Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணங்கள் ஒலிம்பிக்கில் நிச்சயிக்கப்படுகின்றன! - ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் - 18

 

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15

16 17

 

 


 

‘அந்த ஒரே ஒரு ஜப்பான் ஆளு மட்டும் காணாமப் போயிட்டாருங்க. அவர் ஓடியும் முடிக்கல. ஆனா, வழியில எங்க தேடியும் கிடைக்கல.’

1912 ல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில், மாரத்தான் போட்டி நடத்தி முடித்தபின், வீரர்களது விவரங்களைச் சரிபார்த்த போட்டி அதிகாரிகள், ஷிஷோ கனாகுரி என்ற அந்த ஜப்பானிய வீரரைக் கண்டுபிடிக்க முடியாமல் திகைத்து நின்றனர். எங்கே போனார் ஷிஷோ?  பத்திரமாக ஜப்பானுக்குத்தான் திரும்பிப் போயிருந்தார். அந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் இரண்டே இரண்டு தடகள வீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தது. அதில் ஷிஷோவும் ஒருவர்.

ஜப்பானிலிருந்து ஸ்டாக்ஹோம் வந்து சேரவே 18 நாட்கள் பயணம். அதிலேயே அதீத சோர்வுடன் இருந்த ஷிஷோவுக்கு, அங்கு கிடைத்த உணவும் ஒத்துவரவில்லை. மாரத்தான் போட்டியன்று வெயிலும் காட்டு காட்டென்று காட்டியதால், பாதி வழியிலேயே துவண்டு போனார். ‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ என்று உடல் சோர்ந்தது. ஓடி முடிக்காவிட்டால் கேவலம் என்று மனம் எச்சரித்தது. விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்தால்தானே? ஆகவே, யாரிடமும் எதுவும் சொல்லாமல் சத்தமின்றி தன் தேசத்துக்குக் கிளம்பிவிட்டார் ஷிஷோ.

பின்னர் ஷிஷோ 1920 ஒலிம்பிக்கில், மாரத்தானில் கலந்து கொண்டார். பதினாறாவதாக ஓடி முடித்தார். 1924 ஒலிம்பிக் மாரத்தானிலும் கலந்து கொண்டார். ஓடி முடிக்கவில்லை.

 

1967. ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் பாதியில் காணாமல் போன ஜப்பானிய வீரர் ஷிஷோ, இன்னமும் ஜப்பானில் உயிரோடுதான் வசிக்கிறார் என்று எப்படியோ ஸ்வீடனுக்குத் தெரிய வந்தது.ஸ்வீடன் தொலைக்காட்சி ஒன்று ஷிஷோவை நாடியது. ‘மிஸ்டர் ஷிஷோ, ஸ்டாக்ஹோமில் நீங்கள் ஓடி முடிக்க இயலாத மாரத்தானை இப்போது ஓடி முடிக்கிறீர்களா...?’

ஷிஷோ சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். 1967ல் ஸ்வீடன் வந்தார். ஸ்டாக்ஹோமில் அன்று ஓடிய பாதையில் தொடர்ந்து ஓடி, வெற்றிகரமாக எல்லைக் கோட்டைத் தொட்டார். உலகின் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட மாரத்தான் ஓட்டம் இது. ஆம், 54 வருடங்கள், 8 மாதங்கள், 6 நாள்கள், 5 மணி நேரங்கள், 32 நிமிடங்கள், 20.379 விநாடிகள்.

ஷிஷோவின் முகத்தில் அவ்வளவு திருப்தி. புன்னகையுடன் சொன்னார். ‘மிக நீண்ட பயணம் இது. இந்தப் பயணத்துக்கு இடையே எனக்குத் திருமணம் நடந்தது. ஆறு குழந்தைகள் பிறந்தன. பத்து பேரன், பேத்திகளும் பிறந்துவிட்டன.’

செக்கோஸ்லோவிகியாவைச் சேர்ந்த எமில் ஸடோபெக், தனது பதினாறாவது வயதில் பாட்டா ஷூ கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவர் உண்டு. ஒருநாள் எமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பயிற்சியாளர் அங்கே வந்தார். ‘நீங்கள் எல்லோரும் ஓட்டப் பந்தயத்துக்கு வந்து விடுங்கள்’ என்று நான்கு இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார். அதில் எமிலும் ஒருவர். அவருக்கு அதில் விருப்பமே இல்லை. தட்டிக் கழிக்க நினைத்தார்.

‘என்னால் ஓட முடியாது. நான் மிகவும் பலஹீனமாக இருக்கிறேன்.’

பயிற்சியாளர் விடவில்லை. எமிலை மருத்துவர் ஒருவரிடம் அனுப்பினார். பரிசோதித்த மருத்துவர், ‘நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்’ என்று எமிலுக்கு சான்றிதழ் கொடுத்தார். வேறு வழியே இன்றி எமில் ஓட்டப் பந்தயத்தில் அரை மனதுடன் கலந்துகொண்டார்.

100 மீ போட்டி. போட்டி ஆரம்பித்த கணத்தில் எமிலுக்கு ஓடுவதில் ஈடுபாடு உண்டானது. இரண்டாவது இடம் பிடித்தார். அந்த வெற்றியின் ருசி பிடித்திருந்தது. உள்ளூர் தடகள கிளப் ஒன்றில் இணைந்தார். ஆர்வத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டார். பின்லாந்தின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீரர் பாவோ நுர்மி குறித்து படித்து தெரிந்து கொண்டார். பாவோ நுர்மி - 1920, 1924, 1928 என மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் 9 தங்கம், 3 வெள்ளி வென்று சாதித்தவர். அவரது சாதனைகள் எமிலுக்கு உத்வேகம் கொடுத்தன. நானும் பாவோ நுர்மி போல சாதிக்கப் போகிறேன்.

1944ல் 2000மீ, 3000மீ, 5000மீ என தேசிய அளவில் பந்தயங்களில் கலந்துகொண்ட எமில், புதிய தேசிய சாதனைகளைப் படைத்தார். 1948 லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமிலுக்கு அமைந்தது. அதில் 5000மீ பந்தயத்தில் 0.2 விநாடியில் தங்கப்பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனால், 10000மீ பந்தயத்தில் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.

அதற்கடுத்த வருடங்களில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் ‘தன் சாதனையைத் தானே முறியடித்த தானைத் தலைவர்’ என்று எமிலின் பட்டியலில் பல புதிய சாதனைகள் சேர்ந்தன.

எமில் மற்றும் டானா

 

1952. ஹெல்சின்கி ஒலிம்பிக் எமிலுக்கு மிக உற்சாகமாக ஆரம்பித்தது. காரணம், அவரது ஆதர்ச நாயகன் பாவோ நுர்மிதான் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். 5000மீ, 10000மீ பந்தயங்களில் எமில் கலந்துகொண்டார். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே இரண்டிலும் தங்கம் ஜெயித்தார். அதில் ஜூலை 24ல் நடந்த 5000 மீட்டர் இறுதிப்போட்டியில், ஒரு சுற்று பாக்கியிருக்கும்போது, நான்காவது ஆளாகவே எமில் ஓடிக்கொண்டிருந்தார். அந்த இறுதிச் சுற்றில் வேகமெடுத்தார். பிரான்ஸின் அலெய்னை பின்னிக்குத் தள்ளி, மேற்கு ஜெர்மனியின் ஹெர்பெட்டைச் சட்டென முந்தி, இங்கிலாந்தின் கிறிஸ்ஸை வீழ்த்தி எல்லைக்கோட்டை அடைந்தார். புதிய ஒலிம்பிக் சாதனை.

செப்டெம்பர் 19, 1922ல் எமில் பிறந்தார். அதே தேதியில், அதே ஆண்டில் பிறந்த டானா என்ற பெண், அதே ஒலிம்பிக் மைதானத்தில் ஈட்டி எறிந்து கொண்டிருந்தார். 5000 மீ பந்தயத்தில் எமில் தங்கம் வாங்கிய அதே பொழுதில், டானா ஈட்டி எறிதலில் தங்கம் வாங்கினார். அண்ணலின் ஓட்டம், காதல் வேகத்தில் டானாவின் மனத்தில் தடதடக்க... அவள் எறிந்த ஈட்டி, எமிலின் இதயத்தில் இன்பமாக இறங்கியது.

ஜூலை 27. ஹெல்சின்கியில் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்த எமிலுக்கு அன்று நடைபெறவிருந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்று தோன்றியது. காதலின் பின்விளைவாகக்கூட இருக்கலாம். ஆனால், எமில் அதற்கு முன்பு மாராத்தான் ஓடியது கிடையாது. அதற்கான பயிற்சிகள் எடுத்தது கிடையாது. மாரத்தான் விதிமுறைகளும் தெரியாது. 'என்ன, 26.2 மைல்கள் ஓட வேண்டியது இருக்கும். சும்மா ஓடித்தான் பார்ப்போமே...' என பெயர் கொடுத்து கலந்துகொண்டார்.

அந்த மாரத்தானில் இங்கிலாந்தைச் சேர்ந்த மாரத்தான் சாம்பியனும், உலக சாதனையைத் தக்க வைத்திருந்த வீரருமான ஜிம் பீட்டர்ஸ்தான் தங்கம் வாங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். எமில், ஒரு கணக்கு போட்டார். எப்படியாவது ஜிம் பீட்டர்ஸ்க்கு ஈடு கொடுத்து அவருடனேயே ஓடினோம் என்றால் மாரத்தான் தொலைவைக் கடந்துவிடலாம்.

எமில், அப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தார். ஜிம் பீட்டர்ஸுக்கு ஓரிரு அடிகள் பின்னாலேயே, அவரைத் தொடர்ந்தபடி ஓடினார். 15 கிமீ கடந்திருப்பார்கள். எமிலுக்கு ஒரு சந்தேகம். தான் ஓடும் வேகம் சரிதானா? இதே வேகத்தில் ஓடினால் இறுதிவரை ஓட முடியுமா? ஓடிக்கொண்டே ஜிம் பீட்டர்ஸுக்கு அருகில் வந்து தன் சந்தேகத்தைக் கேட்டார் எமில். ‘நான் இப்போது மிக வேகமாக ஓடுகிறேனோ?’

ஜிம் பீட்டர்ஸ் எரிச்சலுடன் ஒரு பதிலைச் சொன்னார். ‘இல்லை, மிக மெதுவாக ஓடுகிறாய்!’

அந்த பதில் ஜிம் பீட்டர்ஸுக்கு வினையாகிப் போனது. எமில் தன் வேகத்தை அதிகரித்தார். மேலும் மேலும் மேன்மேலும் முன்னேறினார். ஜிம் பீட்டர்ஸால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. எமிலுக்குத் தாகம் எடுத்தது. வழியில் மாரத்தான் ஓட்டக்காரர்களுக்கெனவே தண்ணீரும் பழங்களும் வைத்திருந்தனர். அது தெரியாத எமில், ஏக்கத்துடன் அவற்றைப் பார்த்தபடியே கடந்து சென்றார். ‘இதற்கெல்லாம் என்னிடம் காசு இல்லை.’

வியர்வை வழிய, தாகத்தில் நாக்கு வறண்டு போக, உடலைக் களைப்பு ஆட்கொண்டாலும் தன் வேகத்தைக் குறைக்காத எமிலி, மாரத்தான் பற்றிய எந்த அறிவும் இன்றி 26.2 மைல்களை வெற்றிகரமாக முதலாவது ஆளாகக் கடந்து தங்கம் வென்றார். எமிலை உசுப்பேத்திய ஜிம் பீட்டர்ஸால் முழுத்தொலைவைக் கடக்க முடியவில்லை.

5000மீ, 10000மீ, மாரத்தான் உள்ளிட்ட மூன்று  அதிக தூரப் பந்தயங்களில், ஒரே ஒலிம்பிக்கில் தங்கம் என்ற புதிய சாதனை எமில் வசமானது. அந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.  

எமிலுக்கு அந்த மூன்று தங்கப் பதக்கங்களைவிட, அதிகம் மகிழ்ச்சி கொடுக்கும் விஷயமாக டானாவின் காதலும் அங்கே கிடைத்தது. இருவரும், 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கிலும் காதலர்களாக கலந்து கொண்டனர். இருவருக்குமே ஏமாற்றம். எந்தப் பதக்கங்களும் கிடைக்கவில்லை.

அதே 1956 ஒலிம்பிக் தடகளத்தில், இன்னொரு காதலும் சுகமாக மலர்ந்தது. வட்டு எறிதலில் தங்கம் வென்ற செக்கோஸ்லோவாகியாவின் ஒல்கா பிகோடோவாவின் இதயத்தை, சம்மட்டி எறிதலில் (Hammer throw) தங்கம் வென்ற அமெரிக்க வீரர் ஹல் கனோலி ஆக்கிரமித்தார்.

1957ல் நடந்த எமில்-டானா திருமணத்துக்கு, கனோலி-ஒல்கா இருவரும் தம்பதிகளாக வந்து கலந்து கொண்டனர். ஆம், திருமணங்கள் ஒலிம்பிக்கிலும் நிச்சயிக்கப்படுகின்றன.

(டைரி புரளும்).

அடுத்த அத்தியாயம் : பதக்கம் அல்ல... அரசியல் ஆயுதம்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close