Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜுனியருக்கு ஒரு டிப்ஸ்... சீனியருக்கு ஒரு அட்வைஸ்..! சென்னையில் தோனி

கிரிக்கெட் மொழி மட்டுமே பேசத்தெரிந்த தோனி தமிழகத்திற்கு வந்து, மைக் பிடித்து தோனி பேசிய முதல்  தமிழ் வார்த்தை... ‘எப்படி இருக்கீங்க...?’ 

சென்னையின் செல்லப்பிள்ளையான தோனியிடம் இருந்து வந்த இந்த தமிழ் வார்த்தைகளை, யாரும் எதிர்பார்க்கவில்லை. கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. ‘மீண்டும் சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி. கடந்த 9 ஆண்டுகளில் சென்னைக்கும், எனக்குமான உறவு சற்றே குறைந்திருந்தது. இனிவரும் காலங்களில் அடிக்கடி சென்னைக்கு வருவேன்’ என தோனி பேசப் பேச, சிஎஸ்கே நினைவுகள் நிழலாடின.

" சிஎஸ்கேவை மிஸ் செய்கிறோம். ஓராண்டு முடிந்து விட்டது. இன்னும் ஒரு வருடம்தான். மஞ்சள் ஜெர்ஸி மீண்டு(ம்) வரும்" என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் சொல்லி முடிக்கும்போது, விசில் பறந்தது. தோனியின் முகத்தில் புன்னகை. 

" சிஎஸ்கே இவ்வளவு பிரபலம் ஆனதுக்கு காரணம் தோனியின் கேப்டன்சி. தமிழ்நாட்டை கிரிக்கெட் ஆர்வம் மிகுந்த மாநிலமாக மாற்றியதில் தோனிக்கு பெரும் பங்கு உண்டு. தோனி எங்கு சென்றாலும் அவர் சிஎஸ்கே வீரராக அறியப்படுவார். இந்த கோப்பையை அறிமுகப்படுத்துவதற்கு தோனியை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது" என சீனிவாசன் தோனி புராணம் பாடினார்.

வழக்கம் போல இந்த பாராட்டை சிறு புன்னகையுடன் கடந்த தோனி, கோப்பையை அறிமுகப்படுத்தி வைத்தார். "உலகெங்கும் டி20 தொடர் நடந்து வருகின்றன. யார் திறமையான வீரர்கள் என மக்கள் உன்னிப்புடன் கவனிக்கின்றனர். இந்த தொடர், சிறு கிராமங்களில் உள்ள இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு களமாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜொலித்தால், தமிழக அணியிலோ, ஐ.பி.எல் தொடரில் ஏதாவது ஒரு அணியிலோ, ஒவ்வொரு வீரனின் அல்டிமேட் குறிக்கோளான இந்திய அணியிலோ இடம் பிடிக்க, இளம் தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்"  என தோனி அட்வைஸ் மழை பொழிந்தார். 

இந்த டி20 தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்ட சீனியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

"இந்திய அணி மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்களுக்கு, இந்த தொடரில் பெரிய அளவு வருமானம் கிடைக்காது. கிரிக்கெட்டுக்கு திருப்பிச் செலுத்தும் வாய்ப்பாக இதை அவர்கள் கருத வேண்டும். ஒவ்வொரு விதத்திலும் இளம் வீரர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என தோனி சொன்னதை சீனியர் வீரர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கோப்பையை அறிமுகப்படுத்தி விட்டு, எட்டு அணிகளின் கேப்டன்களுடன் போஸ் கொடுத்து, இந்த தொடர் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து விட்டு, தோனி கடைசியாக சொன்ன வார்த்தை ‘விரைவில் மீண்டும் சென்னைக்கு வருவேன்’ எனக் கூறிவிட்டு பறந்தார்.

ட்விட் பிட்ஸ்:

* டிஎன்பிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இந்தியா சிமெண்ட்ஸ் அறிவிக்கப்பட்டது.

* இந்த தொடருக்காக இசையமைப்பாளர் அனிருத் பாடிய தீம் பாடல் ஒளிபரப்பானது. அணிகள் அறிமுக நிகழ்ச்சியின்போது, கலைஞர்கள் சிலர் மேடையில் செய்து காட்டிய ’இருள் சாகசம்’ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

* இந்த விழாவில் பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரி, கேரள கிரிக்கெட் சங்க தலைவர் டி.சி.மேத்யூ, ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் அர்ஷத் அயுப், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் பிஸ்வரூப் தே உள்ளிட்ட பிசிசிஐ முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டிருந்தது ஹைலைட்.

                                                                                                                                          - தா. ரமேஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close