Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.வி.சிந்து Vs கரோலினா - இறுதிச்சுற்றில் நடந்தது என்ன?

1896 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒலிம்பிக்  ஏதென்ஸில் நடந்தது. இது ஒலிம்பிக்குக்கு 120 வது ஆண்டு.  1900 ஆம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா ஒலிம்பிக்கில் பங்கேற்றது. அப்போதில் இருந்து 2012 ஒலிம்பிக்ஸ்  வரை  அபினவ் பிந்த்ரா மட்டும் தான் தனிநபர் பிரிவில் ஒலிம்பிக்கில்  தங்கம் வென்று சாதனை படைத்தவர்.

எந்தவொரு பெண்மணியும் இந்தியாவுக்காக விளையாடி தங்கமோ, வெள்ளியோ வென்றதில்லை. கர்ணம் மல்லேஸ்வரி, சாய்னா நேவால், மேரிகோம், சாக்ஷி மாலிக் என நான்கு பெண்கள் கடுமையாக போராடி வெண்கலம் பதக்கம் வென்றிருக்கிறார்கள். இந்த முறை பி.வி.சிந்து இன்னும் கொஞ்சம் எகிறியடித்து வெள்ளி வென்று சரித்திரம் படைத்திருக்கிறார்.

 தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது மட்டுமின்றி, தொடர்ந்து இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் கரோலினா. சிந்துவும் கரோலினாவும் இந்த ஒலிம்பிக்குக்கு முன்னதாக  ஏழு முறை நேருக்கு நேர் மோதியிருந்தார்கள். அதில் மூன்று முறை சிந்து வெற்றி பெற்றிருந்தார். எனவே இந்த இறுதிப்போட்டி கடுமையான போட்டியாக இருக்கும் என பேட்மின்டன் வல்லுநர்கள் கணித்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 19, 2016 ஆம் ஆண்டு இந்திய நேரப்படி இரவு 7.35க்கு சரியாக இறுதிபோட்டி ஆரம்பித்தது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரியோ நகரத்தில் பேட்மின்டன் களத்தில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும்,  ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினும் நேருக்கு நேர் மோதினார்கள்.

செட்: 1 -  போராடி வென்ற சிந்து: -

முதல் செட்டில்  ஆரம்பத்தில் இருந்தே போட்டி விறுவிறுவென திரில்லிங்காக சென்றது. 2-2 என இருவரும் சமமாக இருந்த நிலையில் கரோலினா ஆக்ரோஷமாக விளையாடி 7-3 என முன்னிலை  வகித்தார். அதன் பின்னர் சிந்து தான் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு மூர்க்கத்தனமாக  போராட 9-6 க்கு வந்தார். அதன் பின்னர் கரோலினா தொடர்ந்து மூன்று பாயிண்டுகளை வெல்ல 12-6 என நிலைமை மாறியது. சிந்துவுக்கு வெற்றி வாய்ப்பு 50% தான் என்பதால் டிவியில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு முதல் செட் அவ்வளவு தான் என தோன்றியது. ஆனால் அதன் பின்னர் முன்பை விட விட்டுக்கொடுக்காமல் போராட ஆரம்பித்தார், 12-6 என்ற நிலைமையில் இருந்து 16-15 என்றானது. இதற்கு அடுத்த புள்ளியை பெற இருவரும் கடுமையாக ஸ்மாஷ் அடிக்க ராலி நீண்டது. 19-16 என கரோலினா முன்னிலை வகித்த நிலையில் விறுவெறுவென அடுத்த ஐந்து புள்ளிகளையும் வென்று 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார் சிந்து.

செட்:2 - முந்திய கரோலினா


இரண்டாவது செட் சிந்து எவ்வளவோ போராடியும் கரோலினாவின் ஸ்மாஷ்க்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை. இந்த செட்டில் தடதடவென புள்ளிகளை பெற்று அசைக்க முடியாத லீடில் இருந்தார் கரோலினா. 0-4 என்று  நிலையில் இருந்து 11-4 எனவும் பின்பு 16-8 என்றும், 19-12 எனவும் பின்தங்கியே இருந்தார் சிந்து. அதன் பின்னர் அடுத்த இரண்டு புள்ளிகளை கரோலினா ஜெயிக்க செட் அவர் வசமானது.

செட்: 3 - போராட்டத்தை கைவிடாத சிந்து

மூன்றாவது  செட்டிலும் ஆரம்பத்தில் கரோலினாவே ஆதிக்கம் செலுத்தினார். 6-1 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது  சிந்துவின் மீது நம்பிக்கை வெளிச்சம் குறைந்தது. ஆனால் அதன் பின் சிந்து ஆடிய ஆட்டம் 'வாவ்' ரகம். அடுத்தடுத்து ஏழு புள்ளிகளை கைப்பற்ற 9-8 என ஒரே ஒரு புள்ளி லீடிங்கில் மட்டுமே இருந்தார் கரோலினா. ஆனால் கரோலினா அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். தொடர்ந்து ஸ்மாஷ் ஆட சிந்து தடுமாற 15-11 என  லீடிங்கில் சென்றார் கரோலினா. அதன் பின்னர் அடுத்த மூன்று புள்ளிகளை சிந்து மிக கடுமையாக போராடி எடுக்க 16-14 என நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்தது. சிந்துவுக்கு பதக்க வாய்ப்பு இருந்ததால் இந்தியாவே ஆர்ப்பரித்தது. ஆனால் கரோலினா அங்கிருந்து நேராக ஐந்து பாயிண்டுகளை அடுத்தடுத்து ஜெயிக்க (21 -15) என வெற்றி பெற்று  ஒலிம்பிக்கில் முதல் முறையாக தங்கம் ஜெயித்தார் கரோலினா.

ஏமாற்றத்துடன் சில நொடிகள் சிந்து இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்டிருந்த கரோலினாவை கட்டியணைத்து விடைபெற்றார் . ஸ்பெயினின் 'கேர்ள் நடால்' என செல்லமாக அழைக்கப்படும் கரோலினா மரின், சிந்துவை விட இரண்டு வயது மூத்தவர். இந்தப் போட்டி சிந்துவுக்கு கடும் சவாலாக அமைந்ததற்கு இன்னொரு காரணம் உண்டு. கரோலினா இடது கை ஆட்டக்காரர், சிந்து வலது  கை ஆட்டக்காரர். கரோலினா, சிந்து இருவருக்குமே பேட்மின்டனில் பேக் ஹேண்டில் தான் பலம். இது கரோலினாவுக்கு ஒரு வகையில் சாதகமாக இருந்தது,  வரிசையாக ஸ்மாஷ் ஆடி சிந்துவை நிலைகுலைய வைத்தார் கரோலினா. ஆனால் சிந்து ஸ்மாஷ் ஆடும்போது அது கரோலினாவுக்கு சாதகமாக அமைந்தது. இந்த ஒரு பலவீனத்தை வைத்தே  போட்டியை முடித்து தங்கத்தை வென்று  சாதனை படைத்தார் கரோலினா.

தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கரோலினாவுக்கு பத்தாமிடத்தில் இருக்கும் சிந்து கொடுத்த டஃப் ஆட்டம் பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 21 வயதில் வெள்ளி பதக்கத்தை வென்றதையடுத்து இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சரித்திர சாதனையும் படைத்திருக்கிறார் சிந்து. இவர் இன்னும் பல உயரங்களை அடுத்தடுத்த வருடங்களில் எட்டுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

- பு.விவேக் அனந்த் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ