Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச கத்திச் சண்டையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் டெரில்! #FencingGame

நம் நாட்டில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான். ஆனால் சென்னையைச் சேர்ந்த டெரில், ஃபென்சிங் (கத்திச் சண்டை) விளையாட்டில் அசத்தி வருகிறார். சமீபத்தில், ஜோர்டான் நாட்டில் நடந்த சர்வதேச ஃபென்சிங் போட்டியில் ஒன்றல்ல... இரண்டு வென்கலப் பதக்கங்களை வென்று, சாதனைப் படைத்துள்ளார்.

சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்துவருகிறார் டெரில். சென்றமாதம் ஜோர்டானில், மூன்று நாட்கள் ஃபென்சிங் போட்டிகள் நடைப்பெற்றது. அதில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்டே ஒரே வீரர் டெரில் மட்டுமே.

இந்தப் போட்டியில் ஐக்கிய சவுதி அரேபியா, ஈராக், ஈரான், கத்தார், ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து சுமார் 180 வீரர்கள் கலந்துகொண்டனர். டெரில் Foil பிரிவில் அவர் வயது உட்பட்ட இரு பிரிவுகளிலும் போட்டியிட்டார். இந்திய அளவில். ஒரு வீரர் இரண்டு போட்டிகளிலும் பதகங்களை வென்றதும் இதுவே முதல் முறை. வியக்க வைக்கும் சாதனைகளைச் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

சர்வதேசப் போட்டிகளில் டெரில் வெற்றிகளைக் குவிப்பதற்கு பயிற்சியாளர் நாகசுப்ரமணியம் முக்கியக் காரணம். சென்னை நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியாளராக இருக்கும் நாகசுப்ரமணியத்திடம் மூன்று வருடங்களாக பயிற்சிப் பெற்றுவருகிறார் டெரில்.

பயிற்சியாளரின் கடுமையான பயிற்சி இருந்தாலும் பார்ப்பதற்கே அச்சத்தைத் தரும் இந்த விளையாட்டில் பங்கேற்க தன் மகனை அனுப்பவதற்கே தனி துணிச்சல் வேண்டும். ஆனால் டெரிலின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கும் அவரது தந்தை கேப்ரியல், ''டெரில் சிறுவயதில், பிளாஸ்டிக் கத்தியைச் சுழற்றிகொண்டே, 'வாங்க ராணியைக் காப்பாற்றலாம்' எனக் கட்டில்மீது ஏறி சண்டைப் போட்டுகொண்டிருப்பான். இவனின் சுறுசுறுப்பைப் பார்த்து, ஏதாவது விளையாட்டில் சேர்க்கலாமே என்று, முதலில் பாஸ்கெட் பால் விளையாட்டில் சேர்த்தேன், அதில் அவனுக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டதும் நீச்சல், ஸ்கேட்டிங் என மாற்றி கொண்டே இருந்தாலும் அவன் எதிலுமே ஆர்வம் காட்டவில்லை. ஆனால் எப்போதுமே ஃபிளாஸ்டிக் கத்தி விளையாட்டை விடவே யில்லை.

ஒருநாள், நேரு ஸ்டேடியத்தில் ஃபென்ஸிங் கற்றுதருகிறார்கள் என்று கேள்விப்பட்டு, அங்கு அழைத்துச் சென்றேன். ஃபென்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களைப் பார்த்த டெரிலின் கண்களில் புதுவித ஆர்வம் பொங்க, 'அப்பா என்னையும் இதில் சேர்த்துவிடுங்கள்' என்று தானாகவே விரும்பிக்கேட்டு சேர்ந்தான் அந்த ஆர்வமே இந்த வெற்றிகளைக் கொண்டு வந்திருக்கிறது. அரசு உதவியும் ஸ்பான்சரும் கிடைத்தால் டெரில் எதிர்காலத்தில் மேலும் வெற்றிகளைப் பெற உதவியாக இருக்கும்" என்கிறார்.

விளையாட்டு பற்றியே அதிகநேரம் சிந்தித்துகொண்டிருக்கும் டெரிலின் படிப்பு ஸ்டேட்டஸ் என்னவாக இருக்கும். நாம் கேட்டு முடிப்பதற்குள்ளேயே டெரில், ''இந்த விளையாட்டில் சேர்ந்ததில் இருந்து கவனத்தை ஓர் இடத்தில் குவிப்பது எளிதானது. அதுவே படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படுத்தி விட்டது. எனக்கு இரண்டு லட்சியங்கள் இருக்கு. ஒன்று டாக்டராவது. மற்றொன்று ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது" என்று மன உறுதியோடு கூறுகிறார் டெரில்.

டெரிலின் இரட்டை கனவுகள் நனவாகட்டும்.


-என்.மல்லிகார்ஜுனா,
படங்கள்: ஆ.முத்துக்குமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ