Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவிலும் இருக்கிறார்கள் மெஸ்ஸியும் ரொனால்டோவும்!

“கிரிக்கெட் விளையாடத்தான் இவங்கெல்லாம் லாயாக்கு. ஒலிம்பிக்ல ஒரு தங்கம் வாங்க கஷ்டப்படுது. ஃபுட்பால் உலகக்கோப்பைக்கு செலக்ட் ஆகவே முடியல. எப்பத்தான் இவங்க திருந்துவாங்களோ”…செய்தித்தாள் படித்துவிட்டு விளையாட்டு வியாக்கியானம் பேசும் இந்தியர்களின் மைன்ட் வாய்ஸ் இதுதான். நாமும் எத்தனை நாள் தான் ஐரோப்பிய கிளப்புகளுக்கும் ஃபாரின் வீரர்களுக்குமே ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பது. நம்ம ஊரிலும் ஒரு மெஸ்ஸியோ ரொனால்டோவோ உருவாக வேண்டாமா? ஐரோப்பாவில் வீக் என்ட் திருவிழாவாகக் கருதப்படும் கால்பந்தை நாமும் வார இறுதியில் மைதானத்தில் சென்று ரசிக்க வேண்டாமா? ஆனால் இவையெல்லாம் சாத்தியமா என்று உங்கள் செவன்த் சென்சில் ஸ்டிரைக் ஆகும். உங்கள் கேள்விக்கு பதிலாய் இதோ இரு சிறுவர்கள் கால்பந்துப் பயிற்சிக்கு ஃபாரின் செல்கிறார்கள். அதுவும் உலக சாம்பியன் நாடான ஜெர்மனிக்கு!

கடந்த ஜூலை மாதம் டாடா டிரஸ்ட் சார்பில் இந்தியாவில் சிறுவர்களுக்காக ஒரு கால்பந்து தேர்வு நடந்தது. அது எதற்காக தெரியுமா? 6 ஆண்டுகள் ஜெர்மனியில் தங்கி கால்பந்து பயிற்சி பெறுவதற்காக சிறுவர்களைத் தேர்வு செய்ய உலகம் முழுதும் நடத்தப்பட்ட தேர்வு அது. அந்த செலக்க்ஷனில் கலந்து கொண்டான் 9 வயது அசாம் சிறுவன் சந்தன் போரோ. குப்பை பொறுக்கும் தந்தைக்கும், டீக்கடையில் வேலை பார்க்கும் தாய்க்கும் மகனாகப் பிறந்த அந்த நான்காம் வகுப்பு மாணவனின் திறமை அனைவரையும் வியக்க வைத்து விட்டது. இதோ டாடா டிரஸ்டின் செலவிலேயே 6 ஆண்டுகள் ஜெர்மனியில் தங்கி அங்கேயே படித்துக்கொண்டு கால்பந்து பயிற்சியை மேற்கொள்ளப் போகிறான் போரோ.

சந்தன் போரோ போகும் அதே ஜெர்மனிக்கு கால்பந்து பயிற்சிக்குச் செல்லப் போகிறான் இன்னொரு சந்தன். ஆம் ஒடிசாவைச் சேர்ந்த 11 வயது சந்தன் நாயக் கடந்த மாதம் நடந்த வேறொரு தேர்வில் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான். குள்ளமாக இருந்ததால் முதல் சுற்றுக்கே வாய்ப்பு மறுக்கப்பட்ட சந்தன் நாயக், கெஞ்சிக் கூத்தாடி பங்கேற்று, தன்னை நிராகரிக்க நினைத்தவர்களுக்கு மிகப்பெரிய பாடமும் புகட்டினான். உலகம் முழுதும் வெறும் 120 சிறுவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட அவர்களுள் ஒருவனாக ஜெர்மனியின் பேயர்ன் மூனிச் அணியினரோடு பயிற்சி செய்யப் போகிறான் நாயக். இவனது பயிற்சிக்காலம் இரண்டு மாதங்கள் தான். ஆனால் உலகின் தலைசிறந்த ஒரு அணியோடு பயிற்சி செய்யும் அறிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறான். ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அணியான பேயர்ன் மூனிச் அணியின் தலைசிறந்த பயிற்சியாளர்களோடு பயிற்சி பெறுவது நிச்சயம் அவனுக்கு வரப்பிரசாதமாய் அமையும்.

இவர்கள் மட்டுமல்ல இதற்கு முன்பும் பல சிறுவர்கள் வெளிநாடுகளில் கால்பந்து பயிற்சி பெற தேர்வாகியுள்ளனர். ஆனால் இந்த இரு சிறுவர்களும் படிப்புக்கே கஷ்டப்பட்டவர்கள். தற்போது தங்கள் வாழ்க்கையின் மிகமுக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகின்றனர். எல்லாம் சரி, இவர்களைப் போன்ற சிறுவர்கள் வருங்காலத்தில் உலக அளவில் பெரிய நட்சத்திரமாய் வளம் வருவார்களா? அதுதான் மிகப்பெரிய கேள்வி. எத்தனையோ இளம் சாதனையாளர்களை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. ஆனால் அவர்களுள் எத்தனை பேரை உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. வினோத் காம்ப்ளி, குற்றாலீசுவரன் போல் தேய்ந்து போன நட்சத்திரங்கள் இங்கு ஏராளம். பிறகு எப்படித்தான் இவர்களை அக்னி நட்சத்திரங்களாய் மாற்றுவது?

இங்குதான் நாம் ஒரு பாடம் படிக்க வேண்டியது இருக்கிறது. திறமைகளைக் கண்டறிந்த பிறகு அதைப் பாராட்டுவதோடு நிறுத்திவிடுவது நமது கலாச்சாரத்தோடு கலந்துவிட்டது. மெஸ்ஸி.. மெஸ்ஸி... என்கிறோமே மெஸ்ஸி ஒன்றும் 10 வருடத்திற்கு முன்பு வளர்ந்தவரல்ல. 10 வயதிலேயே பார்சிலோனா அணியால் கண்டறியப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு, அங்கேயே ஊட்டி வளர்க்கப்பட்டவர். ரொனால்டோவும் அதேபோல் தான் ஸ்போர்டிங் கிளப்பின் ஜூனியர் அணியிலிருந்து முன்னேறியவர். ஐரோப்பாவின் ஒவ்வொரு அணியும் இளம் வீரர்களை வளர்ப்பதற்காக அகாடெமியை நிறுவி 5 வயது சிறுவர்கள் முதலான திறமைகளைக் கண்டறிந்து வளர்க்கின்றனர். போக்பா, பிக்கு, பேலே போன்ற நட்சத்திரங்கள் பலரும் அப்படியான அகாடெமியிலிருந்து வந்தவர்கள் தான்.

அப்படியான முயற்சிகள் தான் நாம் எடுக்க வேண்டியவை. வெறுமனே இரண்டு மாதங்கள் ஐ.எஸ்.எல் போட்டிகளை நடத்துவதால் இந்தியாவில் கால்பந்து மேம்பட்டுவிடப் போவதில்லை. இளம் வீரர்களை மெருகேற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும். அதற்கென அகாடெமிகளை உருவாக்க வேண்டும். ஐ.எஸ்.எல் தொடரில் விளையாடும் கொல்கத்தா அணிக்கு ஸ்பெயினின் மிகப்பெரிய அணியான அத்லெடிகோ மாட்ரிட் அணியும், புனே அணிக்கு இத்தாலியின் ஃபியோரென்டினா அணியும் இணை உரிமையாளர்களாக இருக்கின்றன. அகாடெமியில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த முன்னணி ஐரோப்பிய அணிகளின் கவனம் அவர்கள் மீது எளிதில் பட வாய்ப்புள்ளது. அதனால் அவர்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய கிளப்புகளுக்கு விளையாடும் வாய்ப்பும் எளிதில் கிடைக்கும். இதுமட்டுமின்றி அனைத்து அணிகளிலும் வெளிநாட்டவர்களே பயிற்சியாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அவ்வணிகள் அகாடெமிகள் அமைக்கும் பட்சத்தில் அது இளம் வீரர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வாய்ப்பாய் அமையும்.

அடுத்த ஆண்டு ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. அந்தத் தொடர் வெற்றிகரமாக நடக்கும் பட்சத்தில் 2019ல் நடக்கவுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையையும் நடத்துவதற்கு இந்தியா பரிசீலனை செய்யவுள்ளது. இந்தியாவில் கால்பந்துக்கான வரவேற்பு அதிகரிக்கும் இவ்வேளையில் இளம் வீரர்களை ஊக்குவிப்பது 2019 உலகக்கோப்பையில் இந்தியா ஒரு வலுவான அணியை களமிறக்க உதவும்.மேலும், அதன்மூலம் இந்தியாவிலும் ஒரு மெஸ்ஸியையோ, ரொனால்டோவையோ நாமும் அடையாளம் கண்டறிய முடியும். இந்த இரு சந்தன்களைப் போல எத்தனையோ இளம் கால்கள் கால்பந்தில் வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கால்களுக்குத் தகுதியான மரியாதை செய்வது அவசியம். அதுவே நம் தேசத்துக்கு ஒருநாள் மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுக்கொடுக்கும். சச்சின், ஆனந்த், சானியாவுக்கு அடுத்து ஒரு இந்திய மெஸ்ஸி உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை!

- மு.பிரதீப் கிருஷ்ணா
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ