Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்! ஃபாக்ஸிடம் ஏமாந்த நரி! - 17

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15 16


17.  ஃபாக்ஸிடம் ஏமாந்த நரி!

1980ல் அமெரிக்காவில் கிளீவ்லாண்டில் அந்தச் சம்பவம் நடந்தது. கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஒரு பெண் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் பெயர் ஸ்டானிஸ்லாவா வாலாஸீவிச். அந்தப் பெண்ணின் உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் பலத்த சர்ச்சைக்கு வழிவகுத்தன.

காரணம், பெண் என்று நம்பப்பட்ட அந்த நபரது உடலில் ஆண் தன்மைக்குரிய குரோமோசோம்கள் அதிகம் காணப்பட்டன. பெண் தன்மைக்குரிய சில கூறுகள் இருந்தாலும் ஆண் தன்மையே அதீதமாகத் தென்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறியது.
இருக்கட்டும். அதனால் என்ன பிரச்னை?

கொல்லப்பட்ட ஸ்டானிஸ்லாவா, போலந்தைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனை. பல தேசிய, சர்வதேச தடகளப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறார். ஏகப்பட்ட பதக்கங்களையும் வென்றிருக்கிறார். அதில் 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 100 மீ ஓட்டத்தில் வாங்கிய தங்கமும், 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அதே பிரிவில் வாங்கிய வெள்ளியும் அடக்கம். இவையே சர்ச்சைக்கான காரணம்.

ஸ்டானிஸ்லாவாவின் பிறப்புச் சான்றிதழில் அவர் பெண் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இல்லை, அவர் ஏமாற்றியிருக்கிறார். அவரது சாதனைகள் எதுவுமே செல்லாது. எல்லாமே நீக்கப்பட்ட வேண்டும். பதக்கங்களை எல்லாம் திரும்பப் பெற வேண்டும் என்று சிலர் குரலெழுப்பினர். சர்ச்சைகள் மினுமினுத்தன. ஆனால், இறந்துபோன அந்த வீராங்கனையின் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக ஒலிம்பிக் கமிட்டி பதக்கங்களைத் திரும்பப் பெறவில்லை. ஸ்டானிஸ்லாவா நிகழ்த்திய சாதனைகள் எதுவும் மாற்றப்படவும் இல்லை.

போரிஸ் ஓனிஸ்சென்கோ. உக்ரைனின் பிறந்தவர். பின்பு சோவியத் யூனியன் குடிமகனாக மாறியவர். அங்கே ரெட் ஆர்மியில் சேர்ந்தார். நல்ல விளையாட்டு வீரர். அதுவும் பெண்டத்லான் போட்டிகளில் போரிஸ், குறைந்தது ‘வெள்ளி’யாவது அடிக்கும் கில்லி.

பெண்டத்லான் என்பது ஐந்து விதமான விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டி. நவீன ஒலிம்பிக்கில் இடம்பெற்ற பெண்டத்லான் என்பது துப்பாக்கிச் சுடுதல், குதிரையேற்றம், நீச்சல், ஓட்டம் (Cross Country Running) மற்றும் வாள் சண்டை ஆகிய ஐந்து விளையாட்டுகள் உள்ளடக்கியது. இதில் குழுவுக்கானது, தனி நபர்களுக்கானது என்று பெண்டத்லானில் இரண்டு பிரிவுகள் உண்டு.

இரண்டிலுமே போரிஸ் பங்கேற்றிருக்கிறார். 1967 முதல் 1974 வரையிலான பெண்டத்லான் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் (தனிநபர், குழு இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து) வென்றிருக்கிறார் போரிஸ். தவிர, 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் குழு பெண்டத்லானில் வெள்ளி, 1972 முனிச் ஒலிம்பிக்கில் குழு பெண்டத்லானில் தங்கம், அதே ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் வெள்ளி என்று போரிஸ், அசைக்கவே முடியாத பெண்டத்லான் எம்பெருமானாக வலம் வந்தார்.

1976 மாண்ட்ரியல் ஒலிம்பிக்கின் ஆரம்பத்தில், பெண்டத்லானில் போரிஸுக்கென பதக்கங்களை தனியே எடுத்து வைத்துவிடலாம் என்றே விளையாட்டு விமரிசகர்கள் நம்பிக்கையுடன் கூறினர். குழு பெண்டத்லான் போட்டி ஜூலை 18 அன்று ஆரம்பமானது. முதல் நாள் குதிரையேற்றம். சோவியத்தின் குழுவில் போரிஸுடன் பாவெல், மோஸோலோவ் என்ற இரு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குதிரையேற்றத்தின் புள்ளிகளின்படி சோவியத்துக்கு நான்காவது இடமே கிடைத்தது.

ஜூலை 19ல் வாள் சண்டை நடந்தது. வாள் சண்டைக்கு சோவியத்தின் சார்பில் போரிஸ் களமிறங்கினார். அவர், ஒவ்வொரு தேசத்தின் வீரர்களுடனும் வாள் சண்டையிட வேண்டும். ஒரு போட்டி என்பது 3 நிமிட கால அளவு கொண்டது. காலையில் நான்கு போட்டிகளில் வாள் சுழற்றிய போரிஸ், நான்கிலும் வென்றார். மதிய நேரத்தில் போரிஸ், இங்கிலாந்து வீரர் ஜிம் ஃபாக்ஸுடன் வாள் சண்டையில் இறங்கினார். எதிரியின் உடலில் வாள் பட்டால், வாள் வீசும் வீரருக்கும் புள்ளிகள் ஏறும் என்பது அடிப்படை விதி. எதிரியின் உடலில் வாள் படுவதை அறிந்துகொள்ள Epee என்ற அந்த எலெக்ட்ரிக் வாளில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

போரிஸின் வாள் வீச்சிலிருந்து லாகவமாக தன் உடலை நகர்த்தினார் ஜிம் ஃபாக்ஸ். ஆனாலும் எலெக்ட்ரானிக் ஸ்கோர் போர்டில் போரிஸுக்குப் புள்ளி ஏறியது. ஜிம், நடுவர்களிடம் புகார் செய்தார். ‘ஆம், வாள் உங்கள் உடலில் படவில்லை’ என்றார் போரிஸ் சற்றே நேர்மையாக. ‘வாளை மாற்றிக் கொள்கிறேன்’ என்றும் சொன்னார்.

காலையிலிருந்தே போரிஸின் ஆட்டத்தைக் கூர்மையாகக் கவனித்து வந்த ஜிம், அவரது வாளைப் பரிசோதனை இட வேண்டும் என்றார். நடுவர்கள் போரிஸின் வாளைக் கைப்பற்றி சோதனை செய்தார்கள். அதில் சில நுட்பமான தகிடுதத்த வேலைகள் செய்யப்பட்டிருந்தன. அதாவது எதிரியின் மீது வாள் படாவிட்டாலும் தனக்குப் புள்ளிகள் ஏறும்படி ஏமாற்று வயரிங் வேலைகள் செய்திருந்தார் போரிஸ். ஜிம் ஃபாக்ஸின் முன் போரிஸின் நரித்தனங்கள் எடுபடவில்லை.

உடனே போரிஸ், அந்தப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மட்டுமல்ல, சோவியத் யூனியன் அணியே குழு பெண்டத்லானிலிருந்து வெளியேற்றப்பட்டது.

தனக்கு 38 வயது ஆகிவிட்டது. இதுவே தனக்கு கடைசி ஒலிம்பிக். வெளியேறுவதற்கு முன்பு இறுதியாக ஒரு பதக்கம் வென்று விடலாம் என்ற ஆசையில் போரிஸ் தன் நேர்மையை இழந்திருந்தார். சக சோவியத் வீரர்களே தங்கள் தேசத்துக்கு போரிஸால் பெருத்த அவமானம் என்று அவரைப் புறக்கணித்தனர். ‘Boris, The Cheat’ என்று செய்தித்தாள்கள் சோவியத்தின் மானத்தை வாங்கின. ‘எங்கள் கையில் அவன் கிடைத்தால், ஹோட்டல் ஜன்னல் வழியாகத் தூக்கி வீசிவிடுவோம்’ என்று சோவியத் வாலிபால் அணியினர் கொந்தளித்தார்கள். போரிஸை, ஒலிம்பிக் கிராமத்திலிருந்து பாதுகாப்பாக அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதே பெரும்பாடாகிப் போனது.

பெண்டத்லான் தனி நபர் பிரிவில் சக சோவியத் வீரர் பாவெல் வெள்ளி வென்றார். போரிஸின் போங்கு ஆட்டத்தால் பாவெலையும் சந்தேகப் பார்வைகள் குத்திக் கிழித்தன. மிகுந்த தர்ம சங்கடத்துடனேயே பாவெல் போடியம் ஏறினார்.

போட்டியில் பதக்கமே இன்றி தோற்றிருந்தால்கூட அந்த வலி, கால ஓட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால், தடுமாற்றத்தால் செய்த தவறு, அதனால் உண்டான அவமானம் போரிஸைத் துரத்தித் துரத்தி அடித்தது. சோவியத் அரசியல்வாதிகள் அவரைத் தொலைபேசியில் அழைத்து கிழி கிழியெனக் கிழித்தனர். போரிஸ், ராணுவத்திலிருந்து விலக்கப்பட்டார். அவருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

1976க்கு முன்பு வெற்றி வீரராக செல்லுமிடமெல்லாம் சிறப்பை அனுபவித்த போரிஸ், அந்த ஒரே ஒரு தவறால் செல்லுமிடமெல்லாம் அவமானங்களைச் சந்தித்தார். பின், வயிற்றுப் பிழைப்புக்காக கார் டிரைவராக காலத்தை ஓட்ட ஆரம்பித்தார்.

தென்கொரியாவின் சியோலில் 1988ல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. லைட் மிடில்வெயிட் பிரிவு குத்துச் சண்டைப் போட்டியின் இறுதிச் சுற்றில் தென் கொரியாவின் பார்க் ஹி-சன் என்ற வீரரும், அமெரிக்காவின் ராய் ஜோன்ஸ் ஜூனியர் என்ற வீரரும் ரிங்கில் இறங்கினர்.

ஆரம்பம் முதலே ராய் ஜோன்ஸின் குத்துகள் பலமாக பார்க்கின் முகத்தில் இறங்கின. ஆனால், ரசிகர்களின் பேராதரவு முழுக்க முழுக்க உள்நாட்டு வீரர் பார்க்குக்கு இருந்தது. பார்க், குத்துகள் வாங்கி ஓரிரு முறை சுருண்டு விழுந்து, பின் தடுமாறி எழுந்து நின்றார். தென்கொரியர்களே ராய் ஜோன்ஸ்தான் வெற்றி பெறுவார் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர். போட்டி நேரம் முடிவடைந்தது. ரெஃப்ரி இரு வீரர்களது கையைப் பிடித்தபடி முடிவை அறிவிப்பதற்காக ரிங்கின் நடுவில் வந்து நின்றார். ராய் ஜோன்ஸின் கையே உயர்த்தப்படும் என்று பெரும்பான்மையானோர் எதிர்பார்த்திருந்த சமயத்தில், பார்க்கின் கை உயர்த்தப்பட்டது.

ஏமாற்றம். ராய் ஜோன்ஸால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. தென் கொரிய ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடினார். பார்க்கின் கழுத்தில் தங்கப் பதக்கம் விழுந்தது. சோகத்தில் ராய் ஜோன்ஸால் அந்த வெள்ளிப் பதக்கத்தைச் சுமக்க முடியவில்லை. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் சிறந்த பாக்ஸருக்காக வழங்கப்படும் வால் பார்க்கர் கோப்பையை மட்டும் 1988ல் ராய் ஜோன்ஸுக்கு வழங்கி கௌரவித்தார்கள். அது பார்க்குக்கு வழங்கப்படவில்லை.

பார்க்கின் மனம் உறுத்தியது. இதயம் திறந்தார். ‘நடுவர்களின் தீர்ப்பினால் நான் செய்வதறியாது வாயடைத்துப் போய்விட்டேன். இப்போது அதற்காக ராய் ஜோன்ஸிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.’ போட்டியின் ஐந்து நடுவர்களில் ஒருவர் வெளிப்படையாக அறிக்கை விட்டார். ‘நாங்கள் இரண்டு பேர் ராய் ஜோன்ஸுக்குத்தான் அதிகப் புள்ளிகள் வழங்கியிருந்தோம். ஆனால், மற்ற மூன்று பேரும் பார்க்குக்கு ஆதரவாக இருந்தார்கள்.’

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணையை ஆரம்பித்தது. அதில், போட்டி நடத்திய தென் கொரியா அந்த மூன்று நடுவர்களை விசேஷமாகக் கவனித்தது, லஞ்சம் கொடுத்தது எல்லாம் தெரிய வந்தன. மூன்று நடுவர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த விசாரணை எல்லாம் ஒருவழியாக 1997ல் முடிவுக்கு வந்தது. அதன்படி, பார்க்கிடம் இருந்து பதக்கத்தைப் பறித்து, ராய் ஜோன்ஸிடம் வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் அமெரிக்கா தென் கொரியர்களுக்கு எதிராக நடந்து கொண்டது. சில போட்டி முடிவுகளை தனக்குச் சாதகமாக அறிவிக்கச் செய்தது. அதற்குப் பழிவாங்கும்விதமாகவே சியோல் ஒலிம்பிக்கில் தென் கொரியா இப்படி நடந்து கொண்டது என்று செய்திகள் வெளிவந்தன.

இந்த சர்ச்சையின் விளைவாக குத்துச்சண்டைப் போட்டியின் முடிவில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் புள்ளிகளைக் கணக்கிட புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பார்க் Vs ராய் ஜோன்ஸ் போட்டி முடிவைத் திரும்பப் பெறவில்லை.

இன்றுவரை அந்தத் தங்கப் பதக்கம் ராய் ஜோன்ஸைச் சென்றடையவில்லை.

(டைரி புரளும்)

அடுத்த அத்தியாயம்: திருமணங்கள் ஒலிம்பிக்கில் நிச்சயிக்கப்படுகின்றன!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ