Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி வில்லியர்ஸையே மிரட்டிய பவுலர்!

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால் எதிரணிக்கு அடி வயிறு கலங்கும். ‘டிரைவ்’ ஆடுவார் என ஃபீல்ட் செட் செய்தால் ஸ்கூப் ஆடி, ஃபீல்டர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழப்புவார். என்ன ரகம் என வரையறுக்க இயலாத 360 டிகிரி பேட்ஸ்மேன். 

எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் ஒரு பவுலர் சிம்ம சொப்பனமாக இருப்பார் அல்லவா? அந்த வரிசையில் டி வில்லியர்ஸை அச்சுறுத்திய பவுலர் யார் என அவரது சுயசரிதை புத்தகமான, ‘ஏபி: தி ஆட்டோபயாகிரபி’யை ஆச்சரியத்துடன் புரட்டினால், இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு பவுலரின் பெயரைச் சொல்லி பிரம்மிப்பூட்டுகிறார். தவிர, இணையத்தில் உலவுவது போல, ‘நான் மல்டி ஸ்போர்ட்ஸ் கில்லி அல்ல’ என, ட்விஸ்ட் வைக்கிறார். 

யார் அந்த பவுலர்? 

‘நான் சந்தித்ததில் பெஸ்ட் பவுலர் யார் எனக் கேட்டால், உடனே என் நினைவுக்கு வரும் பெயர் ஜெரிட் டீஸ்ட். விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால், பொதுவாக இந்த கேள்விக்கு ஊடகங்களிடம் பதில் சொல்வது இல்லை. ஆனால், அதுதான் உண்மை. ஜெரிட் டீஸ்ட்தான் எப்போதுமே எனக்கு அச்சுறுத்தலாக இருந்தார். நான் சந்தித்தில் பெஸ்ட் பவுலர் அவர்தான்’ என டி வில்லியர்ஸ் சுயசரிதையில் மனம் திறந்துள்ளார்.

ஜெரிட் டீஸ்ட், டி வில்லியர்ஸை விட 11 வயது மூத்தவர். இடது கை வேகப்பந்து வீச்சாளர். 1999ல் தென் ஆப்ரிக்காவில் உள்ள நார்தெர்ன்ஸ் என்ற முதல்தர கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். வேடிக்கை என்னவெனில், அவர் ஒரேயொரு முதல் தர போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். அது, இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஒரு காலத்தில் தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது விளையாடிய நடால் அணிக்கு எதிராக. அந்த போட்டியில் ஜெரிட் வீழ்த்தியது 3 விக்கெட்டுகள். 

‘அப்போது ஜெரிட் டீஸ்ட் வயது 22. என் வயது 11. அப்போது என் சகோதரர்கள் ஜான் மற்றும் வெசல்ஸ், முன்னாள் தென்  ஆப்ரிக்க வீரர் மார்டின் வேன் ஜார்ஸ்வெல்ட் ஆகியோருடன், 14 யார்டு பிட்ச்சில் கிரிக்கெட் விளையாடுவேன். ஜெரிட் டீஸ்ட் நல்ல உயரம். அபாரமான உடற்கட்டு உடையவர். நான் வார்ம்பாத்ஸ் பிரைமரி பள்ளியில் வெறும் கால்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜெரிட் டீஸ்ட், ஜோகன்னஸ்பர்கில் உள்ள கிளப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அவர் பந்து எப்போதுமே மிரட்டும் வகையில் இருக்கும். அன்று அவர்களுடன் ஆடிய அந்த ஆட்டம்தான் என்னை பின்னாளில் சிறந்த கிரிக்கெட் வீரனாக மாற்றியது’ என்பது, டி வில்லியர்ஸ் கருத்து.

நான் கில்லி இல்லை: 

டி வில்லியர்ஸின் திறமையைப் பற்றிச் சொல்லும்போது அவர் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, டென்னிஸ், தடகளம், நீச்சல், பேட்மின்டன், ரக்பி, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் விளையாட்டுகளில் மன்னன் என்ற தகவல் உலவும். ஆனால், ‘நான் அந்த விளையாட்டுகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை’ என்கிற ரீதியில் ‘சுயசரிதையில்’ அடக்கமாக பதிலளித்துள்ளார் டி வில்லியர்ஸ். 

‘‘சின்ன வயதில் நான் பல விளையாட்டுகளில் ஜொலித்ததாக இணையத்தில் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. மக்கள் இதை உண்மை என நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. 

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒரு வருடம் ஹாக்கி விளையாடினேன். ஆனால், தேசிய ஹாக்கி அணியில் இடம்பெறவில்லை. ஒருமுறை கூட அந்த இடத்தை என்னால் நெருங்க முடியவில்லை. தென் ஆப்ரிக்காவில் பள்ளிகளில் வார்ம் அப் செய்வதற்காக கால்பந்து விளையாட வேண்டும் என்பது கட்டாயம். அப்படித்தான் இடைவேளையின்போது கால்பந்து விளையாடினேன். மற்றபடி அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் விளையாடியதில்லை.

அதேபோல, ரக்பியிலும் எந்த மட்டத்திலும் தென் ஆப்ரிக்க அணியில் இடம்பெறவில்லை. ரக்பி அணிக்கு கேப்டனாகவும் இருந்ததில்லை. பள்ளியில் பேட்மின்டன் விளையாடியதே இல்லை. என் நினைவு சரியாக இருந்தால், என் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே பேட்மின்டன் விளையாடி உள்ளேன். அதுவும் கூட, மார்க் பவுச்சருக்கு எதிரான வேடிக்கையான கேம்தானே தவிர, சீரியஸ் கேம் அல்ல. 

ஆனால், கோல்ஃப் கொஞ்சம் தெரியும். சின்ன வயதில் ரக்பி, டென்னிஸ் விளையாடி இருக்கிறேன். கிரிக்கெட்டை எப்போதுமே அனுபவித்து விளையாடி வருகிறேன். அவ்வளவே’’ என விரிகிறது அந்தப் பக்கங்கள்.

நிறைகுடம் தளும்பாது!

- தா.ரமேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ