Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘காளையை’ அடக்கிய ‘வீரன்’! தொடரின் முதல் சதம் அடித்து அபராஜித் முத்திரை #TNPL

தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடரில் பாபா அபராஜித் முதல் சதம் அடித்து முத்திரை பதிக்க, காரைக்குடி காளை அணியை வீழ்த்தி வெற்றி நடை போட்டது திருவள்ளூர் வீரன்ஸ் அணி.

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளுக்கும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டம், திண்டுக்கல் நத்தம் என்பிஆர் இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை அணிகள் மோதின.

டாஸ் வென்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி ஃபீல்டிங் செய்தது. முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக சீனிவாசன் 38 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். கேப்டன் பத்ரிநாத் 7 ரன்களில் ஏமாற்றினார். ஓபனிங் பேட்ஸ்மேன் விஜயகுமார் 43 ரன்கள்( 39 பந்து) அடித்திருந்தார். திருவள்ளூர் தரப்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய திருவள்ளூர் அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஹரி நிஷாந்த் (0), சதுர்வேத் (7) ஏமாற்றினர். ஆனால், கேப்டனுக்கே உரிய பொறுப்படன் ஆடினார் அபராஜித். ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடிய அவர் 34 பந்துகளில அரை சதம் அடித்தார். அதன்பின் நாலா பக்கமும் பந்தை சிதறடித்து அடுத்த 22 பந்துகளில் சதத்தைத் தொட்டார்.

சதத்தை நெருங்கும் வேளையில் ஸ்கோர் போர்டை கவனிக்காமல், அடுத்தடுத்து சிக்ஸர் பறக்க விட்டு செஞ்சுரி அடித்தது, இதுவரை இரவு வெளிச்சத்தில் கிரிக்கெட்டை நேரில் பார்த்திராத திண்டுக்கல் ஏரியாவாசிகளுக்கு விருந்தாக அமைந்தது. முடிவில் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திருவள்ளூர் அணி. அபராஜித் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்த தொடரில் முதல் சதம் விளாசிய பெருமையைப் பெற்ற அபாரஜித்துக்கே ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. அதோடு அதிக சிக்ஸர், அதிக பவுண்டரி அடித்தவருக்கான காசோலையும் அவரையே தேடி வந்தது. இந்த முத்திரைக்குப் பின் அபராஜித் கூறியது:

'பிட்ச் நன்றாக இருந்தது. இது சின்ன மைதானம் என்றாலும், 165 ரன்களை சேஸ் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. டாஸ் வென்றதும் என்ன முடிவெடுப்பது என தெரியவில்லை. நாங்கள் பேட்டிங் செய்தபோது எதிர்முனையில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. இருந்தாலும், லெக் ஸ்பின்னர் வந்ததும், அந்த ஓவரை சரியாக பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். அடித்து ஆட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. என் இயல்பான ஆட்டத்தை ஆடினேன். ரன்கள் தானாகவே வந்தது. மாலோலன் ரங்கராஜன் சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார். ஏனெனில் ஒரு கட்டத்தில் என்னால் ரன்னே அடிக்க முடியவில்லை. 80 முதல் 90 ரன் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தத்தில் வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி. நான் துலீப் டிராபி தொடரில் பங்கேற்பதால், அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு போட்டிக்கும் இதே சூழல் இருக்காது. டி&20 போட்டியில் யாராலும் அடுத்தடுத்து சதம் அடித்துக் கொண்டே இருக்க முடியாது. எங்களிடம் திறமையான 18 வீரர்கள் உள்ளனர். அதில் யாராவது ஒருவர் தனி ஆளாக ஆட்டத்தை கையில் எடுத்து மாற்றுவார்' என நம்புகிறேன் என்றார் அபராஜித்.

-தா.ரமேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ