Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாப்பி பர்த்டே ''மிஸ்டர் க்ளாஸிக்'' சந்தர்பால்

வினோதமான பேட்டிங், மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி ஆடினாலும் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம், பந்துகளை தரையோடு பவுண்டரிக்கு விரட்டுவது ஒரு கலை. அதனை சிறப்பாக செய்பவர்; இதனையெல்லாம் அசால்ட்டாக  செய்து காட்டியவர்  வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ் நாராயண் சந்தர்பால். அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு கிளாசிக் கிரிக்கெட்டரான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1974ம் ஆண்டு கயானாவில் பிறந்த சந்தர்பால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தலைசிற‌ந்த வீரர்களில் ஒருவராக விளங்கினார். லாரா, ரிச்சர்ட்ஸ் வரிசையில் மிகவும் பேசப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர். மிகப்பெரிய ஜாம்பவான்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு சமயத்தில் அனைவருமே ஒய்வு பெற்றபோது, ஒற்றை ஆளாக வெஸ்ட் இண்டீஸின் நடு வரிசையை சமாளித்தவர் ஷிவ் நாராயண் சந்தர்பால்.

ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் சந்தர்பாலை அவுட் ஆக்கினால் போதும் என மற்ற அணிகள் உத்திகளை வகுக்கும் அளவுக்கு அணியின் தவிர்க்க முடியாத வீரர் இவர். தனி ஒரு ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் கில்லி.

இவரது பேட்டிங் ஸ்டைல் மற்ற வீரர்களிடமிருந்து வித்தியாசமானது. மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி ஆடுவது, ஆட்டத்தை துவங்கும் போது ஸ்டெம்பை எடுத்து மைதானத்தில் சிறிய அடையாளமிட்டு அந்த ஸ்டெம்பை மையப்படுத்தி ஆடுவது என சர்வதேச கிரிக்கெட்டின் ஸ்டைலிஷ் ப்ளேயர்களில் ஒருவர். நீண்ட நாட்கள் இவரது கன்னத்தில் இருந்த டாட்டூவும் இவரது ஸ்டைல்களில் ஒன்று. 

இவரை மிகச் சிறந்த டெஸ்ட் ப்ளேயர் என்று கூறுவர். அதற்கேற்றார்போல் 2002ம் ஆண்டு ஆன்டிகுவா டெஸ்டில் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்தவர். அதில் 510 பந்துகளை சந்தித்து 11 மணிநேரம் களத்தில் இருந்து நான்காவது டெஸ்ட்டை ட்ரா செய்தார். இந்திய கேப்டன் கங்குலி, சந்தர்பாலை அவுட் செய்ய முடியாமல் தவித்ததற்கு சாட்சி, விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா உட்பட 11 போரையும் பந்துவீச வைத்ததுதான். அணியின் அனைத்து வீரர்களும் பந்து வீசியும் சந்தர்பாலை வீழ்த்த முடியவில்லை. அடுத்த வருடமே 69 பந்துகளில் ஆஸிக்கு எதிரான டெஸ்ட்டில் சதமடித்து தன்னால் விரைவாக ரன் குவிக்க முடியும் என்பதை நிரூபித்தார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் விரைவான சதத்தை பதிவு செய்தவர்களில் 4ம் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் என போட்டியின் வடிவத்துக்கு ஏற்ப தன்னை மாற்றி ஆடும் திறமை கொண்டவர் சந்தர்பால். சர்வதேச வீரர்கள் அனைவரும் தடுமாறும் இந்திய, இலங்கை, பாகிஸ்தான் ஆடுகளங்களில் அசால்ட்டான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சந்தர்பால். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு உதவும் இந்திய ஆடுகளங்களில் மேட்ச் வின்னராக இருந்தவர் அவர். 2008ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான டெஸ்ட்டில்  பிரட் லீ வீசிய பந்து சந்த்ரபாலின் ஹெல்மெட்டை தாக்கியது. அதிலிருந்து மீண்டு அதே இன்னிங்க்சில் சதமடித்தார்.

அதே தொடரில் டெஸ்ட் வரலாற்றின் மிகப்பெரிய ரன் சேஸான 418ல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தவர் சந்தர்பால்தான். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன் தேவைப்பட்டபோது சமிந்தா வாஸ் பந்தை சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி த்ரில் வெற்றி பெற வைத்தவர் இவர்.

இவரது கடைசி ஒருநாள் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மறக்க முடியாத சம்பவங்கள் நிறைந்தது. 2011ம் ஆண்டு உலக கோப்பை காலிறுதி போட்டி. பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஸ்கோர் சந்தர்பால் தான். கடைசி டெஸ்ட் போட்டியில் சந்தர்பால் டக் அவுட் ஆகியதும் அவரது இன்னிங்ஸில் அழியாத இடம் பிடித்தவை. லாராவை முந்த 86 ரன்கள் தேவை என்ற போது  இறுதி வாய்ப்பு அளிக்காமல் சந்தர்பாலை ஓரங்கட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 
இன்னும் ஒரு டெஸ்ட் ஆடியிருந்தால் லாராவை 'ஓவர் டேக்' செய்திருப்பார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சம்பள பிரச்னையில் சிக்கித் தவித்தபோது அணியில் இருந்த ஒரே சீனியர் இவர்தான். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி கெத்தான வழியனுப்புதலை செய்திருக்க வேண்டும்.

இத்தனை திறமைகள் கொண்ட க்ளாஸிக்கான வீரருக்கு இன்று பிறந்தநாள். சந்தர்பாலிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து கமென்டில் பகிருங்களேன்.

- ச.ஸ்ரீராம்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close