்று பல்வேறு விதங்களில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால், அந்த 11 பேரின் மரணம் அனைத்திலும் கொடூரமானது.

(டைரி புரளும்.)

அடுத்த அத்தியாயம்: ஒலிம்பிக்கின் ரத்தச் சரித்திரம்

- முகில்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ