Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல்

‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL  தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. 

முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனிக்கிழமை சென்னை சேப்பாக் மைதானத்தில் நடக்கவுள்ள மற்றொரு அரையிறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் & கோவை கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை ஃபைனல் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் இந்த டிஎன்பிஎல் தொடரில், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகள் பற்றிய ஓர் அலசல். 

திண்டுக்கல் டிராகன்ஸ் #IdhuNerupuda @DindigulDragons

ஓபனர் ஜெகதீசன் திண்டுக்கல் அணியின் சொத்து. இதுவரை நான்கு அரைசதம் உள்பட 338 ரன்கள் (71, 44, 87, 8, 60, 10, 58) விளாசி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். அவருடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜா சில போட்டிகளில் ஒத்துழைத்தார். இவர்கள் தவிர்த்து மிடில் ஆர்டரில் சொல்லிக் கொள்ளும்படி யாரும் கவனம் ஈர்க்கவில்லை. தூத்துக்குடிக்கு எதிராக எம்.அஸ்வின் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய ஆல் ரவுண்டர் ஆர்.அஸ்வின் வருகைக்குப் பின் அணி உளவியல் ரீதியாக உற்சாகம் அடைந்தது. சேப்பாக் அணிக்கு எதிராக ஆர்.அஸ்வின் தனி ஆளாக போராடி 23 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். ஆர்.அஸ்வின், எம்.அஸ்வின் தவிர்த்து குரு கேடர்நாத், சன்னி குமார் சிங், நடராஜன், சேப்பாக் அணிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்திய எம்.எஸ்.சஞ்சய் ஆகியோர் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி - டூட்டி பேட்ரியாட்ஸ்  #NammaOoru  #TutiPatriots @TUTI_PATRIOTS

தினேஷ் கார்த்திக், கவுசிக் காந்தி, அஸ்வின் கிறிஸ்ட், எல்.பாலாஜி என நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியது டூட்டி பேட்ரியாட்ஸ் என்றழைக்கப்படும் தூத்துக்குடி அணி. சேப்பாக்கம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் அமர்க்களமாக 67 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட, அதில் இருந்து வெற்றி ரகசியத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது தூத்துக்குடி அணி. ஆரம்பத்தில் நிதானமாக செயல்பட்ட கவுசிக் காந்தி கடைசி இரண்டு போட்டிகளில் 80, 86 ரன்கள் விளாசி, எதிரணியை மிரள வைக்கிறார். அதிலும், மதுரைக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட சதம் அடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தேவையான நேரத்தில் அவர் விஸ்வரூபம் எடுத்தது, தினேஷ் கார்த்திக் இல்லாத குறையைப் போக்கி உள்ளது. இவர்களுடன் மாருதி ராகவ், வாஷிங்டன் சுந்தர் இருவரும் அவ்வப்போது கைகொடுக்கின்றனர். பவுலிங்கைப் பொருத்தவரை பாலாஜி, ஆஷிக் சீனிவாஸ், கணேச மூர்த்தி, ஆகாஷ் சும்ரா, அஸ்வின் கிறிஸ்ட், வாஷிங்டன் சுந்தர் என ஒரு பட்டாளமே உள்ளது.


சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  #PattaiyaKelappu @supergillies

சேப்பாக்கம் அணியைப் பொருத்தவரை ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கோபிநாத், தலைவன் சற்குணம் இருவரில் ஒருவர் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல ஓபனிங் அமைத்துக் கொடுத்து வருகின்றனர். இருவரும் தலா இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளனர். மிடில் ஆர்டரில் யோ மகேஷ், சத்யமூர்த்தி சரவணன், கேப்டன் ஆர்.சதிஷ், ஆல் ரவுண்டர் ஆன்டனி தாஸ் ஆகியோரில் ஒருவர் தனி ஆளாக ஆட்டத்தை மாற்றி அமைக்கும் திறமையுடையவர்கள். சேப்பாக்கம் அணி முதலில் பேட் செய்த நான்கு போட்டிகளில் 150க்கும் (154, 195,172, 178) மேல் குவித்துள்ளது. இதுவே அந்த அணியின் வலுவான பேட்டிங் வரிசைக்கு சான்று. பந்துவீச்சைப் பொருத்தவரை ஆர்.சதீஷ், அலெக்ஸாண்டர், ஆன்டனி தாஸ், தமிழ்குமரன், சாய் கிஷோர் தங்கள் பணியை கச்சிதமாக முடித்து வருகின்றனர். 

கோவை கிங்ஸ் #VeraLevelLaVarom @LycaKovaiKings


முதல் ஆட்டத்தில் முரளி விஜய் 24 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அனிருத் சீதா ராம், சூர்ய பிரகாஷ் ஆரம்பத்தில் சுமாரான ஓபனிங் கொடுத்தனர். கேப்டன் சையத் முகமது இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரும் வலுவாக இல்லை. மதுரைக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே டாப் ஆர்டரில் இருந்து மிடில் ஆர்டர் வரை, எல்லாரும் கணிசமாக ரன் குவித்திருந்தனர். 

முதலில் பேட் செய்த அந்த போட்டியில்தான் கோவை அணி அதிகபட்சமாக 199 ரன்கள்  குவித்திருந்தது. மற்ற எந்த போட்டியிலும் 150 ரன்களைத் தாண்டவில்லை. சேஸிங்கின்போது  159, 170 ரன்களை எட்ட முடியாமல் இரண்டு முறை வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. எனவே, வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ள சேப்பாக் அணி முதலில் பேட் செய்து, 150 ரன்களுக்கு மேல் குவிக்கும் பட்சத்தில் கோவை அணியின் பாடு திண்டாட்டமே. பந்துவீச்சு வரிசையில் ஹரிஷ்குமார், சிவகுமார், விக்னேஷ், முகமது ஆகியோர் சராசரியாக விக்கெட் வீழ்த்தி வருவது ஆறுதல். 

இவங்கதான் ‘டாப்’

ஏழு போட்டிகளின் முடிவில் திண்டுக்கல் அணியின் ஜெகதீசன் 338 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். தூத்துக்குடி அணியின் ஓபனர் கவுசிக் காந்தி 298 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்த தொடரில் முதல் சதம் அடித்த திருவள்ளூர் கேப்டன் பாபா அபராஜித் 293 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பவுலிங் வரிசையில் திண்டுக்கல் வீரர் முருகன் அஸ்வின் (12 விக்கெட்) முதலிடத்திலும், சேப்பாக் அணியின் ஆன்டனி தாஸ் (11), காரைக்குடி காளை அணியின் கணபதி சந்திரசேகர் (11) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

-தா.ரமேஷ் 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ