Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரா ஒலிம்பிக்ஸ்: இந்த இந்தியர்களையும் நாம் ஆதரிப்போம்!

ஒலிம்பிக் நடந்த இடத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் நடைபெறும். அந்த வரிசையில் பிரேசிலின் ரியோ டீ ஜெனீரோவில், செப்டம்பர் 7 &18 வரை நடக்கும் பாரா ஒலிம்பிக்கில், 161 நாடுகளில் இருந்து 4,300 பேர் பங்கேற்கின்றனர். 

பலவீனமான தசை, மூட்டு குறைபாடு, இணையில்லாத கால்கள், குள்ளமானவர்கள், கை கால் நடுக்கமுள்ளவர்கள், பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி இல்லாதவர்கள், விபத்தில் உடல் உறுப்புகளை இழந்த மாற்றுத் திறனாளிகள் என, இந்தியாவில் இருந்து 19 பேர், 10 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். பாரா ஒலிம்பிக்கில் இந்தியர்கள் அதிகம் பங்கேற்பது இதுவே முதன்முறை. 

சமீபத்தில் முடிந்த ரியோ ஒலிம்பக்கில், வரலாற்றிலேயே முதன்முறையாக 118 பேரை அனுப்பியது இந்தியா. அதில், பேட்மின்டனில் சிந்து, மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் மட்டுமே பதக்கம் வென்றனர். இந்த ஏமாற்றத்தை பாரா ஒலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகள் நிவர்த்தி செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 11வது முறையாக இதில் கலந்து கொள்ளும் இந்தியா இதுவரை, 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது. 

இந்தியாவில் இருந்து 19 பேர் சென்றாலும், பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுபவர்கள் ஒரு சிலரே. அதைப் பற்றிய ஓர் அலசல். 

தேவேந்திர ஜஜாரியா (ஈட்டி எறிதல்):

ராஜஸ்தானை சேர்ந்தவர் தேவேந்திர ஜஜாரியா. எட்டு வயதில் மரத்தில் ஏறியபோது, கரன்ட் வயரைத் தொட்டதால் தூக்கி வீசப்பட்டார். சிகிச்சையின்போது இடது கையின் பாதி வெட்டி வீசப்பட்டது. ஆனால் தளரவில்லை. 1997ம் ஆண்டு பள்ளி அளவிலான போட்டியில் இவர் ஈட்டி எறிந்த விதம், துரோணாச்சாரியா விருது வென்ற ஆர்.டி.சிங்கை வெகுவாக கவர்ந்தது. அன்று முதல் அந்த சிறுவனை தன் கட்டுப்பாட்டில் எடுத்து வளர்த்து விட்டார் ஆர்.டி.சிங்.
ஏசியன் பாரா கேம்ஸ், ஐபிசி வேர்ல்ட் சாம்பியன்ஷிப் என அடுத்தடுத்து பங்கேற்ற போட்டிகளில் பதக்கம் வென்ற ஜஜாரியா 2004 ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் அள்ளினார். இந்த முறையும் அவர் பதக்கத்துடன்தான் நாடு திரும்புவார் என நம்புவோம். 

அமித் குமார் (கிளப் த்ரோ): 

ஹரியானாவை சேர்ந்த அமித் குமார் 22 வயதில் கார் விபத்தில் சிக்கினார். முதுகெலும்பு உடைந்து முற்றிலும் செயலற்று கிடந்தவர் ஒரு காலத்தில் தேசிய அளவிலான ஹாக்கி ப்ளேயர். ஆடுன கால் சும்மா இருக்குமா? இந்தியாவில் வீல்சேர் ரக்பியை பிரபலப்படுத்த வந்த அமெரிக்கர் ஜோனதன் சிங்வொர்த் உடன் அறிமுகம் ஏற்பட்ட பின், மீண்டும் ஸ்போர்ட்ஸுக்கு திரும்பினார். 
ஒருமுறை பிரேசில் அணியினருடன் வீல்சேர் போட்டியில் பங்கேற்றபோதுதான், உலகெங்கும் இத்தனை மாற்றுத்திறனாளி வீரர்கள் இருக்கிறார்களா என வியந்தார். 

அன்று முதல் இடுப்புக்கு மேலே உள்ள பகுதியை வலுவாக்கி வீல் சேரில் இருந்தபடி, வட்டு எறிதல், கிளப் த்ரோ போட்டிகளில் தீவிர பயிற்சி எடுத்தார். விளைவு. ஏசியன் பாரா கேம்ஸ், அத்லெடிக்ஸ் வேர்ல்ட் சாம்பியன்ஷிப், பிரெஞ்ச் ஓபன் அத்லெடிக் சாம்பியன்ஷிப் என பங்கேற்ற அனைத்து தொடரிலும் பதக்கம் தட்டினார். அர்ஜூனா விருது இவரைத் தேடி வந்தது. சமீபத்தில் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் அமித், நிச்சயம் பாரா ஒலிம்பிக்கிலும் பெருமை சேர்ப்பார் என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை. 

மாரியப்பன் 

சேலத்தில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்தான் மாரியப்பன். அப்போது அவன் வயது ஐந்து. அந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது. ‘டிரைவர் குடிபோதையில் இருந்ததாக சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன். மகனின் கால் போய் விட்டதே’ என்று சொல்லும் மாரியப்பனின் தாய் காய்கறி விற்றுப் பிழைப்பவர். மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை இன்னுமும் கட்டி வருகிறார்.


கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். ‘ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர்’ என்று சொல்லும் அந்த இளைஞனின் வயது 20.

2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனை சார்ஜ் எடுத்துக் கொண்டார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்தார்.

தோகாவில் கடந்த ஆண்டு நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற சாம் கிரீவ் 1.81 மீ., தாண்டி தங்கம் வென்றார். ‘என்னால் இந்த இலக்கை நிச்சயம் எட்ட முடியும். கண்டிப்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’ என கான்ஃபிடன்டாக ரியோ சென்றிருக்கிறார் மாரியப்பன். பார்க்கலாம்.இந்தியா சார்பில் பங்கேற்பவர்கள்:

1. அமித் குமார் சரோகா ( கிளப் த்ரோ)
2. தேவேந்திர ஜஜாரியா (ஈட்டி எறிதல்)
3. மாரியப்பன் தங்கவேலு ( உயரம் தாண்டுதல்)
4. சுந்தர் சிங் குர்ஜார் (ஈட்டி எறிதல்)
5. தரம்வீர் (கிளப் த்ரோ)
6. தீபக் மாலிக் (குண்டு எறிதல்)
7. கரம்ஜோதி தலால் (வட்டு எறிதல்)
8. அங்குர் தமா (1500 மீ., ஓட்டம்)
9. பாஷா ஃபர்மன் (பவர்லிஃப்டிங்)
10. ரிங்கு & (ஈட்டி எறிதல்)
11. நரேந்தர் ரன்பீர் (ஈட்டி எறிதல்) 
12. சுயாஷ் நாராயண் ஜாதவ் (நீச்சல்)
13. விரேந்தர் தன்கர் (குண்டு எறிதல், ஈட்டி எறிதல்)
14. ராம்பால் சாகர் (உயரம் தாண்டுதல்)
15. சந்தீப் (ஈட்டி எறிதல்)
16. சரத் குமார் (உயரம் தாண்டுதல்)
17. பூஜா ராணி (வில்வித்தை)
18. நரேஷ் குமார் சர்மா (துப்பாக்கி சுடுதல்)
19. வருண் சிங் (உயரம் தாண்டுதல்)


ஒளிபரப்பு இல்லை: 
ரியோ ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வாங்கியிருந்தது. ஆனால், பாரா ஒலிம்பிக்கை ஒளிபரப்பும் உரிமைய தூர்தர்சன் மட்டுமல்லாது எந்த தனியார் சேனலும் வாங்க முன்வரவில்லை. ‘இது அதிர்ச்சி அளிக்கிறது. ஈரான், ஆப்ரிக்காவில் உள்ள சிறிய நாடுகள் கூட ஒளிபரப்பும்போது, இந்தியாவால் ஏன் முடியாது’ என கேள்வி எழுப்பி உள்ளார் பாரா ஒலிம்பிக் வீரர் பிரதீப் ராஜ்.

-தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ