Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்படித்தான் நடந்தது ஆஸியின் உலக சாதனை (விளக்கப்படம் இணைப்பு)

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டெஸ்ட் தொடரை இலங்கையும், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் வென்ற நிலையில். முதல் டி20 போட்டி நேற்று இலங்கையில் உள்ள பல்லீகல் மைதானத்தில் நடந்தது .

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா. யாருமே எதிர்பார்க்காத வகையில் வார்னருடன் கிளென் மேக்ஸ்வேல் களமிறங்கினார். ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. பத்து ரன்களுக்கு குறையாமல் ரன் ரேட் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆஸி அணி 20 ஓவர்கள் விளையாடியதில் வெறும் மூன்று ஓவர்களில் மட்டும் தான் பத்து ரன்களுக்கு குறைவாக எடுத்தது. அதே சமயம் ஒரே ஓவரில் மட்டுமே 20 ரன்களுக்கு மேல் குவித்தது. 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது. நேற்று நடந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் , இதற்கு முன்னர் டி 20 போட்டியில் அதிக ரன்கள் (260/6) எடுத்திருந்தது இலங்கை அணி தான். 2007ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக இச்சாதனையை நிகழ்த்தியிருந்தது. தற்போது இலங்கை அணிக்கு எதிராகவே விளையாடி இலங்கை அணியின் சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்திருக்கிறது ஆஸ்திரேலியா.பதற்றமோ, அவசரமோ இல்லாமல் தெளிவாக திட்டமிட்டு விளையாடியதால் தான் ஆஸ்திரேலியா அணியால் இப்படியொரு சாதனையை படைக்க முடிந்தது. இதையடுத்து இமாலய இலக்கை விரட்ட ஆரம்பித்தது இலங்கை அணி. ஆனால் இலங்கை அணி எந்தவொரு தருணத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் தராமல் சரணடைந்ததை மேலே உள்ள விளக்கப்படத்தில் காணலாம். மிரட்டிய மேக்ஸ்வெல் :- மோசமான ஃபார்ம் எனக்காரணம் சொல்லி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேக்ஸ்வெல்லை சேர்க்க மறுத்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். இந்த நிலையில் வட்டியும் முதலுமாக அதிரடி ஆட்டம் ஆரம்பித்து கணக்கை துவங்கியிருக்கிறார் மேக்ஸ்வெல். ஒவ்வொரு பந்திலும் மாக்ஸ்வெல் எத்தனை ரன்களை குவித்தார் என்பதை கீழே உள்ள விளக்கப்படத்தில் கர்சரை நகர்த்தி தெரிந்துக் கொள்ளலாம்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மேக்ஸ்வெல் முதல் பத்து பந்துகளில் அடக்கியே வாசித்தார். ஆனால் அதன் பின்னர் எந்த பவுலராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் விளாசித் தள்ளினார் 27 பந்தில் அரைசதமும். 49 பந்தில் சதமும் அடித்தார். ஜீராவில் இருந்து 145 ரன்கள் வரையிலான மேக்ஸ்வெல்லின் பயணம் இங்கே :-

மேக்ஸ்வெல் விளையாடிய விதத்தை பார்க்கும் போது சர்வதேச போட்டிகள் ஒரு டி20 போட்டியில் அதிகபட்ச ரன்களை குவித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஆரோன் பிஞ்ச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் மேக்ஸ்வேல் விளையாடுவதற்கு போதிய பந்துகள் கிடைக்காததால் பிஞ்ச்சின் சாதனை (156) தப்பித்தது.

தனி ஒருவனாக 145 ரன்கள் மேக்ஸ்வெல் விளாசித்தள்ள, வார்னர், உஸ்மான் க்வாஜா, டிராவிஸ் ஹீட் போன்றோரும் தங்கள் பங்குக்கு வெளுத்தது வாங்கியதால் தான் ஆஸ்திரேலியாவால் இப்படியொரு இமாலய சாதனையை படைக்க முடிந்தது. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி, டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற இரண்டு பெருமையும் இரண்டு வார இடைவெளியில் இழந்துவிட்டது இலங்கை . பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை பார்க்கும்போது ஆஸ்திரேலியாவின் இந்த உலக சாதனை எத்தனை நாட்களுக்கு நீடிக்கப்போகிறது என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

- பு.விவேக் ஆனந்த்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ