Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய அணி அறிவிப்பு! கவனம் கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்? #IndVsNZ

 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மூன்று டெஸ்ட் போட்டியும், ஐந்து ஒருதின போட்டியும் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி  கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான அணி  மும்பையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டது. 

 

கம்பீர் புறக்கணிப்பு : -

ஐ.பி.எல் தொடரிலும் சரி, துலீப் டிராபியிலும் சரி கவுதம் கம்பீர் செம ஃபார்மில்  விளையாடி வருகிறார். கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் 77,90.59,94 ரன்களை  எடுத்துள்ளார். டெஸ்ட் அணியை பொறுத்தவரை வலுவான இடது கை பேட்ஸ்மேன் இல்லை. தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான் தொடர்ந்து நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கம்பீர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால் கடைசியாக ஒரு வாய்ப்பு கம்பீருக்கு கொடுக்கப்படும் என நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தார்கள். ஆனால் டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்ட அணியில் கம்பீருக்கு இடமில்லை. 2007 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை இரண்டு இறுதிப்போட்டியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் விளாசியவர் கம்பீர் தான். அவருக்கு உரிய  மரியாதை கிடைக்காதோ என ஏங்கி வருகின்றனர் கம்பீர் ரசிகர்கள். 

 

ஸ்டூவர்ட் பின்னி, ஷர்துல் தாகூர் நீக்கம் : -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இருந்த ஸ்டூவர்ட் பின்னி,  ஷர்துல் தாகூர் இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான  டி-20 போட்டியில் ஒரே ஓவரில் 32 ரன்களை பின்னி  விட்டுக்கொடுத்திருந்தது ரசிகர்களை வெறுப்படையச் செய்தது குறிப்பிடத்தக்கது. பின்னியின் மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

 

ரோஹித் ஷர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு : -

ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய இன்னிங்ஸ் விளையாட வில்லை. நடுவரிசையில் களமிறங்கும் ரோஹித்தால் இந்திய அணிக்கு பெரிய பலன்கள் இல்லை என்றாலும் மீண்டும் ரோஹித்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி ரோஹித் ஷர்மா மீது  நம்பிக்கை வைத்திருக்கிறார். ரோஹித் ஷர்மா இந்த தொடரில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

 

 

பாசிட்டிவ் ஓப்பனிங் : -

முரளிவிஜய், லோகேஷ் ராகுல் இருவரும் சீரான தொடக்கம் தருகின்றனர். தவிர  தொடக்க பேட்ஸ்மேன்களுக்கான போட்டியில் 

ஷிகர் தவானும் இருக்கிறார். இந்திய மண்ணில் தவான் இதுவரை  சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பதால் தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என்று கோஹ்லி திணறக்கூடும். மூன்று பேட்ஸ்மேன்கள் போட்டிக்கு இருப்பதால் இந்திய அணிக்கு இது பாசிட்டிவான அம்சம்.

வலுவான நடுவரிசை : -

தற்போது நடந்து வரும் துலீப் டிராபி போட்டியில்  ஒரே இன்னிங்ஸில்  256 ரன்கள் குவித்து 'நான் பார்ம்ல தான் இருக்கேன்' எனச் சொல்லியிருக்கிறார் புஜாரா.  இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்குவதில் புஜாரா பொருத்தமானவர். கோஹ்லியும், ரஹானேவும் ஏற்கனவே செம ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே நடுவரிசை சற்று பலமாக இருக்கிறது.

நிலையற்ற கீழ்  நடுவரிசை : -

ஐந்து பவுலர்கள் வேண்டும்  என எப்போதும் அடம் பிடிப்பவர் விராட் கோஹ்லி. விக்கெட் கீப்பர் சாஹாவைத் தவிர ஐந்து பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே அணியில் இடம் உண்டு. இது சில சமயங்களில் இந்தியாவுக்கும் பாஸிட்டிவாகவும், பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. முரளி விஜய் தவிர ஓரளவு பந்துவீசக்கூடிய ஆல்ரவுண்டர் இல்லை என்பதால் ஆறாம் நிலை சிக்கலுக்குறியதாகவே உள்ளது. ரோஹித் ஷர்மா இந்த நிலையில் இறங்கி இதுவே நீண்ட இன்னிங்ஸ் விளையாடியது கிடையாது. அஷ்வினும், சாஹாவும் ஆறாம் நிலையில் மாறி மாறி விளையாடி வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்த இருவரும் நன்றாக ஆடினாலும் கூட, இன்னமும் ஆறு, ஏழு ஆகிய இடங்களில் நிலையற்றத் தன்மையே  நீடித்து வருகிறது.

சுழல் பலம் :-

இந்தியாவில்  சூழலுக்கு சாதகமான பிட்ச் இருக்கும் என்பதால், கோஹ்லி மூன்று சூழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அஷ்வின், ஜடேஜா, மிஸ்ரா மூவருக்கும் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இம்மூவரும் தலா முப்பது ரன்களை சேர்க்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் என்பதால் பவுலிங் ஆல்ரவுண்டராக பணியாற்ற  வேண்டிய கடமை இவர்களுக்கு உண்டு. 

கச்சிதமான  வேகப்பந்து தேர்வு :-

இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே இடம் என கோஹ்லி முடிவு செய்தால் உமேஷ் யாதவ்வுக்குஅணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இஷாந்த் ஷர்மா அயல் மண்ணில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். இந்திய மண்ணில் இதுவரை பெரிதாக சாதித்தது இல்லை. இதனால் இஷாந்துக்கு மூன்று போட்டியிலும் வாய்ப்பு கிடைக்குமா எனச்  சொல்ல முடியாது. முகமது ஷமியும், புவனேஷ்வர் குமாரும் இந்திய மண்ணில் முழு ஃபார்முடன் பந்துவீசினால் விக்கெட்டுகளை அள்ளலாம்.

நியூசிலாந்து எப்படி ? 

முன்னெப்போதையும்  விட நியூசிலாந்து அணி பலமிக்கதாக மாறி வருகிறது. சுழலுக்கு சாதகமான மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவை நியூஸி வென்றதை மறக்க முடியாது. நியூசிஸியின் இரண்டு  முக்கிய சுழற்பந்து வீச்சளர்களான சோதி, மிட்சேல் சான்டனர்  இருவரும் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி தருவார்கள். பதினைந்து பேர் கொண்ட அணியில் கோஹ்லி எப்படி பதினோரு பேரை தேர்வு செய்யப்போகிறார் என்பதில் தான்  வெற்றியின்  ரகசியம் அடங்கியிருக்கிறது. ஆனால் வழக்கமான ஒருபக்க சார்பு தொடர் போலல்லாமல் வில்லியம்சன் கேப்டன்சியில் இந்தியாவுக்கு, நியூசிலாந்து அணி கடும் சவால் தரும் என எதிர்ப்பார்க்கலாம் .

- பு.விவேக் ஆனந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ