Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருக்கு நேர்ந்த கொடுமை!

முன்னாள் ஹாக்கி வீராங்கனையான ராஜ்பிர் கவுர் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததால், அவரது கணவரும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவருமான குர்மாயில் சிங்கை, பஞ்சாப் அரசு போலீஸ் பதவியில் இருந்து நீக்கியது. 

இந்திய ஹாக்கியின் முன்னாள்  வீரர் குர்மாயில் சிங் (56). மாஸ்கோவில் 1980ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி வென்ற அணியிலும் இருந்தார். அர்ஜுனா விருது வென்ற இவருக்கு, 2014ல் சிறந்த ஹாக்கி வீரருக்கு வழங்கப்படும் த்யான் சந்த் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

ஹாக்கியில் சிறப்பாக செயல்பட்டதை கவுரவிக்கும் வகையில் பஞ்சாப் அரசு அவருக்கு, போலீஸ் துறையில் எஸ்.ஐ. ரேங்கில் பணி நியமனம் வழங்கியது. அவர் 1987 முதல் 1993 வரை பஞ்சாப் போலீஸ் அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின் ஆறு ஆண்டுகள் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

குர்மாயில் சிங் மனைவி ராஜ்பிர் கவுரும் முன்னாள் ஹாக்கி வீராங்கனை. அவர் இரண்டு மாதங்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். சமீபத்தில் ராஜ்பிர் கவுர், பஞ்சாபில் போதைப் பொருள் பழக்கம் பெருகி வருவதாக அரசுக்கு எதிராக பேட்டியளித்திருந்தார். இது பஞ்சாப் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால், ராஜ்பிர் கவுரை பழிவாங்கும் விதமாக, அவரது கணவர் குர்மாயில் சிங்கை போலீஸ் பணியில் இருந்து நீக்கியுள்ளது பஞ்சாப் அரசு.

‘ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கம் கிடைக்கவில்லை என ஒருபுறம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, இங்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் மோசமாக நடத்தப்படுகிறார். என் கணவருக்கு கடந்த 2014ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தயான்சந்த் விருது வழங்கினார். 2017 டிசம்பர் 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற இன்னும் 17 மாதங்கள் இருக்கின்றன. ஆனால், அவர் விசாரித்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சிபிஐ சில பரிந்துரைகளை முன் வைத்திருப்பதை மேற்கோள்காட்டி, அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம்’ என்றார் ராஜ்பிர் கவுர்.

இந்த விஷயத்தில் தனக்கு எதிராக சதி நடத்திருப்பதாக குர்மாயில் சிங் சந்தேகப்படுகிறார். ‘மோகாவில் நான் எஸ்பியாக பணியாற்றியபோது, 2010ல் ஒரு கொலை வழக்கை விசாரிக்க பணிக்கப்பட்டிருந்தேன். எவ்வளவோ முயன்றும் அந்த வழக்குக்கு தேவையான ஆதாரங்களையோ சாட்சிகளையோ திரட்ட முடியவில்லை. இதனால் வழக்கை கைவிட வேண்டிய சூழல் வந்தது. ஒரு கட்டத்தில் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. துரதிருஷ்டவசமாக, என் மீது குற்றச் சதி, மோசடி, தடயங்களை அழித்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ பரிந்துரைத்தது. இதை காரணம் காட்டி, என்னை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இதில் ஏதோ சதி இருக்கிறது. நான் பலிகடா ஆக்கப்பட்டேன்’ என்றார் குர்மாயில் சிங்.

பஞ்சாபில் பாரதிய ஜனதா & சிரோமணி அகாலிதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பஞ்சாப் அரசுக்கு எதிராக ஆம் ஆத்மியை சேர்ந்த ராஜ்பிர் கவுர் கருத்து சொன்னதே, குர்மாயில் மீது இந்த நடவடிக்கை பாயக் காரணம் என்ற பேச்சு அபடுகிறது.

-தா.ரமேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ