Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“பாராலிம்பிக் - ஒலிம்பிக்: பரிசில் வித்தியாசம் களைவோம்!” - சிங்கப்பூர் பிரதமரின் ஒப்புதல்

கடந்த ஞாயிறன்று இரவு பராலிம்பிக்கில் சிங்கப்பூருக்காக முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த யிப் பின் ஜியோ, இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். சிங்கப்பூருக்காக ரியோ பராலிம்பிக்கில் 100 மீட்டர் பிரேக்ஸ்டோக் நீச்சலில் வெண்கலப் பதக்கம் வென்ற தெரசா கோ, ஜியோவின் மார்பில் முகம் புதைத்து அழுவகிறார்.  ''இந்த உலகம் கதறி அழும் அழகற்ற முகத்தை பார்க்க விரும்பாது... ஆனால் நீ அவர்களை பெருமையடைய வைத்துள்ளாய். நாம் சந்தித்த கஷ்டங்களை இந்த உலகம் அறிந்து கொள்ளாது. ஆனால் நீ மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறாய் '' என தெரசா கோவின் வெற்றியை பாராட்டி, யிப் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தைப் பார்த்த சிங்கப்பூர் மக்கள் உருகித்தான் போனார்கள்.ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாராலிம்பிக் வீரர்களுக்கு அளிக்கப்படவில்லை  என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக யிப்பின் பதிவு இருந்தது.

பொதுவாகவே எந்த நாடாக இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாராலிம்பிக்கிற்கு அளிப்பதில்லை என்ற குறை இருக்கத்தான் செய்கிறது. ரியோ ஒலிம்பிக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜோசப் ஸ்கூல்லிங், 100 மீட்டர் நீச்சலில் அமெரிக்க ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸை வீழ்த்தி தங்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே சிங்கப்பூர் வென்ற முதல் தங்கப்பத்தம் இது. ஆனால், சிங்கப்பூர் ரெகுலர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு முன்னரே, 2008ம் ஆண்டு பெய்ஜிங் பராலிம்பிக்கில் அந்த நாட்டுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர்தான் இந்த யிப்.  ரியோ பாராலிம்பிக்கிலும் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் யிப் தங்கம் வென்றிருக்கிறார். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று விட்டு தாய் நாடு வந்த யிப்பை வரவேற்க கூட ஆள் இல்லையாம்.

அதேவேளையில், ரியோ ஒலிம்பிக்கில் மைக்கேல் பெல்ப்சை தோற்கடித்த ஜோசப் ஸ்கூல்லிங், தங்கப் பதக்கத்துடன் சிங்கப்பூர் திரும்பிய போது, சாங்கியில் இருந்து திறந்த வெளிப் பேருந்தில் பல மணி நேரம் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். சாலைகளின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள்  ஜோசப் ஸகூல்லிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர். பல தொழில் நிறுவனங்கள் ஜோசப்பிற்கு சலுகைகளை வாரி இறைத்தன. ஏர் ஏசியா நிறுவனம் ஆயுளுக்கும் தங்கள் விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகையை வழங்கியுள்ளது. அத்துடன், சிங்கப்பூர் அரசு இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி பரிசு வழங்கியுள்ளது.  பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற யிப்புக்கு கிடைத்தது என்னவோ இந்திய மதிப்பில்  ரூ.79 லட்சம்தான்.

இந்த நிலையில்தான் இரண்டாவது முறையாகவும் சிங்கப்பூருக்கு தங்கம் வென்றிருக்கிறார் யிப். பாராலிம்பிக் வீரர்களிடம் அரசும் மக்களும் காட்டும் முரண்பாடு யிப்பை, கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டது. அந்த ஆதங்கத்தில்தான் சக வீராங்கனையின் புகைப்படத்தை பதிவிட்டு விட்டார். ஆனால்,  யிப்பின் இந்த பதிவு சிங்கப்பூர் மக்களை உலுக்கி எடுத்து விட்டது. பதிவை பார்த்து அதிர்ந்து போன சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,'' கடுமையான உழைப்பு அர்ப்பணிப்பு உணர்வுக்கு கிடைத்த வெற்றி இது. நாங்கள் பரிசுத் தொகையில் உள்ள முரண்பாடுகளை களைய முயற்சிக்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ஃபேஸ்புக் பதிவில் ஏராளமான சிங்கப்பூர்வாசிகள் கமாண்டுகளை பதிவிட்டுள்ளனர். ''ஜோசப் ஸ்கூலிங் போலவே யிப் பெருமை சேர்த்துள்ளார். அவரது உடல் குறைபாட்டையும் தாண்டி தங்கம் வென்றுக் காட்டியுள்ளார். ஸ்கூல்லிங்கின் சாதனைக்கு சற்றும் குறைந்தது அல்ல யிப்பின் சாதனை. ஸ்கூல்லிங்கிற்கு கொடுக்கப்பட்டது போலவே பரிசுத் தொகை யிப்புக்கும் அளிக்கப்பட வேண்டும் '' என ஒரு கமாண்ட் சொல்கிறது.

''மிஸ்டர். பிரதமர் வாயில் சொல்வதைக் காட்டிலும் செயல்பாடுதான் கவரும். யிப்பும், கோவும் திறந்த வெளி பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட வேண்டும்'' என்கிறது மற்றொரு கமாண்ட்.
 
யிப்பின் இன்ஸ்டா பதிவையடுத்து சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களும் தங்கள் தவறை உணர்ந்து கொண்டன. யிப்பும் கோவும் தாய்நாடு திரும்புகையில், சிறப்பான வரவேற்பளிக்கப்படும் என்றும் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவர்களை கவுரவிக்கவும் முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்காகத் திட்டமிட்டு வருவதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகளவில் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி யிப் கூறுகையில், '' மக்கள் நாங்கள் படைக்கும் சாதனைகளை சாதனைகளாகவே  எடுத்துக் கொள்வதில்லை. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களைப் போலவே நாங்களும் கடினமாக உழைக்கிறோம். பயிற்சி எடுக்கிறோம்... வெற்றி பெறுகிறோம். ஜோசப் ஸ்கூல்லிங் சிங்கப்பூருக்கு தங்கம் வென்று எப்படி பெருமை சேர்த்தாரோ... அதேப் போலவே நாங்களும் பெருமை சேர்த்துள்ளோம். ஸ்கூல்லிங் சாதனைக்கு எங்கள் சாதனை எந்தவிதத்தில் குறைந்து விட்டது'' என கேள்வி எழுப்புகிறார்.

அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.

 

-எம்.குமரேசன்

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ