Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல்ஃபில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அதிதி!


15 போட்டிகளில், இந்தியா சார்பாக 117 வீரர்கள் களமிறங்கிய இந்த ஒலிம்பிக்கில் தொடர்ந்து இளம் வீராங்கனைகள் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை மல்யுத்தத்தில் வென்று அமர்க்களம் செய்தார் 23 வயதான சாக்‌ஷி மலிக். நான்காம் இடம் என்றாலும், ஜிம்னாஸ்டிக் தளத்தில் இந்தியாவின் பெயரை முதல் முறையாக உச்சரிக்க வைத்தார் 23 வயது தீபா கர்மகர். நேற்று இரவு பேட்மின்டன் போட்டியில், முதல் முறையாக இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பி.வி.சிந்து. ரேங்கிங்கில் பத்தாவ்து இடத்தில் இருக்கும் 21 வயது பி.வி.சிந்து முதல் செட்டில் ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தியதே பெரும் சாதனை தான்.  கோல்ஃப் போட்டியில் இன்று 3.30 மணிக்கு ஃபைனலில் களம் இறங்குகிறார் வீராங்கனை அதிதி அசோக்.

யார் இந்த அதிதி அசோக்?

பெங்களூரு பெண்ணான அதிதி அசோக் 5 வயதில் இருந்தே கோல்ஃப் கற்க ஆரம்பித்தார்.ஆறு வயதில் கோல்ஃப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார் அதிதி.

18 வயதான அதிதி அசோக் லல்லா ஐச்சா போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். இதன் மூலம், ஒரு சர்வதேசத் தொடருக்கு தகுதி பெற்ற முதல் இந்தியராகவும் அதிதி தேர்ந்து எடுக்கப்பட்டார். 2016-ம் ஆண்டுக்கான பெண்கள் ஐரோப்பியன் தொடரில் பங்கேற்கிறார். ரியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸில், இந்தியா சார்பாக விளையாட தகுதி பெற்ற ஒரே வீராங்கனை அதிதி தான்.

2011-ம் ஆண்டு உஷா கர்நாடகா ஜூனியர், தென்னிந்திய ஜூனியர், ஃபால்டோ தொடர், கிழக்கு இந்திய பெண்கள் டோலி, 2012-ல் உஷா பெண்கள் டெல்லி, ஆல் இந்திய ஜூனியர், என கடந்த ஆறு வருடங்களாக இந்திய கோல்ஃப் அரங்கில் அதிதி தான் டாப். 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொழில்முறை கோல்ஃப் வீரராக விளையாடி வருகிறார் அதிதி.

இந்திய அணிக்காக 12 வயதில் இருந்து விளையாடி வரும் அதிதி, இதுவரை மூன்று முறை தேசிய ஜூனியர் சாம்பியனும் (2012, 2013, 2014) , இரண்டு முறை தேசிய அமெச்சூர் சாம்பியனும் (2011,2014) வென்று சாதித்து இருக்கிறார். அதே போல், ஆறு சர்வதேச போட்டிகளில் வென்று இருக்கிறார்.

நேற்று நடந்த ஆட்டத்தில், 24வது இடத்தில் இருந்து 31வது இடத்திற்கு தள்ளப்பட்டார். பதக்கம் வெல்லும் வாய்ப்பு குறைவு என்றாலும், 18 வயதான அதிதி வரும் காலங்களில், இந்தியாவிற்காக தங்கம் வெல்வார் என்பதில் ஐயமில்லை.

பி.வி.சிந்து, அதிதி, சாக்‌ஷி மலிக், தீபா கர்மகர் என இந்தியாவின் சாதனைப் பெண்கள் பட்டியல் நீள்கிறது.

-கே.ஜி.கார்த்திகேயன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ