Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடிவாங்கவே ஆசியாவுக்கு வருகிறதா ஆஸ்திரேலியா? #AustraliaWhitewash

                                        

லங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, கிரிக்கெட் உலக வரலாற்றில் இப்படியொரு மோசமான டெஸ்ட் தொடர் அமையும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காது ஆஸ்திரேலியா. அதே சமயம், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக வெல்ல முடியும் என கனவு கண்டிருக்காது இலங்கை. 'கிரிக்கெட், சில சமயங்களில் கேலிக்கூத்தாக முடிந்துவிடும்' என பலரும் சொல்வார்கள். ஆனால்  ஆஸ்திரேலிய - இலங்கை  இடையிலான தொடர் கேலிக்கூத்தானது கிடையாது, ஆஸ்திரேலிய அணியின் சாயம் மீண்டும் ஒரு முறை வெளுத்துள்ளது. 

1987 ம் ஆண்டில் இருந்து 2016  ஜூன் வரையிலான காலகட்டத்தில் இதுவரை ஆஸ்திரேலியாவும் இலங்கையும் 26 டெஸ்ட் போட்டிகளில் நேரடியாக மோதியிருக்கிறார்கள். அதில் இலங்கை வெற்றி பெற்றது வெறும் ஒரு போட்டியில் மட்டும்தான். 11 டெஸ்ட் தொடர்களில் பத்தை வென்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. 1999 ம் ஆண்டு, தட்டுத்தடுமாறி கண்டியில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை வென்றது மட்டும்தான் இலங்கையின் ஒரே சாதனை. ஆனால் இந்த கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்த தொடரில் நொறுங்கிப் போனது. 

நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அத்தனை அணிகளிடமும் அடி வாங்கிக் கிடந்த  இலங்கை அணி, ஒரே நாளில் துள்ளி எழுந்தது. டெஸ்ட் உலக தரவரிசையில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை  ஒரேடியாக சாய்த்து வாஷ் அவுட் செய்திருக்கிறது. முரளிதரனும் , வாசும் சாதிக்காததை பெரேராவும், ஹெராத்தும் சாதித்திருக்கிறார்கள். சங்கக்காரா, ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, அட்டப்பட்டு போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்கள் சாதிக்க தவறியதை தனஜ்ய டி சில்வாவும், குஷல் மெண்டிசும் முடித்து காட்டியிருக்கிறார்கள். இலங்கை கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகச்சிறப்பான வெற்றி இந்த டெஸ்ட் தொடர்தான்.  அனுபவமற்ற இலங்கையின் இளம்படை,  அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை துரத்தியடித்த சங்கதியை ஆஸ்திரேலியா ஆயுசுக்கும் மறக்காது.

ஆஸ்திரேலியாவின்  வீழ்ச்சி 

ஆஸ்திரேலியாவின் சரிவு என்பது இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. கடந்த பத்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி, ஆசிய மண்ணில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே வென்றிருக்கிறது. அதுவும் கடந்த  ஆறு ஆண்டுகளில், ஒரு டெஸ்ட் போட்டியை கூட  ஆசிய மண்ணில் டிராவாக்க கூட முடியவில்லை. 2010 - 2011 தொடரில் இந்தியாவிடம் 0-2 என தொடரை இழந்தது, 2012-2013 தொடரில் 0-4 என தொடரை இழந்தது, அதன் பின்னர் 2014 - 2015  அரேபிய மண்ணில் நடந்த தொடரில் பாகிஸ்தானிடம் 0-2  என மீண்டும் தொடரை இழந்தது. தற்போது டெஸ்ட் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள இலங்கையிடம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. 

இலங்கையுடன் விளையாடிய ஆறு இன்னிங்ஸ்களில், நான்கு இன்னிங்ஸ்களில் ஆஸ்திரேலியாவால் இருநூறு ரன்களை கூட அடிக்க முடியவில்லை. ஒரு இன்னிங்ஸில் தட்டுத் தடுமாறி 203 ரன்களை எடுத்தது. ஷான் மார்ஷ் -  ஸ்டீவ் ஸ்மித் புண்ணியத்தில் ஒரே ஒரு இன்னிங்கிஸில் மட்டுமே தப்பி பிழைத்து 300 ரன்களை கடந்தது.  ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு மிக முக்கியமான காரணம், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து பிட்ச்களில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய திறமையின்மைதான். இத்ததனைக்கும் இந்தியாவில் உள்ள நாக்பூர், சென்னை போன்ற பக்காவான சுழற்பந்து மைதானம் இலங்கையில் கிடையாது. பேட்டிங்குக்கு ஓரளவு எடுபடக்கூடிய மைதானங்கள்தான் அங்கே உள்ளன. இதிலேயே ஆஸ்திரேலியாய் வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. 'இலங்கை மண்ணில் உள்ள பிட்ச்கள் எங்களுக்கு அந்நியமாக இருக்கின்றன' என்கிறார்  ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். சுழற்பந்து பிட்சுகளை பொறுத்தவரையில் முன் காலை பந்துக்கு ஏற்ப சரியாக நகர்த்த வேண்டியது அவசியம். நல்ல சுழற்பந்து மைதானங்களில் கொஞ்சம் பொறுமையாக நின்று பழகினால், பின்னர் ரன்களை தாராளமாக குவிக்க முடியும். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களால் களத்தில் நெடு நேரம் நிற்கவே முடியவில்லை. ஒருதினப் போட்டியில் விளையாடுவது போன்ற நினைப்பில் தவறான ஷாட் ஆட முற்பட்டு, தொடர்ந்து எல்.பி முறையில் அவுட் ஆயினர்.  

ஆடம் வோக்ஸ் இந்த தொடருக்கு முன்னதாக, தொடர்ந்து சதங்களாக விளாசி 100 க்கும் அதிகமான சராசரி வைத்திருந்தார். இந்த  தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த  ரன் வெறும் 118 மட்டும்தான். இலங்கையின் பந்துவீச்சாளர் ஹெராத், இவரை விட ஒரு ரன் அதிகமாக எடுத்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு இந்த  தொடரில் கிடைத்த ஒரே பாசிட்டிவ் அம்சம் பந்துவீச்சாளர் ஸ்டார்க்கின் பார்ம்தான். சுழற்பந்துக்கு சாதகமான மண்ணிலேயே, மூன்று டெஸ்ட் போட்டிகளில், 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமிக்க வைத்திருக்கிறார். சுழல் மண்ணிலும் பேட்டிங்கில்  சிறப்பாக விளையாடக்கூடிய ஆஸ்திரேலிய வீரர்களான பாண்டிங், கிளார்க் ஆகிய பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெற்ற பிறகு, அத்தகைய திறமையான பேட்ஸ்மேன்களை உருவாக்குவதில் கோட்டை விட்டிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. சுழல் பிட்ச்களை உருவாக்குவதில் ஆஸ்திரேலிய முனைப்பு காட்டுவதே கிடையாது. இதனால்  தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள், சூழல் பிட்ச் என்றாலே அலர்ஜியாகி  ஓட்டம் பிடிக்கிறார்கள். ஆனால் ஆசிய  மண்ணில் எத்தனை தோல்விகள் கண்டாலும் அவ்வளவு எளிதில் ஆஸ்திரேலியா திருந்தி விடாது. ஏனெனில் எப்போதெல்லாம் சூழல் பிட்ச்களில் தோற்கிறார்களோ அப்போதெல்லாம்,  'அவை தரமற்ற பிட்ச்கள், கிரிக்கெட் விளையாட தகுதியற்ற பிட்ச்கள்' என்ற விமர்சனத்தையே ஆஸ்திரேலியா  முன் வைக்கும்.  தவறுகளில் இருந்து பாடம் கற்காமல், இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், வலுவான அடி வாங்குவதற்கு ஆஸி. ரெடியாக இருக்க வேண்டியது தான். 

இலங்கையின் எழுச்சி

சங்கக்காராவின் ஓய்வுக்கு பிறகு கடந்த ஒரு ஏழெட்டு மாதங்கள் கடுமையான சரிவை சந்தித்து வந்தது இலங்கை. "ஒரே ஒரு வெற்றி கிடைத்தால் எல்லாம் மாறும். நான் கேப்டன் பதவியை விட்டு விலக மாட்டேன். அணி சரிவில் இருக்கும்போது ஓடிவிடமாட்டேன்" என ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டிருந்தார் மேத்யூஸ். இப்போது அவர்தான் இலங்கை  அணியில் பெரும் நிம்மதியுடன் வளைய வருகிறார். இந்த எட்டு மாதங்களில் இலங்கை அணியில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டு, இப்போதுதான் ஒரு நிலையான அணி உருவாகியிருக்கிறது. இந்த தொடரை வெல்வதில், இலங்கையின் முக்கிய துருப்புச்சீட்டு, மூன்று போட்டிகளில் 28 விக்கெட்டுகள் வீழ்த்திய ரெங்கனா ஹெராத்தான். டெஸ்ட் போட்டியில் கண்டுள்ள அபாரமான எழுச்சியை தொடர்ந்து, ஒருநாள் போட்டியிலும் இலங்கை வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால்,  ஒருதின தொடரிலும் ஆஸ்திரேலியாவின் பாடு திண்டாட்டம்தான். 

டெயில் பீஸ்

இலங்கை, ஆஸ்திரேலியாவை வென்றதில் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு சென்றுவிட்டது. ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருந்து மூன்றாமிடத்துக்கு சரிந்திருக்கிறது. இலங்கை ஆறாமிடத்துக்கு முன்னேறியிருக்கிறது. பத்து மாதங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்கா, ஏழாவது இடத்துக்கு சார்ந்திருக்கிறது. நாளை தொடங்கவுள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில், இந்தியா தோல்வியை தழுவாத பட்சத்தில், இந்தியாவால் தொடர்ந்து  நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்க முடியும். 

- பு.விவேக் ஆனந்த்.  

எடிட்டர் சாய்ஸ்