Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சியர் லீடர்ஸ் யார்? -#TNPL கோலாகலம்

வாலாஜா ரோடு வழியாக சேப்பாக்கம் மைதானத்தை நெருங்கும்போதே ஒருவித புத்துணர்ச்சி. ஃப்ளட் லைட் வெளிச்சம் கண்ணைக் கூசியது. சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி எங்கு பார்த்தாலும் காக்கி உடைகள். ‘வண்டியை இங்க நிறுத்தக் கூடாது. அங்க போ அங்க போ...’ என விரட்டிக் கொண்டே இருந்தனர் செக்யூரிட்டிகள். 

டிக்கெட்டை வாங்கி சரிபார்த்து, ‘எஃப் ஸ்டாண்ட்டு அங்க இருக்கு..’ என வழிகாட்டிக் கொண்டிருந்தனர் மேட்ச் அஃபீஸியல்ஸ் என்ற பேட்ஜ் அணிந்திருந்தவர்கள். சைரன் வைத்த வண்டியில் வந்திறங்கிய மேலதிகாரியின் மனைவி, குழந்தைகளுக்கு அட்டென்சனில் சல்யூட் அடித்து, பவ்யமாக அழைத்துச் சென்றனர் சில போலீஸார். ஒருமுறை தனக்குத்தானே ஹோம்வொர்க் செய்து கொண்டு, பின் ஓகே என தம்ஸ் அப் காட்டி நேரடி ஒளிபரப்புக்கு தயாரானார் பட்டாபிராம் கேட் முன்பு ஒரு டிவி நிருபர். 

‘சீக்கிரம் வாங்க. ஷ்ரேயா டான்ஸ் ஆடப் போறா...’ என சக நிருபர் வாட்ஸ் அப்பில் அனுப்பியதை வாசித்துக் கொண்டே மைதானத்துக்குள் நுழைந்தால், பெவிலியன் எண்ட் முன்பு, மேடையில் ஆண்ட்ரியாவும், மாதவனும் சிரித்தபடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாரம்பரிய நடனங்களை ஆடி கலக்கிக் கொண்டிருந்தனர். திடீரென ‘ஆடுகளம்’ நாயகன் தனுஷ் ஓபன் டாப் கார்ட்டில் ‘ஆடுகளத்தில்’ வலம்வர, ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். மேடையில் ஷ்ரேயா ‘அலேக்ரா அலேக்ரா’ பாடலுக்கு டான்ஸ் ஆடத் துவங்கியதும் சைலன்ட்டாக வேடிக்கை பார்க்கத் துவங்கியது கூட்டம். அடுத்தடுத்து நான்கு பாட்டுக்கு ஷ்ரேயா ஆடி முடித்ததும், கடைசியாக ‘நெருப்புடா நெருங்குடா’ பாடலுக்கு தன்ஷிகா ஆட, விசில் சத்தம் விண்ணை முட்டியது. 

அதற்கு நேர் எதிரே, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் தொகுப்பாளினி, எல்.சிவராமகிருஷ்ணன், டீன் ஜோன்ஸிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். இதை எதையுமே பார்க்காமல் காரியத்திலேயே கண்ணாய் இருந்தனர் சேப்பாக் கில்லிஸ், டூட்டி பேட்ரியாட்ஸ் அணியினர். ஆம், அந்த ஆர்ப்பாட்டத்துக்கு நடுவிலும் அவர்கள் ஒருபுறம் வார்ம் அப் செய்து கொண்டிருந்தனர்.ஆட்டம், பாட்டம் எல்லாம் முடிந்ததும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன், டூட்டி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் கேப்டன்களான தினேஷ் கார்த்திக், சதீஷ், நடிகர் மாதவன், ஆண்ட்ரியா சூழ்ந்து நிற்க, மேடையில் கோப்பையை அறிமுகம் செய்தார் தனுஷ். இந்த தருணத்துக்காகவே காத்திருந்தது போல, வாண வேடிக்கைகள் வெடித்துச் சிதற, மைதானமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

புகை மெல்ல மெல்ல விலகத் துவங்கியபோது, பெவிலியன் எண்ட்டில் இருந்த மேடை, டெம்ப்ளேட் பிளக்ஸ் போர்டுகள், அறிவிப்பு பலகைகள், வார்ம் அப் செய்த போது மைதானமெங்கும் சிதறிக் கிடந்த உபகரணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியேறி இருந்தது. கூடவே மனிதர்களும். அதுவரை கசகசவென இருந்த மைதானத்தில், கடைசியாக நிலைத்திருந்தது ஸ்டம்புகள் மட்டுமே.

ஆம். கோலகலமாக துவங்கியது தமிழ்நாடு பிரிமியர் லீக். 


துளிகள்...

* டிஎன்பிஎல் தொடரின் முதல் நாள் போட்டியை காண 13,000 பேர் வந்திருந்தனர். சிஎஸ்கே இல்லை, சேப்பாக்கத்தில் வேர்ல்ட் டி2&0 போட்டிகள் நடக்கவில்லை என ரசிகர்கள் காய்ந்து போயிருந்தனர் என்பதற்கு இதுவே சாட்சி.

* ஐபிஎல் பாணியில் தொடங்கும் இந்த தொடருக்கு ‘சியர் லீடர்ஸ்’ யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மாடல்கள் தோற்றத்தில் இருந்த டீன் ஏஜ் யுவதிகள், அந்த குறையை போக்கினர். பெண்களை விட அவர்களுக்கு முன் நின்று ஆடிய சிறுவனின் ஆட்டம் செம.

* ‘ப்பா என்னா வெயிலு...’ சென்னைக்கு புதிதாக வருபவர்கள் சொல்வதைப் போலவே சொன்னார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ். ‘சென்னை என்றதும் எனக்கு வெயில்தான் நினைவுக்கு வருகிறது’ என்றார் ஜோன்ஸ். 1986ல் சென்னை வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல், வாந்தி எடுத்து வாந்தி எடுத்து 200 ரன்கள் அடித்தார் ஜோன்ஸ் என்கிறது வரலாறு.

 

-தா.ரமேஷ்

படம்: மீ.நிவேதன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ