Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கங்காருவை ஒயிட்வாஷ் செய்த இலங்கை..! தரவரிசையில் இந்தியா முதலிடம்!


கொழும்பில் இன்று நடந்த 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை 163 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இதனால் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இலங்கை அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி, நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கடந்த 13 ம் தேதி கொழும்பில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. சண்டிமால் (132), தனஞ்ஜெயா டி சில்வா (129) ஆகியோர் சதம் அடித்தனர். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி, இலங்கை பந்துவீச்சை விளாசித்தள்ளி 379 ரன்கள் குவித்தது. மார்ஷ் (130), ஸ்மித் (119) ஆகியோர் சதம் விளாசினர். இலங்கை தரப்பில் ஹெராத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 24 ரன்கள் பின்னடைவுடன் 2வது இன்னிங்ஸை இலங்கை வீரர்கள் ஆடினர். அந்த அணியின் குசல் சில்வா 115 ரன்கள் அடித்தார். தனஞ்ஜெயா டி சில்வா 65 ரன்களும், சண்டிமால் 43 ரன்களும் எடுத்தனர். அந்த அணி, 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து,  347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணிக்கு, 323 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா வீரர் லயான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. அந்த அணி வீரர்கள், ஹெராத் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 160 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணி, 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என்று கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மட்டுமே அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 21 ம் தேதி கொழும்பில் நடக்கிறது.

டெஸ்ட் போட்டி தரவரிசையில், நம்பர் ஒன் இடத்தில் ஆஸ்திரேலியா அணி இருந்தது. இலங்கை அணியுடனான 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி,  நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியது. இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகள் இடையேயான  4வது டெஸ்ட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில்தான் இருக்கும்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ