Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிர்ந்து பேசாத சிந்து.. ஆக்ரோஷமாக மாற்றிய கோபிசந்த்

 

‘வாவ்..... ஜஸ்ட் வாவ்’ என, ட்விட்டரில் வாய் பிளந்திருந்திருந்தார் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா. அவர் மட்டுமல்ல சக வீராங்கனை சாய்னா நெவால், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் அனைவரும், ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் பேட்மின்டன் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்துக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர்.

ரியோவில் ஒலிம்பிக் துவங்கி 11 நாட்களாகி விட்டன. இந்தியாவின் பதக்க கணக்குக்கு யாரும் இன்னும் மணி கட்டவில்லை. ஷூட்டிங்கில் அபினவ் பிந்த்ராவுக்கு 0.7 புள்ளிகளில் பதக்க வாய்ப்பு நழுவியது. டென்னிஸில் சானியா & ரோகன் போபண்ணா ஜோடி வெறுங்கையுடன் நாடு திரும்பியது. ஜிம்னாஸ்டிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபா கர்மகர் நான்காவது இடத்துடன் திருப்தி அடைந்தார். ஒவ்வொரு பதக்கமும் ஒவ்வொரு விதமாக நழுவுகிறது. சிந்து அதை கெட்டியாகப் பிடிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பு.

லண்டன் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற, தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள சீன வீராங்கனை வாங் யிஹானியை காலிறுதியில் வீழ்த்தியது சிந்துவின் ஆகப்பெரும் சாதனை. ‘என் பேட்மிட்டன் வாழ்வில் அடைந்த வெற்றியில் இது உன்னதம்’ என்கிறார் சிந்து. இப்பயணம் இதோடு முடியக்கூடாது என்பதை உணர்ந்துள்ள அவர், ‘இதோடு ஆசுவாசம் அடைந்து விடக் கூடாது. இன்னும் செல்ல வேண்டியது வெகுதூரம்’ என்றார் அடக்கத்துடன்.

பேட்மின்டன் வீராங்கனைகளில் சிந்து வித்தியாசமானவர். ஜுவாலா கட்டா, சாய்னா நேவால் போல மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பொதுவெளியில் வார்த்தைகளை வீச மாட்டார். பொதுவில் மட்டுமல்ல, களத்திலும் ஆக்ரோஷமாக கத்த மாட்டார். அப்பேற்பட்டவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன தைபே வீராங்கனை தாய் ஸு இங்கை தோற்கடித்தபோதும், காலிறுதியில் தலைக்கு மேல் அடுத்தடுத்து மூன்று முறை வந்த ஷாட்களை பளீர் பளீர் என அறைந்து, வாங் யிஹானியை திணற வைத்தபோதும், அடி வயிற்றில் இருந்து கத்தினார். இதைப் பார்த்து அமைதியாக சிரித்தார் பயிற்சியாளர் கோபிசந்த். இதற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

பத்து மாதங்களுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். கோபிசந்த் உள்ளிட்ட சில பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர். திடீரென சிந்துவை நோக்கி கோபிசந்த் ‘களத்தில் நீ ஆக்ரோஷமாக கத்தி உணர்வுகளை வெளிப்படுத்தாதவரை, ராக்கெட்டை தொடக்கூடாது’ என உத்தரவிட, திகைத்து நின்றார் சிந்து. இந்த சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் எல்லாம் விக்கித்து நின்றனர். சிந்துவின் தந்தையும் அதில் ஒருவர்.

‘அதிர்ந்து பேசுவதும், ஆர்ப்பரிப்பதும் அவள் இயல்பு அல்ல. திடீரென ஆக்ரோஷமாக செயல்பட சொன்னால், அவள் என்ன செய்வாள்? அதனால், எல்லோரும் சென்ற பின், கோபிசந்த் சொன்ன அந்தக் களத்தில் நின்று தன்னந்தனியாக ஓவென கதறி அழுதார்’ என்றார் சிந்துவின் தந்தை ரமணா. பயிற்சியாளர்கள் வீரர், வீராங்கனைகளை கண்டபடி திட்டுவது புதிதல்ல. டென்னிஸ் உலகில் கொடி கட்டிப் பறக்கும் செரினா வில்லியம்ஸ் கூட இதற்கு விதி விலக்க அல்ல. இதை ரமணாவும் புரிந்துகொண்டவர்தான்.

‘களத்துக்கு வெளியே கோபிசந்த் அற்புதமான மனிதர். ஆனால், களத்தில் வித்தியாசமானவர். அன்று அவர் அப்படி நடந்து கொண்டதற்கு பின்பு விளக்கம் சொன்னார். ‘பொதுவாக, இந்தியாவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து வருவர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கூட சுதந்திரம் இருக்காது. விளையாட்டு அரங்கில் அப்படி இருந்தால் வேலைக்காகாது. கோபப்பட வேண்டும். ஆக்ரோஷப்பட வேண்டும். கத்த வேண்டும். பாடி லாங்வேஜ் கெத்தாக இருக்க வேண்டும். இதுவெல்லாம் எதிரியை அச்சுறுத்தும் ஒரு கருவி’ என கோபிசந்த் என்னிடம் தன்னிலை விளக்கம் அளித்தார்’ என்றார் ரமணா.

ஒரு வழியாக கோபிசந்த் வார்த்தைகளை அப்படியே பிரதிபலித்து வருகிறார் சிந்து. ரியோவில் பேட்மின்டன் நடந்து வரும் ரியோசென்ட்ரோ ஹாலில், ஒவ்வொரு புள்ளி எடுத்த பின்பும் சிந்து கத்துகிறார். அவருடன் இந்திய ரசிகர்களும் கத்துகின்றனர். முன்பைவிட சிந்துவின் ஆட்டத்தில் இப்போது மெச்சூரிட்டி ஏற்பட்டுள்ளது. தவறான ஷாட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. ‘முடிந்தவரை எதிரியின் உடம்பை குறிவைத்து ஷாட் அடிக்க முயற்சிக்கிறேன். லாங் ரேலி நீடிப்பதை கட்டுப்படுத்த முயல்கிறேன்’ என டெக்னிக்கல் ரீதியாக தேறியுள்ளார்.

அரையிறுதியில் சிந்து ஜப்பானின் நஸோமி ஒகுகராவை எதிர்கொள்கிறார். இது அவருக்கு பிளஸ் பாய்ன்ட். ஸ்பெயினின் கரோலினோ மரின் அல்லது சீனாவின் லீ ஜியூரியை சந்திக்க வேண்டி இருந்தால்தான் சிக்கல். ஆனால், தற்போதைய சூழலில் யாராக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறார் சிந்து. கோபிசந்தும் அதற்கேற்ப வியூகங்கள் அமைக்கிறார். சிந்து அரையிறுதியில் வென்றால் தங்கம் அல்லது வெள்ளி உறுதி. இல்லையேல் வெண்கலத்துக்கு போராட வேண்டி இருக்கும்.

2000 சிட்னி ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்ததும் சக வீரர் அபர்ணா பொபட்டிடம் கோபிசந்த் இப்படி சொன்னார்; ‘என்னால் அடுத்த ஒலிம்பிக்கில் விளையாட முடியுமா என தெரியாது. ஆனால், இந்தியாவுக்கு பதக்கம் வெல்பவருக்கு பயிற்சி அளிக்க முடியும்’ என்று. லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலம் வென்றதுமே கோபிசந்த் கனவு பலித்து விட்டது. சாய்னாவுக்கு போட்டியாக உருவெடுத்திருக்கும் சிந்துவும் அதை மெய்ப்பிக்க வேண்டும்.

- தா.ரமேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ