Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதனால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள்! #கரோலினா-சிந்து நட்புத் தருணங்கள்!

லகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து என பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் ஒலிம்பிக் என்ற சொல்தான் விளையாட்டு உலகின் மந்திரச் சொல். உலகக் கோப்பை கால்பந்தில் 32 அணிகள்தான் விளையாடும். கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் அதிகபட்சம் 10 அணிகள். ஆனால் ஒலிம்பிக் அப்படியல்ல.. 206 நாடுகள் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான விளையாட்டுப் போட்டி.

இங்கே செல்வத்தில் கொழிக்கும் அமெரிக்காவும், சாப்பாட்டுக்கே வழியில்லாத எத்தியோப்பியாவும் சரிசமம்தான். யாரும் ஹோட்டலில் போய் தங்கிக் கொள்ள முடியாது. அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் கிராமத்தில்தான் தங்க வேண்டும். ஏழை நாட்டு வீரனுக்கும், பணக்கார நாட்டு வீரனுக்கும் சமபந்திதான். எந்த வகையிலும் ஏற்றத் தாழ்வு ஒலிம்பிக் களத்தில் இருக்காது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தங்கத்துக்காக தடுமாறிக் கொண்டிருக்கும் போது, 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர் தங்கத்துடன் சிரித்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் இங்கிலாந்திடம்  அடிமைப்பட்டுக் கிடந்த ஃபிஜி, ரக்பி செவனில் கிரேட் பிரிட்டனை துவம்சம் செய்து தங்கம் வென்ற கதையும் ஒலிம்பிக் களத்தில்தான் அரங்கேறும். இங்கே யாரும் யாரையும் வெல்ல முடியும். போர்...போர் என கிடந்த உலகத்தை விளையாட்டுபோட்டிகள் பக்கம் திருப்பி, அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு போட்டிதான் ஒலிம்பிக்.

ரியோவில் அதனை நிரூபிக்கும் வகையில், பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. தோற்றாலும் ஜெயிச்சாலும் எதிர்த்து விளையாடுபவரை அரவணைப்பதுதான் ஒலிம்பிக்கின் முக்கிய நோக்கம். ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த ஒலிம்பிக்கில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. பிய்ந்து போன காலணியை கழற்றி எறிந்து விட்டு  ஒற்றைக் காலணியுடன் ஓடிய எத்தியோப்பிய வீராங்கனை டிப்ரோ. 5 ஆயிரம் மீட்டர் தொலை தூர தகுதி சுற்று ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த நியூசிலாந்து வீராங்கனை நிகி ஹம்ப்ளின் திடீரென்று மயங்கி விழுந்து விட, அமெரிக்க வீராங்கனை அபே... ஓடுவதை நிறுத்தி விட்டு உதவி செய்தது போன்ற நிகழ்வுகள், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை ரியோவில் பிரதிபலித்தன.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில்,  நேற்று பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தன்னிடம் தோல்வியடைந்த சிந்துவை, கரோலினா சமாதானப்படுத்திய சம்பவம் அமைந்து விட்டது. ரியோ ஒலிம்பிக்கை பொறுத்தவரை, இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோதல் இது. ஒலிம்பிக்கில் இதுவரை 4 இந்திய வீராங்கனைகள் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர். அனைத்துமே வெண்கலப்பதக்கங்கள். முதன்முறையாக ஒரு இந்திய வீராங்கனை வெண்கலத்தை தாண்டி சென்றுள்ளார். அதனால், சிந்து மீது அத்தனை எதிர்பார்ப்பு. அவ்வளவு அழுத்தமும் சிந்து மீது இருந்தது. இந்திய நாட்டின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும் சிந்து மீது இருக்கிறது என்பதும் கரோலினாவுக்கும் தெரியும். கரோலினாவுக்கும் அழுத்தம் இல்லாமல் இல்லை. ஸ்பெயினும் நேற்று வரை, ஐந்து தங்கப்பதங்கள்தான் வென்றிருந்தது.

பி.வி.சிந்துவும், கரோலினா மரினும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், கரோலினா மரின் 5 முறையும் பி.வி.சிந்துவும் 3 முறை வென்றுள்ளனர்.இந்த மோதல்களே அவர்களை நல்ல நட்புக்குரியவர்களாகவும் மாற்றியிருந்தது. இந்த போட்டியில், முதல் செட்டை சிந்து கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு செட்களையும் அபாரமாக விளையாடி கரோலினா வென்று விட்டார்.வெற்றி தந்த மகிழ்ச்சியில் கரோலினா ராக்கெட்டைத் தரையில் வீசி அழுதார். அவருக்கு வாழ்த்து சொன்ன  சிந்து, மரின் வீசிய ராக்கெட்டை எடுத்து அவரது பயிற்சியாளரிடம் கொடுக்கிறார்.  அப்போதுதான் தோல்வியடைந்த சிந்துவின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தை கவனித்தார் மரின். சிந்துவின் முகம் வாடியிருந்தது. தனது தவறை உணர்ந்து கொண்ட மரின்,  ஏய்... என சிந்துவை அணைத்து கொண்டு ஆறுதல் சொன்னார்.


களத்தில்  விளையாட்டு வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு உதாரணமாக இருவரும் நடந்து கொண்டனர். ஒலிம்பிக்கின் நோக்கமும் அதுதான் .வெற்றி தோல்வி இங்கு இலக்கு அல்ல. பரஸ்பர அன்பும் நட்பும் பரவ வேண்டுமென்பதே ஒலிம்பிக்கின் நோக்கம். சோ... சிந்துவும் தோற்கவில்லை.... கரோலினாவும் வெற்றி பெறவில்லை. இங்கு ஒலிம்பிக் மட்டுமே ஜெயித்திருக்கிறது.

வளர்க ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்...!

                                                                                                                                                                                                                    -  -எம். குமரேசன்

 

எடிட்டர் சாய்ஸ்