Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனையின் கிராமத்துக்கு மின்வசதி!

ஒவ்வொரு நாட்டு வீரர் -வீராங்கனைகளும் எவ்வளவோ கஷ்டத்துக்குமிடையேவும் கடின உழைப்பால் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் கென்யா 6 தங்கம் 6 வெள்ளி ஒரு வெண்கலம் வென்றிருந்தது. ஆப்பிக்காவில் வறுமைத் தாண்டவமாடும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. குறைந்தது 20 ஊர்களுக்கு ஒரு பள்ளிதான் இருக்கும். பல கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் குழந்தைகள் பள்ளிக்கு  செல்ல வேண்டியது இருக்கும். வாகனப் போக்குவரத்தும் இருக்காது. காடு, மலை,  வனவிலங்குகள் இவற்றையெல்லாம் கடந்துதான் கென்ய குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள்.

கென்ய குழந்தைகள் எங்கு சென்றாலும், எல்லாவற்றுக்கும் நடை பயணம்தான். இந்த நடைபயணமே கென்யா உள்ளிட்ட ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளை இளம் வயதிலேயே வலிமை மிக்கவர்களாக மாற்றி விடும். மெலிதான உடற்கட்டுடனே வளரும் இந்த குழந்தைகள் மாரத்தன், நீண்ட தொலைவு ஓட்டத்தில் திறமை மிக்கவர்களாக மாறிவிடுவார்கள். இவர்களை போன்றவர்களை தேர்ந்தெடுக்கும் ஆப்ரிக்க நாடுகள், கடும் பயிற்சி அளித்து மாரத்தனில் வல்லவர்களாக மாற்றி விடுகின்றன.

கென்யாவின் மசாய் மற்றும் களஞ்சின் இன பழங்குடி மக்கள் மாரத்தன் மற்றும் நீண்ட தொலைவு ஓட்டத்தில் வல்லவர்கள்.ஆக்சிஜன் குறைவாக உள்ள மலைபிரதேசங்களில்தான் இவர்கள் வசிப்பார்கள். ஆக்சிஜனை கொண்டுசெல்லும் சிகப்பணுக்கள் அவர்கள் இரத்தத்தில் அதிகமாக இருக்கிறதாம். நுரையீரலின் செயல்பாடும் மற்றவர்களை விட சிறப்பாக இருக்கும் . அதனால், சமதளங்களில் வந்து ஓடும்போது, கென்ய மாரத்தன் வீரர்களுக்கு வெற்றி எளிதாகி விடுகிறது.இந்த மக்கள் குறைந்த கால பயிற்சி எடுத்தாலே, முன்னணி வீரர்களை தோற்கடிக்கும் அளவுக்கு முன்னேறி விடுகின்றனர். கென்யா, எத்தியோப்பிய நாட்டு வீரர்- வீராங்கனைகள் மாரத்தன், நீண்ட தொலைவு ஓட்டப் பந்தயங்களில் தங்கம் வெல்லும் ரகசியம் இதுதான்.  

ரியோ ஒலிம்பிக்கில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஃபெயித் கிப்யேகனும் அந்த ரகம்தான். இவரது கிராமத்தில் மின்சார வசதி கூட கிடையாது. அத்தகைய கஷ்ட சூழலில் வளர்ந்து ஒலிம்பிக் வரை வந்து விட்டார். ஆனால், ரியோவில் ஃபெயித் எத்தியோவின் டிபாபாவை எதிர் கொள்ள வேண்டியது இருந்தது. இந்த டிபாபா சாதாரண ஆள் இல்லை. 1,500 மீட்டர் ஓட்டத்தை 3:50:07 விநாடிகளில் கடந்து உலச சாதனை படைத்தவர். ரியோவிலும் தொடக்கத்தில் இருந்தே டிபாபாதான் முதலில் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் கடைசி ரவுண்டில் வேகமெடுத்த ஃபெயித், டிபாபாவை முறியடித்து இலக்கை 4:08.92 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஆனால் ஃபெயித் தங்கம் வென்றது கூட அவரது பெற்றோர் பார்க்க முடியாத நிலை. ஏனென்றால் கென்யாவின் ஃபெயித்தின் சொந்த கிராமமான டபாபிட்டில் மின்சார வசதி கூட கிடையாது.மின்சாரம் இருந்தால்தானே தொலைக்காட்சி இருக்கும். ஊரிலேயே மின்சாரம் கிடையாது. அடுத்த நாள் பத்திரிகைகளை பார்த்துதான் ஃபெயித்தின் பெற்றோர் தங்கள் மகள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை அறிந்து கொண்டனர்.

'மகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை கூட பார்த்து மகிழ முடியாத சூழலில் தாங்கள் இருந்ததாகவும் அதனால் தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென ஃபெயித்தின் தந்தை சாமுவேல் கிப்யோகன் கென்ய அதிபர் உகுரு கென்யாட்டாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அதிபரின் மனம் கரைந்தது. இதையடுத்து, பிரேசிலில் இருந்து ஃபெயித் சொந்த ஊருக்கு திரும்புவதற்குள் அவரது கிராமத்திற்கு மின்சார வசதி அளித்து விடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

துரித கதியில் பணிகள் நடந்தன. ஆகஸ்ட் 26ம் தேதி ஃபெயித்தின் சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டது. ஃபெயித்தின் வீட்டுக்கும் மின் வசதி கொடுக்கப்பட்டது. ஃபெயித்தின் சொந்த கிராம மக்கள் உற்சாகத்தில் திளைத்தனர். மின்சாரம்  பெற்றுத் தந்த ஃபெயித்தை மனதார வாழ்த்தினர். ரியோவில் இருந்து சொந்த கிராமத்துக்கு வந்த ஃபெயித்தை கிராம மக்கள் மட்டும் வரவேற்கவில்லை... மின் வெளிச்சமும் வரவேற்றது. ஃபெயித்தின் கிராமத்துக்கு சாம்சங் நிறுவனம் டி.வி ஒன்றை பரிசளிப்பதாக உறுதி அளித்துள்ளது.

'பெற்றால் ஃபெயித்தை போன்ற பிள்ளையை பெற்க வேண்டும்' என பக்கத்து கிராம மக்கள் பொறாமையில் பேசிக் கொள்கிறார்களாம்...!

-எம். குமரேசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ