Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓய்வு பெற்றார் இந்தியாவின் ''தங்க மகன்'' அபினவ் பிந்த்ரா

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 கோடி மக்களைக் கொண்ட நாடு ஒரு தங்கப்பதக்கமாவது வெல்லாதா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரது கண்களிலும் இருக்கும். சிறிய நாடுகள் கூட இரட்டை இலக்கத்தில் தங்கம் அள்ளும். அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் தனி நபர் பிரிவில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றார். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் என்ற செய்தி அனைவரையுமே மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது என்பதில் சந்தேகமே இல்லை! ஆம், அபினவ் பிந்த்ரா எனும் துபாக்கி சுடும் வீரர்தான் இந்தியாவிற்காகத் தங்கம் வெல்லும் முதல் தனிநபர். ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இவர். தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

இவர் 1982ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் பிறந்தவர், அபினவ்வின் தாத்தா இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர். தாத்தா ராணுவத்தில் இருந்ததால் அவரது வீட்டில் துப்பாக்கிகள் இருந்தன. சிறுவயதிலேயே அவற்றின் மீது அபினவிற்கு ஓர் ஈர்ப்பு உண்டானது. துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அப்போதே உருவானது. அவர்களது குடும்பம் சண்டிகருக்கு இடம் பெயர்ந்தபோது அங்கே துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இதற்காக அபினவ் பிந்த்ராவிற்கு அவரது பெற்ரோர்கள் அவர்களது வீட்டிலேயே சிறிய துப்பாக்கி சுடும் உள் விளையாட்டு பயிற்சி அரங்கை அமைத்து கொடுத்துள்ளனர். கர்னல் தில்லான் என்பவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் மூலமாகத்தான் இந்தப் போட்டியின் அடிப்படைகளை அபினவ் கற்றுக்கொண்டுள்ளார்.

2002-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றபோது, பஞ்சாப் மாநில அரசாங்கம் அவரை சரியாகக் கௌரவிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. அதைப்பற்றி அபினவ் கவலைப்படவில்லை. ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே தன்னுடைய லட்சியம் என்று அப்போதே உறுதியாக அறிவித்திருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட முதுகுவலி, ஒலிம்பிக்ஸ் போட்டியில்  கலந்துகொள்ள முடியுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார். பதக்கத்தை வெல்வதற்கு கடைசி ஷாட்டில் 10.4 பாயின்ட்கள் அவருக்குத் தேவையாக இருந்தது. ஆனால், அவரோ 10.7 பாயின்ட்களைப் பெற்று தங்கத்தைக் கொய்து விட்டார். அதுவரை ஹாக்கியில் அதுவும் குழு விளையாட்டில் தங்கம் வென்றிருந்த இந்தியாவிற்கு முதல் முறையாக ஒரு தனி நபர் தங்கம் வென்று தந்திருக்கிறார் என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பதக்கம் இந்தியாவில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளும் உள்ளன என்பதை அடையாளம் காண‌ வைத்தது.

அவர் வசதியான குடும்ப பின்னனி உடையவர் அவரது வெற்றிகளுக்கு அவரது தனிப்பட்ட பயிற்சிதான் காரணம் என்ற விமர்சனங்கள் அவர் மீது எழுந்தாலும், அவரது வெற்றி அனைத்தும் இந்தியாவைதான் பெருமைப்படுத்தியுள்ளது.

இன்று இந்தியாவுக்கு ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் தனி நபர் பிரிவில் குறைந்த பட்சம் இரண்டு பதக்கங்களாவது கிடைக்கிறது என்றால் அது அபினவ் பிந்த்ராவின் தங்கப்பதக்கத்துக்கு பின்னால் வந்த வளர்ச்சி தான். ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்தார் பிந்த்ரா. துப்பாக்கியில் கோளாறு இருந்தது என்ற செய்திகள் வந்தாலும், இந்தியாவின் முதல் தங்க மகன் பிந்த்ரா தான். இனி சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார். இருந்தாலும்  இந்திய விளையாட்டில் அவரது பதக்கம்தான் மற்ற போட்டிகளுக்கு வெளிச்சம் காட்டிய சாதனை என்பதை வரலாறு சொல்லும்...குட் பை அபினவ் பிந்த்ரா!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ